வேல்ஸ் பல்கலைக்கழகமும் பன்னாட்டுத் திரைப்பண்பாட்டு மையமும் இணைந்து வழங்கும் இலவசமாக திரைப்படக் கல்வி!

Share the post

வேல்ஸ் பல்கலைக்கழகமும் பன்னாட்டுத் திரைப்பண்பாட்டு மையமும் இணைந்து வழங்கும் இலவசமாக திரைப்படக் கல்வி!

வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டு திரைப்படக் கல்வியை வழங்குகிறது.சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி B.Sc Film Studies(3 Years), M.Sc. Film and culture studies(2 years), PG Diploma in Media skills(1 year)-ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஏட்டுக்கல்வியுடன் செயல்முறைக்கல்வியும் சிறந்த முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர்.ஐசரி.கே.கணேஷ், பன்னாட்டு திரைப்பண்பாட்டு மையத்தின் நிறுவனத்தலைவர் இயக்குநர் திரு.வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் 03.05.2024 -அன்று கையெழுத்தானது.

பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையம் :

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் திரைத்துறை கனவுகளை நிஐமாக்குவதே பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நோக்கமாகும். இதன் நிறுவனத்தலைவர் இயக்குநர் திரு.வெற்றிமாறன் கூறுகையில் தன்னை மேம்படுத்திய இந்தச் சமூகத்திற்கு தான் ஆற்ற வேண்டிய கடமை இது. எனவே இந்த மையத்தை நடத்துவதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து B.Sc,M.Sc,Diploma ஆகிய பாடப்பிரிவுகளை நடத்துவதால் மாணவர்களுக்கு செயல்முறைக்கல்வியுடன் ஏட்டுக்கல்வியும் கிடைக்கிறது. இதனால் அவர்கள் எளிதாக திரைத்துறையில் வெற்றி நடை போடலாம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வெற்றி மாறன் அவர்கள்,”நான் சினிமாவில் என் வாழ்க்கையை தொடங்கிய போது ஒரு பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக ஒரு குறைந்தபட்ச ஊதியத்தில் சேர்ந்து சினிமாவை கற்றுக்கொள்ள முடிந்தது . அடுத்த காலகட்டங்களில் சினிமா சார்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சினிமாவை கற்றுக் கொள்ள முடிந்தது.மேலும் குறும்படங்கள் நமது திறமையை நிரூபிக்க உதவியது; மேலும் சமூக மற்றும் பொருளாதார நிலையும் முக்கிய காரணிகளாக இருந்தது. இதனால் நாங்களும் பேராசிரியர் ராஜநாயகமும் இணைந்து இணையதளம் வழியாகவும் அனைவரும் பெற்றுக் கொள்ளும் விதமாக கட்டணம் இல்லாமல் சினிமா சார்ந்த கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்று பத்தாண்டுகளுக்கு முன்பே கலந்தாலோசித்தோம்.

அதன் பின்னர் தான் பன்னாட்டு திரைப் பண்பாட்டு மையத்தை நிறுவினோம். முன்பு மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமையை ஆராய்ந்து அதற்கேற்றார் போல அவர்களுக்கு நேர்காணல் நடத்தி அவர்களை இந்நிறுவனத்தில் சேர்த்தோம்.இந்நேரத்தில் வெற்றி துரைசாமி அவர்களையும் நினைவு கூற வேண்டி உள்ளது அவரது பங்கும் அளப்பரியது. அவர்தான் தனது ஐஏஎஸ் அகாடமியில் சிறு பகுதியை நிறுவனத்திற்காக ஒதுக்கினார். மேலும் அவர்தான் இந்த ஒப்பந்தத்திற்காக ஐசரி‌.கே.கணேஷ் அவர்களிடம் என்னை பேச வைத்தார். அவரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உங்களுடைய அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் வேல்ஸ் நிறுவனம் துணைநிற்கும் என்று உறுதியளித்தார். மாணவர்களுக்கு ஊடகத்தை எப்படி கையாள வேண்டும் என்று,இந்த மூன்று விதமான திரைத்துறை சார்ந்த படிப்பின் மூலமாக அவர்களை மேலே கொண்டு வருவது மூலமாக மாணவர்கள் அனைவரும் சமூகத்தில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இன்று இந்த நல்ல நிகழ்வை தொடங்கியுள்ளோம்”என்றார்.

இந்நிகழ்வின் செய்தியாளர் சந்திப்பின்போது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறியதாவது,”நாங்கள் நடத்தும் பன்னாட்டு திரைப் பண்பாட்டு மையத்தில் மாணவர்களுக்கு கல்வியும் உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுவாக நான் அந்த வார்த்தையை பயன்படுத்துவதில்லை. ஆனால் எங்களுடன் வேல்ஸ் பல்கலைக்கழகமும் இணைந்து பயனிக்க வேண்டும் என்று விரும்பினோம்.ஒரே ஒரு அலைபேசி அழைப்பில் ஐசரி.கே.கணேஷ் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார். சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய மாணவர்களுக்கே முக்கியத்துவம் அளித்து தேர்ந்தெடுக்கிறோம். அதிலும் குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். எங்களது நிறுவனம் அல்லாத பொதுவான மாணவர்களுக்கும் வாய்ப்பு உண்டு. இளம் வயதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களை எந்த வித பழக்கத்திற்கும் அடிமையாகாமல் தங்கள் வாழ்க்கையை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நல்ல உயரத்தை அடையலாம். இவ்வாண்டு போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு மாணவர்கள் கொடுக்கும் ஆதரவு மற்றும் எதிர்கால சூழலை கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தம் தொடர்ந்து நீட்டிக்கப்படும்”, என்று வெற்றிமாறன் அவர்களுடன் இணைந்து ஐசரி.கே.கணேஷ் அவர்களும் உறுதி கூறினார்.

வேல்ஸ் கல்விக்குழுமம்:

தற்போது வேல்ஸ் கல்விக்குழுமம் 42,000 மாணவர்கள் மற்றும் 7,500 பணியாளர்களுடன் சுமார் 43 நிறுவனங்களுடன் கல்வி சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.வேல்ஸ் குழுமம் லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் தங்கள் கல்விசேவையை விரிவுபடுத்தியுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகம் நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. 100-க்கும் மேற்பட்ட இளநிலை (யுஜி), முதுகலை (பிஜி) பாடப்பிரிவுகளை வழங்குகிறது.வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சமுதாயத்தொண்டு வேல்ஸ் கல்வி நிறுவனம், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் கல்வி பயில வழிவகை செய்யும் வகையில் வி-சாட் என்னும் தகுதித்தேர்வை நடத்தி,அதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்கி வருகிறது.அதேபோல இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம், நலிந்த நாடகக்கலைஞர்கள் மற்றும்பெப்சி உள்ளிட்ட அமைப்புகளில் இருக்கும் ஏழை தொழிலாளர்களுக்கும் பொருளாதார உதவிகள் மற்றும் அவர்கள் குழந்தைகள் இலவசமாக கல்வி பயில தேவையான உதவிகள் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது . சமுதாய சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து பல சேவைகளை செய்து வரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும்,வேந்தருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பின்வருமாறு கூறினார்,”தமிழ் சினிமாவிற்கும் இந்திய சினிமாவுக்கும் உலக அளவில் பெருமை சேர்த்து வரும் தேசிய விருது நாயகன் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கடலூரில் பிறந்து திரைப்படக் கனவுகளுடன் சென்னை வந்து இயக்குநர் பாலுமகேந்திராவிடம் பயின்று இன்று பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரராக இருப்பவர் அருமை நண்பர் இயக்குநர் வெற்றிமாறன். இவருடைய விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதை அனைவரும் அறிந்த விஷயம் பலருக்கும் தெரியாத விஷயம் என் நண்பரைப் பத்தி சில இங்கு நான் சொல்கிறேன். வெற்றிமாறனுக்கு இயற்கை விவசாயத்தின் மேல் தீராத காதல் உண்டு. உத்திரமேரூரில் இயற்கை விவசாயம் பண்ணிட்டு இருக்கிறார். அதேபோல் மருத்துவ உதவியையும் கல்வி உதவியையும் அவர் கிட்ட யாரு போய் கேட்டாலும் உடனே உதவிசெய்யும் குணம் கொண்டவர். இதையெல்லாம் பொதுவெளியில் எங்கேயும் சொல்லிக்கவும் மாட்டார்.

அதோடு தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்து திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னை வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், திரைத்துறையில் நுழைவதே குதிரைக்கொம்பு. அந்த மாதிரியான மாணவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரைப் பண்பாட்டு மையம் இலவசமாக மூன்றாண்டு திரைப்படக் கல்வியை வழங்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதில் திறமையுள்ள மாணவர்கள் சேர்ந்து இலவசமாக பயிலலாம்.

நாங்கள் இருவரும் இனி வரும் காலங்களில் சேர்ந்து இத்தகைய கல்விச்சேவையை அளிப்போம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்”,என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *