



நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!
விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு, அதிவேக சூப்பர் கார் அனுபவத்துடன் இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் பிரம்மாண்டமாக வெளியானது.
கோயம்புத்தூர்: இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. பாரம்பரியம், புதுமை, ஆட்டோமொபைல் உலகம் மற்றும் சினிமா என அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு வித்தியாசமான திரைப்பட புரோமோஷன்களில் ஒன்றாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார். இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
ஜி.டி. மியூசியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய விண்டேஜ் கார்களில் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வருகை தர நிகழ்ச்சி தொடங்கியது. ஜி.டி. நாயுடுவின் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த அணிவகுப்பு அமைந்திருந்தது. இதனுடன், நவீன சொகுசு அதிவேக கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜி.டி. நாயுடுவின் காலத்தைத் தாண்டிய கண்டுபிடிப்புகளையும், இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் இணைக்கும் விதமாகவும் இது அமைந்தது.
மணிக்கு சுமார் 190 கிலோமீட்டர் வேகம் வரை சென்ற அதிநவீன சூப்பர் காரில் நடிகர் ஆர். மாதவன், முன்னணி ஊடகங்களின் பத்திரிகையாளர்களை கரி மோட்டார் ஸ்பீட்வேயை சுற்றி அழைத்துச் சென்றது நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்று. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த அதிவேக பயணம், ஜி.டி. நாயுடுவின் ஆட்டோமொபைல் மற்றும் பொறியியல் மீதான பேரார்வத்தை உணர்த்தும் வகையில் அமைந்தது. சூரியன் மறையும் மாலை நேரத்தில், சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டபோது, பார்வையாளர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர்.
கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் கொண்ட டிரைய்லர் பார்வையாளர்களின் உற்சாகத்துடன் அவர்களுக்கு திரையிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தின் நுணுக்கமான விவரங்கள் மற்றும் பிரம்மாண்டமான திரையனுபவத்துடன் கூடிய இந்த டிரெய்லர் ‘இந்தியாவின் எடிசன்’ என்று கொண்டாடப்பட்ட ஜி.டி. நாயுடுவின் விடாமுயற்சி, கண்டுபிடிப்பு ஆர்வம், தேசப்பற்று மற்றும் அவரது வரலாற்று சாதனைகளை கண்முன் காட்டியது. ஜி.டி. நாயுடுவாக ஆர். மாதவனின் தோற்றம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும், தந்தை பெரியார் மற்றும் அடால்ஃப் ஹிட்லர் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
ஆர். மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஜி.டி. நாயுடு ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அசாதாரண சாதனையாளர், அதைவிட மிக முக்கியமாக தேசபக்தி கொண்டவர். பல துறைகளில் அவரது பங்களிப்பு அளப்பரியது. ஆனால், அவரது ஆட்டோமொபைல் மீதான பேரார்வத்தை மட்டுமே நாம் கொண்டாடுகிறோம். அவரது வாழ்க்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அறியப்பட வேண்டியது அவசியம். அதுவே இந்த திரைப்படத்தை உருவாக்க எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது” என்றார்.
நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்டதாவது, “பள்ளி நாட்களில் ஜி.டி. மியூசியத்திற்கு வந்திருக்கிறேன். அப்போது, பின்னாளில் ஜி.டி. நாயுடுவின் மனைவியாக திரையில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. பல தலைமுறைகள் அவரது சாதனைகளைப் பாராட்டி வருகின்றன. ஆனால், ‘ஜி.டி.என்’ திரைப்படம் அவரது கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் இருந்த அன்பும் மனிதநேயமும் நிறைந்த மனிதரை உலகிற்கு அறிமுகப்படுத்தும்” என்றார்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு புத்தகக் கண்காட்சியில் ஜி.டி. நாயுடு பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்த நாள்தான் இந்த திரைப்படத்திற்கான ஆரம்பப்புள்ளி. அவரது சாதனைகள், போராட்டங்கள், யாருக்கும் தெரியாத வாழ்க்கை அத்தியாயங்கள் என்னை ஆழமாக பாதித்தன. இப்படிப்பட்ட வாழ்க்கை வரலாறு பெரிய திரைக்கும் கொண்டு வரவேண்டும் என்று தோன்றியது” என்றார்.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நம்பி நாராயணன், ஜி.டி. ராஜ்குமார், மறைந்த ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால், திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தில் ஆர். மாதவன் உடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், முரளிதரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் தயாரித்துள்ளனர். திரைக்கதையை கிருஷ்ணகுமார் ராமகுமார் மற்றும் ஆர். மாதவன் இணைந்து எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் கிரியேட்டிவ் புரொட்யூசராக அரவிந்த் கமலநாதன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, படத்தொகுப்பாளராக பிஜித் பாலா, நிர்வாகத் தயாரிப்பாளராக முரளிதரன், தயாரிப்பு மேலாளராக ஹக்கீம் சுலைமான், வசனகர்த்தாவாக முகில், கலை இயக்குநராக சிரில் குருவில்லா, ஆடை வடிவமைப்பாளராக ஜிஷாத் ஷம்சுதீன், ஒலி வடிவமைப்பாளராக சித்தார்த் சதாசிவ், ஒப்பனை கலைஞராக ரஞ்சித் அம்பாடி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
தேசிய விருது பெற்ற ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
’இந்தியாவின் எடிசன்’, ’வெல்த் கிரியேட்டர் ஆப் கோயம்புத்தூர்’ எனப் போற்றப்படுபவர் கோபாலசாமி துரைசாமி நாயுடு (1893–1974). சுயமாகக் கற்றறிந்த கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் மற்றும் கல்விசார் கொடையாளர். தென்னிந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு தொழில்துறை வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தவர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்மோட்டார், ராசண்ட் ரேசர், வாக்குப் பதிவு இயந்திரம், 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரு இருக்கை பெட்ரோல் கார் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார். அவரது சாதனைகள் சர் சி.வி. ராமன், சர் எம். விஸ்வேஸ்வரய்யா, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்ட பலரால் பாராட்டப்பட்டன. 1967 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. உணர்வுபூர்வமான டிரெய்லர், உயர்தர தயாரிப்பு தரம் மற்றும் இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கையை கொண்டாடும் கதையுடன், ’ஜி.டி.என்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.