நடிகர் கிஷோர் நடிக்கும் “ராஜாவுக்கு ராஜாடா” திரைப்படம் !

Share the post

நடிகர் கிஷோர் நடிக்கும் “ராஜாவுக்கு ராஜாடா” திரைப்படம் !
நடிகர் கிஷோர், தென்னிந்திய சினிமாவில் சிறந்த குணசித்திர நடிகர் என கொண்டாடப்படுபவர். ஹீரோ, வில்லன் குணசித்திரம் என எந்தவொரு கதாப்பாத்திரமானாலும் தன்  தனிப்பட்ட திறமையால், அற்புத நடிப்பை வழங்கி அசத்துபவர். தற்போது நடிகர் கிஷோர் அறிமுக இயக்குநர் திரவ் இயக்கும் “ராஜாவுக்கு ராஜாடா” படத்தில் அற்புதமான அப்பா கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.  

“ராஜாவுக்கு ராஜாடா” திரைப்படம் அப்பா மகள் உறவை அழகாக சொல்லும் ஒரு இசைத்திரைப்படமாக உருவாகவுள்ளது. மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட ஆசை, குடும்ப உறவுகளில்  பெரும் அலையை கிளப்புகிறது, இதனை மையமாக கொண்டே படத்தின் கதை நகரும் என்கிறார் இயக்குநர் திரவ். இயக்குநர் திரவ் இதற்கு முன்னால் தேசிய விருதை வென்ற “குற்றம் கடிதல்” படத்தில் இணை இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ஜோதிகா நடிப்பில் உருவான “மகளிர் மட்டும்” படத்தில் திரைக்கதையில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது மலையாள நடிகர் சரத் அப்பானி முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் மற்றுமொரு படைப்பையும் இயக்கவுள்ளார்.

இயக்குநர் திரவ் கூறுகையில்

“ராஜாவுக்கு ராஜாடா” திரைப்படம் முழுக்க முழுக்க உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படும் படமாகும். இதன் அடிநாதம் அன்பு மட்டுமே அண்டம் தேடும் என்பதாகும். இப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும்  அவரின் வாழ்க்கையின் ஏதாவதொரு பிரதிபலிப்பை படத்தில் கண்டிப்பாக காண்பார்கள். மிகவும் வலுவான கதாப்பாத்திரங்களை, தேர்ந்தெடுத்து செய்துவரும், நடிகர் கிஷோர் இப்படத்தில் அதற்கு நேர்மாறாக அன்பான ஒரு தந்தையாக, இயல்பான ஒரு குடும்பத்து எளிய மனிதனாக நடிக்கிறார். ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணிபுரிபவராக அவர் நடிக்கிறார்.

இப்படத்தில் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியான், தனன்யா, ஜஷ்வந்த் மணிகண்டன், கண்ணன் பாரதி, பிரபாகரன் J, மற்றும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். சங்கர் ரங்கராஜன் இசையமைக்க, CS பிரேம்குமார் படத்தொகுப்பு செய்கிறார். தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு செய்ய, தேவன் பால் கலை இயக்கம் செய்கிறார். சமந்த் நாக் ஒலி வடிவமைப்பு செய்கிறார். இயக்குநர் திரவ் பாடல்கள் எழுதுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *