
” மொத ராத்திரி ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைச்சுருக்கம் :-
கதைநாயகன் ரிஷிகாந்த் காதல் தோல்வியால் மனம் துவண்டு துபாய்க்கு போகிறார் வேலையைத் தேடி. துபாயில் தங்கி வேலை செய்து விட்டு ஐந்து வருடம் கழித்து ஊர் திரும்புகின்றார்.
ரிஷிகாந்த்துக்கு தெரியாமலே குடும்பத்தார் திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். குடும்பத்தினரின் கட்டாயத்தினால் திருமணத்திற்கு சம்மதித்து கதாநாயகி அனிஷ்மா அனில்குமாரை கரம் பிடிக்கிறார்.
வழக்கம் போல திருமணம் முடிந்த கையோடு முதல் ராத்திரி நடத்துவது நம் நாட்டின் பண்பாடு , கலாச்சாரம். அதன்படி முதல் இரவுக்கு ஏற்பாடு செய்ய முதல் ராத்திரியில் மனம் விட்டு பேச முயற்சி செய்கிறார் ரிஷிகாந்த்.
மனத்தில் ஒருவனை சுமந்து கொண்டு இன்னொருவனிடம் எப்படி குடும்பம் நடத்த முடியும். இந்தக் காதல் படுத்தும் அவஸ்த்தை பெற்றோர்களை தலை குனிய வைக்கும் என்பதை எண்ணாமல் காதல் வலையில் சிக்கி வேதனை படுகின்றனர் இன்றைய காதலர்கள்.
முதல் இரவுக்கு காத்திருக்கும் வேளையில் கணவனை ஏமாற்றி விட்டு காதலனைத் தேடி அவனுடன் ஓட முயற்சி செய்கிறார் அனிஷ்மா அனில்குமார்.
இவர்களின் செயலைக் கண்ட ரிஷிகாந்த் என்ன முடிவு செய்கிறார். தன் மனைவியை காதலனோடு சேர்த்து வைக்கிறாரா ? மனம் திருந்தி கதைநாயகி கணவனோடு சேர்ந்து வாழ்கிறாளா ? என்பதனை கிராமத்து மக்களின் எதார்த்தமான வாழ்வியலின் தத்துவத்தை பார்வையாளர்களுக்கு புரியும் வண்ணம் நகைச்சுவை உணர்வோடு சொல்லுவதே மொத ராத்திரி .
இயக்குநரின் கைவண்ணம் :-
பொதுவாக திருமண வீட்டில் நடக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் அங்கு சில யதார்த்த செயல்முறை களை எப்படி கையாளுகின்றனர் என்பதை கண்டறியலாம்.
உறவினர்கள் இடையே மகிழ்ச்சி , சோகம் , மோதல் , சண்டை , எதிர்ப்பு ஆகியன உண்மைக்கு நெருக்கமாகவும் அதே சமயத்தில் யதார்த்தத்தை யதார்த்தமாக சொல்லியிருப்பது மிக அருமை.
கதையை காட்சிமை படுத்தி கதையை நகர்த்தும் விதம் அருமை.இயக்குநர் இயல்பான நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதிய கதையை மிக நேர்த்தியாக கதையை கொண்டு செல்கின்றார்.
பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். அதே சமயத்தில் சிந்திக்கவும் வைக்கிறார் இப் படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி அவரை நாமும் பாராட்டலாமே !
திரை நட்சத்திரங்கள் :-
இப் படத்தின் நாயகன் ரிஷிகாந்த் மருது எனும் கதாபாத்திரத்தை ஏற்று தன் நடிப்பால் தனி முத்திரையை பதிக்கிறார் இவரிடம் கதாநாயகனுக்குரிய அத்தனை தகுதியும் இருப்பதனால் திரை உலகில் வலம் வருவார் தன் நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்திழுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்றுவாரா ?
கதைநாயகி அனிஷ்மா அனில்குமார் மீண்டும் ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று சர்வ சாதாரணமாக நடித்து பார்வையாளரின் கைத்தட்டலை பெறும் இவர் முதல் பாதியில் அளவாக பேசி இரண்டாம் பாதியில் படம் முழுவதும் மௌன மொழியால் பேசா மடந்தையாக ( பெண்ணாக ) வலம் வரும் இவர் படத்தின் இறுதிக் காட்சியில் தன் மனக் குமுறலை அழுகை மூலம் வெளிப்படுத்தி பார்வையாளர்களின் கண்ணீரை இலவசமாக வரவழைக்கிறார். பாராட்டலுடன் கைத்தட்டலையும் பெறுகிறார்.
துணை திரைநட்சத்திரங்கள் :-
படத்திற்கு இவர்கள் பக்க பலமாக இருப்பவர்கள். கதை நகர்த்த இவர்களின் பங்களிப்பு மிக மிக அவசியமானது .அந்த வகையில் துணை நட்சத்திரங்களாக பவனி வருபவர்கள் :- சேத்தன் , பக்ஸ் , சங்கீதா பாலன் , பானுப்பிரியா , வர்ஷினி கார்மேகம் , அப்துல் லீ , ஏ.வெங்கடேஷ்
ஒளிப்பதிவாளர் :- சுரேந்திரன் பரஞ்சோதி .
கதைக் களத்தினை உள் வாங்கி , கதாபாத்திரத்தின் தன்மைகளை கேட்டறிந்து , காட்சியமைப்புகளை வரிசைப் படுத்தி கதையின் ஓட்டம் , இயக்குநரின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
திருமண நிகழ்வினை இயல்பாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர்.
திருமண வீட்டில் பயணித்த உணர்வினை தன் வண்ண ஒளிப்பதிவு மூலம் இயக்குநரின் மன ஓட்டத்தை உணர்ந்து செயல்படுத்தி இருப்பது பாராட்டக் கூடிய செயல்களே ! பாராட்டுக்கள்.
இரவு நேரக் காட்சிகளை மிக தத்ரூபமாக படப்பிடிப்பினை நடத்தி தனி முத்திரையைப் பதிக்கின்றார் ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி.
படத்தொகுப்பாளர் :-
ஒரே நாளில் நடக்கும் கதை இது. மிக நேர்த்தியான முறையில் காட்சிகளைத் தொகுத்து கதையின் தரத்தினை எந்த சூழ்நிலையிலும் சிதறிடிக்காமல் மிக இயல்பாக காட்சிகளை தொகுத்து ஒரு முழு வடிவம் கொடுத்த படத் தொகுப்பாளர் அசோக் அர்ஜூனன் அவர்களை மனதார பாராட்டலாமே !
கதைக்கு பக்க பலம் இசை . அந்த இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களை சலிக்க விடாமல் தன் இசையால் கட்டிப் போட்டவர் இசையமைப்பாளர் பரத் சங்கர்.
கதைக்களத்திற்கும் , கதையின் ஓடத்திற்கும் , கதாபாத்திரங்களின் உணர்வுகளை , உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து பாடல்களும் மிக பொருத்தமே ! மனதை நெருடும் உயிரோட்டமே ! ஆமாம் பாடல்கள் அனைத்தும் அருமை ! ஒற்றைச் சொல்லால் பாராட்டி முடிக்கலாமே ! சொற் சிக்கனம் தேவை !
திருமண நிகழ்ச்சியில் தொடங்குகிறது கதை. முதல் ராத்திரியோடு கதை முடிவடைகிறது. இதற்கிடையில் நடந்தேறும் நிகழ்வுகளை மனித மன ஓட்டத்தின் உணர்வுகளை ஆய்ந்து தோய்ந்து ஒரு முடிவினை பார்வையாளர்களுக்கு விளங்கும் வண்ணமாக இப்படத்தினை இயக்கிய ராஜா கருப்புசாமி காதல் போன்ற விஷயங்களை அழுத்தம் கொடுக்காமல் மேம்போக்காக சொல்லியிருந்தாலும். பார்வையாளர்களின் மனத்தில் நங்கூரமாக கருத்தினை பதிய வைத்து தன்னை தக்க வைத்துக் கொள்கிறார்.
படத்தினைப் பற்றி சில செய்திகள் :-
இயக்குநர் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து காட்சிமை படுத்தி அதற்கேற்ற நடிகர் நடிகையர்களை தெரிவு செய்து அவர்களை வேலை வாங்கிய விதம் மிக அருமை .
திருமண விழாவில் நடக்கும் நிகழ்வினை மிக இயல்பாக
காட்சியில் அமைத்து வழக்கமான படத்தினையும் தாண்டி நம்மை பிரமிக்க வைக்கின்றார் இயக்குநர் ராஜா கருப்பசாமி.
திரை விமர்சனத்தில்
” மொத ராத்திரி ” என்னும் திரைப்படம் பார்க்க வேண்டிய படம் தான். நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை. நல்ல கதைக்கு பஞ்சம் இல்லை. நல்ல பாடல்களுக்கு பஞ்சம் இல்லை. பஞ்சம் இல்லா இப்படத்தினை வஞ்சனை இல்லாமல் தியேட்டரில் சென்று பார்க்கலாமே ! எங்களின் பத்திரிகை குழு நடுநிலை நின்று ஆய்ந்து தோய்ந்து நல்லதொரு தீர்ப்பினை அள்ளி வழங்கி இருக்கிறது. உங்களை இன்னொரு திரைவிமர்சனத்தில் சந்திக்கின்றேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ஓகே டெக் ராஜேஷ்