
” பாரிஸ் கஃபே ” என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
கதைக் கரு :-
ஆணவப்
படுகொலைப் பற்றிய சம்பவம் ஒன்றை கதையின் கருவாக கையில் எடுத்துக் கொண்டு படமாக்கியிருக்கின்றார் இந்தப் படத்தின் இயக்குநர்.
கதையின் போக்கு :-
காதல் சங்க காலம் முதல் இக் காலம் வரை தொடர்கிறது தொடர் வண்டியைப் போல. காதலை ஏற்பதும் மறுப்பதும் அவரவரின் பெற்றோர்களின் மனநிலையைப் பொறுத்தது. காதலுக்கு நான் எதிரியில்லை ஆனால்…. குறிப்பிட்ட சமூகத்தின் மீது ஏனோ தீராத வெறுப்பு. அவர்களும் மனிதர்கள் தானே ! ஏனோ அவர்களின் தன் மானம் அங்குத் தடுக்கிறது. இதனால் ஆணவப் படுகொலை பகிரங்கமாக அரங்கேறுகிறது.
அரசு மருத்துவர் குரு சோமசுந்தரம். கட்டிடக் கலை நிபுணர் மற்றும் சமூக சேவகியுமான அனுமோல். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சிறந்த தம்பதிகள் என்று சான்றிதழ் கொடுக்கும் வகையில் இல்லறத்தை நல்லறமாக்கி நாடு போற்றும் நல்லவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் மருத்துவ கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ்ஸுக்குச் செல்கிறார் குரு சோமசுந்தரம். அங்கு இருக்கும் காஃபே ஒன்றில் சென்னையைச் சேர்ந்த இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தினை பார்க்க நேர்கிறது. புகைப்படத்தினைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குரு சோமசுந்தரம் தன் மனைவியிடம் அந்தக் காதல் ஜோடியைப் பற்றிய உண்மைகளை சொல்கிறார். ஆனால் அவர்கள் தற்போது உயிரோடு இல்லை என்பதையும் சொல்கிறார்.
பத்திரிகை வாயிலாக அந்த இளம் காதலர்கள் பற்றிய செய்தியை அறிந்து கொண்ட அனுமோல் தன் கணவர் குரு சோமசுந்தரம் மீது கோபப்படுகிறார் . ஒரு கட்டத்தில் அவரை விட்டு பிரிந்து செல்கிறார்.
பெற்றோரின் பிரிவினைப் பற்றி அறிந்து கொண்ட குரு சோமசுந்தரத்தின் மகள் அர்ச்சனா. அவளின் காதலன் விஜய் விஷ்வாவுடன் அமெரிக்காவில் இருந்து வருகிறார். சமரசம் செய்கிறார் தன் பெற்றோர்களை ஒன்று சேர்ப்பதற்காக. அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா ? இளம் காதல் ஜோடி யார் ? அவர்களது இறப்புக்கும் குருசோமசுந்தரத்திற்கும் என்ன தொடர்பு ? அடுக்கடுக்காக வினாக்களைத் தொடுத்தால் விடை சொல்லத்தானே வேண்டும் ? படத்தினைப் பார்த்து விடையை தெரிந்து கொள்ளலாமே !
திரைப்படம் வெறும் பொழுது போக்கு சாதனம் அல்ல ! சமூகத்தில் புரையோடும் சமூக சீர் கேடுகளை களைந்தெறியும் ஓர் சமூக ஊடகம்.
திரை நட்சத்திரங்கள் :-
குரு சோமசுந்தரம் – அனுமோல் முதன்மை கதாபாத்திரங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு பெருமை சேர்த்து இருக்கின்றனர் . கணவன் மனைவியாக நடித்திருக்கும் இவர்கள் சிறந்த தம்பதிகள் என்ற அங்கீகாரம் பெற்ற இவர்கள் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கரம் கோர்த்ததன் விளைவாக பிரிய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
ஆணவப் படுகொலையை மறைப்பதற்கு தன்னுடைய கணவர் குருசோமசுந்தரமும் உடந்தை என்பதை அறிந்த அனுமோல் மனது அளவில் உடைந்து போகிறார் .ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் கொடுக்கிறார். அவர்களின் கோபம் நியாமானது என்பதை தன் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார். உணர்வு பூர்வமாகவும் , உணர்ச்சி பூர்வமாகவும் நடித்து படத்திற்கு சிறப்பை சேர்த்திருக்கிறார்.
குற்றம் என்றாலும் குடும்பத்திற்காக செய்து விட்டு , அதே குடும்பத்திற்காக தண்டனையை அனுபவிக்கவும் தயாராக இருக்கும் குரு சோமசுந்தரம் தன் நடிப்பின் மூலம் தனி முத்திரையைப் பதிக்கிறார். சில இடங்களில் நகைச்சுவை உணர்வை தூண்டும் வகையில் பேசி பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார்.
இளம் காதல் ஜோடிகள் :-
இளங் காதலர்களாக விஜய் விஷ்வா , அர்ச்சனா துடிப்பான ,இளமை துள்ளலான நடிப்பு மூலம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கின்றனர்.
மற்றொரு இளஞ் ஜோடி சாய் விக்கி , நயனா சாய் இதயம் கனக்க செய்யும் விதம் தன் நடிப்பால் தனி முத்திரையைப் பதித்திருக்கின்றனர்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவாளர் :- சதீஷ் .ஜி. அமெரிக்கா , பாரிஸ் போன்ற வெளி நாடுகளை கிராபிக்ஸ் மூலம் கன கச்சிதமாக காட்சிகளுடன் இணைத்திருப்பது படத்திற்கு உண்டான செலவினங்களை கணிசமாக குறைக்கும் வண்ணம் செய்திருப்பது பாராட்டுக்குரியது.
படத்தொகுப்பு :-
படத்திற்கு பெரும் பங்களிப்பு இந்தப் படத்தொகுப்பு . ஆணவப் படுகொலையும் , அதன் பின்னணிப் பற்றி பேசும் கதையாக இருப்பினும் அதனை வித்தியாசமான முறையில் திரையில் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு பக்கமாக இருந்து செயல்பட்டவர் படத்தொகுப்பாளர் வி.ஜே. சாபுஜோசப் .படத்திற்கு தனி சிறப்பு இந்தப் படத் தொகுப்பு. பாராட்டலாமே !
இயக்கம் :- சரஜ் சீலன் . ஆணவப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார் இப் படத்தின் இயக்குநர் சரஜ் சீலன்.
காதல் ஜோடி வாயிலாக இன்ப துன்பங்களை கடந்து வாழும் தம்பதியர் மூலம் அழகான இளமை துள்ளும் காதல் கதையாக ,சுவாரஸ்யமாக , விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் திரைக்கதை மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றார் இயக்குநர்.