நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

Share the post

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் புதிய உளவியல் திகில் திரைப்படத்தில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் ஜானரில் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் தங்களது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த மூன்று முன்னணி நடிகர்கள் இப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். ‘96’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கில்லி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் பல படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. ரசிகர்களால் ‘கலையரசி’ என அன்போடு அழைக்கப்படும் நடிகை ராதிகா சரத்குமார் பல தசாப்தங்களாக தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ’கிழக்கு சீமையிலே’, ’பசும்பொன்’, ’தங்க மகன்’, ’தெறி’ உள்ளிட்ட பல படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதேபோல் ‘சூரரைப் போற்று’, ’மகேஷிண்டே பிரதிகாரம்’, ’8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை அபர்ணா பாலமுரளி பதிவு செய்துள்ளார்.

பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், லோகோமோட்டிவ் குளோபலுடன் இணைந்து ஃபியூஷன் பிலிக்ஸ் மற்றும் லோகோமோடிவ் குளோபல் புரொடக்‌ஷன் சார்பில் உருவாகிறது. இப்படத்தை குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், சுந்தர் ஆரோன், விகாஸ் சர்மா மற்றும் அமித் தல்மியா ஆகியோர் தயாரிக்கின்றனர். ராஜேஷ் மேனன் மற்றும் ஜார்ஜ் கேமரூன் இணைத் தயாரிப்பாளர்களாகவும், அபினவ் மெஹ்ரோத்ரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

தென்னிந்திய திரையுலகில் தனது இருப்பை விரிவுபடுத்தி வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் முக்கிய இடம் பிடித்துள்ளது. தயாரிப்பு, விநியோகம் மற்றும் பல்வேறு முக்கிய கூட்டணிகள் மூலம் மலையாளத் திரையுலகில் தனது செயல்பாடுகளை இந்நிறுவனம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. பனோரமா ஸ்டுடியோஸின் மலையாளத் திரைப்படங்கள் பட்டியலில் ‘அனோமி’, ‘உன்மதம்’ மற்றும் ‘டிக்கி டாக்கா’ ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ’புரொடக்ஷன் நம்பர் 4’ மற்றும் டொவினோ தாமஸ் நடிக்கும் ’முன்பே’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பஹத் பாசில் உள்ளிட்ட மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் முக்கிய படங்களில் கூட்டணி அமைத்துள்ளது . தற்போது தனது முதல் தமிழ் படத்தயாரிப்பின் மூலம், இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் துடிப்பான திரையுலகங்களில் ஒன்றான தமிழ் சினிமாவிலும் தனது தடத்தை பதிக்கிறது.

பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் குமார் மங்கத் பதக் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் சினிமா எப்போதுமே துணிச்சலான, தனித்துவமான மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சார கதைகளைச் சொல்லும் களமாக இருந்து வருகிறது. எங்களின் முதல் தமிழ் தயாரிப்பும் அதே உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினோம். மிகவும் சுவாரஸ்யமான உலகத்தைக் கொண்ட வித்தியாசமான திரைப்படம் இது. இயக்குநர் ராஜா சிறப்பாக கதையை உருவாக்கியுள்ளார். இத்தகைய திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் ’ஏர்லிஃப்ட்’, ’செஃப்’ மற்றும் ’பிப்பா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனி முத்திரை பதித்தவர். வலுவான மனித உணர்வுகளையும், சுவாரஸ்யமான உலகங்களையும் மையமாகக் கொண்ட கதைகளை தொடர்ந்து கையாண்டு வரும் அவர், தற்போது முதன்முறையாக உளவியல் திரில் ஜானரில் களமிறங்குகிறார். இருண்ட மற்றும் பரபரப்பான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் மூலம், ராஜா கிருஷ்ண மேனன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில் புதிய களத்தை கொண்டு வருகிறார்.

இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் பகிர்ந்து கொண்டதாவது, “ஒருவர் என்னை எந்த ஜானரிலும் சிக்காத கதைகள் இயக்கும் இயக்குநர் என்று மிகவும் பொருத்தமாக ஒருமுறை குறிப்பிட்டார். அந்தப் பயணத்தின் மற்றுமொரு புதிய முயற்சிதான் இந்தப் படம். பல வகைகளில் எனக்கு முதல் அனுபவமாக இப்படம் அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம், முதல் உளவியல் திகில் படம் மற்றும் முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட எனது முதல் கதை. அதோடு, த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா மேடம், அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது என்னை மேலும் உற்சாகமாகியுள்ளது. பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் குமார் மங்கத் ஜி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி. அதேபோல், லோகோமோட்டிவ் குளோபலின் விகாஸ் மற்றும் சுந்தர் ஆகியோர் கதையை எந்தவித சமரசமும் இல்லாமல், அது சொல்லப்பட வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். இத்தகைய சிறந்த குழு கிடைத்ததற்கு மகிழ்ச்சி” என்றார்.

லோகோமோட்டிவ் குளோபலின் மேனேஜிங் பார்ட்னரும் தயாரிப்பாளருமான சுந்தர் ஆரோன் மற்றும் தயாரிப்பாளர் விகாஸ் ஷர்மா பகிர்ந்து கொண்டதாவது, “எல்லைகளைக் கடந்து பயணிக்கும் அதே நேரத்தில், மனித உணர்வுகளை வலுவாக சொல்லும் கதைகளே லோகோமோட்டிவ் குளோபலின் தேர்வு. திகில், மிஸ்ட்ரி மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களைக் கொண்ட இந்த தமிழ் மொழி சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படத்தின் கதை எங்களை உடனடியாக கவர்ந்தது. த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா மேடம் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட திறமையான நடிகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, லண்டனில் படமாக்கப்படும் இப்படம், நாங்கள் உருவாக்கி வரும் தரமான திகில் திரைப்படங்களின் வரிசையில் முக்கியமானதாக மாறியுள்ளது.

ராஜா கிருஷ்ண மேனன், குமார் ஜி மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் ஆகியோரை ஒரே படத்தில் இணைத்து, இத்தகைய தனித்துவமான கதையை உருவாக்குவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் உள்ளோம்” என்றனர்.

சுவாரஸ்யமான கதைக்களம், திறமையான நடிகர்கள் மற்றும் தனித்துவமான கதை சொல்லலுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் என, இப்படம் பெரிய திரையில் ரசிக்கும் வகையிலான பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *