சண்டைக்காரி திரை விமர்சனம்!

Share the post

சண்டைக்காரி என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
தலைப்பே கதைநாயகியின் குணநலனை படம் பிடித்துக் காட்டுகின்றது.

கதையின் போக்கு :-
இலண்டனில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக ஸ்ரேயா பணியாற்றி வருகின்றார். தங்கப்பதக்கம் வென்ற பொறியியல் பட்டதாரியான விமல் ஸ்ரேயாவின் உதவியாளராக பணியில் சேருகிறார்.

விமல் உருவாக்கிய செயலியை அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்காக வேண்டி ஸ்ரேயாவிடம் உதவியாளராக பணியாற்றும் விமல் ஒரு கட்டத்தில் அவரது கடும் கோபத்திற்கு ஆளாகிறார். பெரிதும் பாதிக்கப்படுகிறார்.

இதற்கிடையில் , ஸ்ரேயாவின் லண்டன் விசா முடிவடைகிறது. விசா தொடர இந்தியா செல்ல வேண்டும். அங்கிருந்து தான் விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய சி.இ.ஓ பதவி கிடைக்காமல் போகிறது. இதனால் என்ன செய்வது என்று யோசிக்கிறார் ஸ்ரேயா . சட்டென்று பொறித் தட்டுகின்றது. நிரந்தர இலண்டன் குடியுரிமை பெற்ற விமலை திருமணம் செய்து கொண்டது போல நடித்து இலண்டன் குடியுரிமை பெற ஸ்ரேயா முடிவு செய்கிறார்.

அதே நேரத்தில் விமல் ஸ்ரேயாவின் எதிரியோடு கரம் கோர்க்கிறார். ஸ்ரேயாவை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுகிறார். அவரது பணி உயர்வை தடுக்க திட்டம் தீட்டுகிறார்.

ஸ்ரேயா போடும் திட்டத்திற்கு விமல் சம்மதம் தெரிவிக்கின்றார். அதே சமயம் விமல் ஸ்ரேயாவிடம் நிபந்தனை ஒன்று விதிக்கின்றார். அவரது நிபந்தனைக்கு செவி செய்கிறார் ஸ்ரேயா.

தான் விதித்த நிபந்தனை என்னவென்றால் ” தமிழகத்தில் இருக்கும் தன் பெற்றோர்களை தான் நேரில் சந்திக்க வேண்டும் ” என்கிறார் விமல்.

தமிழகம் செல்லும் ஸ்ரேயாவின் திட்டம் நிறைவேறியதா ? அன்றி விமலின் திட்டம் நிறைவேறியதா ? வெல்லப் போவது யார் ? என்ற கேள்விக்கு விடை தருவது தான் ” சண்டைக்காரி ” என்னும் திரைப்படம்.

கதைக்களன் :- சண்டைக் காரியின் கதைக்களன் தஞ்சை மாவட்டம் மற்றும் இலண்டன் மாநகரம். எது எப்படி இருந்தாலும் கலாச்சாரம் மாறும். என்றும் மாறாது நம் நாட்டு பண்பாடு.

திரை நட்சத்திரங்கள் :-
விமல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆடை மாறினாலும் தோற்றமும் நடிப்பும் மாறாது என்பதை இந்தப் படத்தின் மூலம் நிருபணம் செய்திருக்கிறார் விமல். படத்திற்கு படம் வித்தியாசம் நடிப்பில் காட்ட வேண்டும். ஒரே மாதிரி நடிப்பு என்றால் பார்ப்பவர்களுக்கு புளிப்புத் தட்டும். கதைக்கு ஏற்ப கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.

ஸ்ரேயா கதாநாயகியாக நடித்திருக்கிறார். அறிமுகப் படத்தில் இருந்து இந்தப் படம் வரை தன் இளமையை பாதுகாப்பாக வைத்திருக்கிறார். நடிப்பில் தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. சற்று வருத்தம் தான். நடிப்பிலும் தனி முத்திரையைப் பதிக்கலாமே !

கோபக்காரியாக , திமிர் பிடித்தவளாக கொடுத்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இயக்குநர் சொன்னதைச் செய்திருக்கிறார் ஸ்ரேயா.

துணை திரை நட்சத்திரங்கள் :-
ஒரு காலத்தில் கதாநாயகனாக கொடிக்கட்டி பறந்த பிரபு கதாநாயகன் விமலின் தந்தையாக நடித்திருக்கிறார். விமலின் தாயாக உமா பத்மநாபன் நடித்திருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர்.

ஸ்ரேயாவின் தோழியாக புன்னகை பூ கீதா கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.

சத்யன் , புன்னகை அரசி கே.ஆர். விஜயா , ரேகா , தேவ் கில் , கிரேன் மனோகர் , மகாநதி சங்கர் என நடிப்பு பட்டாளமே இப்படத்தில் நடித்து அசத்தி இருக்கின்றனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவாளர் :- ஆர்.பி. குருதேவ். இவர் இலண்டன் மாநகரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார். தமிழகத்தில் உள்ள கிராமத்தின் அழகை படம்பிடித்துக் காட்டி காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். பாடல் காட்சிகளை கண்ணைக் கவரும் விதமாக தன் ஒளிப்பதிவால் மெருகேற்றி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று தனி முத்திரையை பதித்து இருக்கிறார்.

இசை :- அம்ரிஷ். இவர் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் அருமை. ஒரு படத்திற்கு பலம் சேர்ப்பது இந்த பின்னணி இசை தான். அதில் அவர் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

படத்தொகுப்பு :- தினேஷ் பொன்ராஜ் . ஒரு படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிப்பது அந்தப் படத்தின் படத் தொகுப்பே ! கதையை சுவாரசியமாக கொண்டு செல்ல மறந்து விட்டார். இந்தப் படத்திற்கு பெரும் சறுக்கல் தான்.

எண்ணம் எழுத்து இயக்கம் :- இயக்குநர் ஆர். மாதேஷ். கோபம் உள்ள இடத்தில் தான் நல்ல குணம் இருக்கும் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள். அந்த வகையில் கோபக்காரியாக நடிக்கும் ஸ்ரேயா காதலை அழகாக சொல்ல வைக்க முயற்சி செய்திருக்கிறார் இப் படத்தின் இயக்குநர்.

ஸ்ரேயா – விமல் ஜோடிப் பொருத்தம் சரியில்லை என்றே சொல்ல வேண்டும். கதையில் சொன்ன காதலை பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குநர் அவ்வளவு தான்.திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நகைச்சுவை காட்சிகள் அளவாக இருக்கின்றன.

குறைகளும் நிறைகளும் :-
தமிழகத்தில் தன் படிப்பை முடித்துவிட்டு இலண்டன் செல்கிறார் விமல். தன் குடும்பத்தின் மூலம் இலண்டனில் நிரந்தர குடியுரிமை பெறுகின்றார். ஆனால் இவர் குடும்பம் தமிழகத்தில் இருக்கிறது. அதற்கு தகுந்த காரணம் சொல்லியிருக்கலாம்.

இலண்டனில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயரிய பதவியில் நெடுங்காலமாக இருக்கும் ஸ்ரேயா ஏன் இலண்டன் குடியுரிமை பெறாமல் இருக்கிறார். அவர் கீழ் பணியாற்றும் விமல் இலண்டனில் நிரந்தர குடியுரிமை பெற்ற போது ஏன் உயர் பதவியில் இருக்கும் ஸ்ரேயா இலண்டனில் நிரந்தர குடியுரிமை பெறவில்லை. தகுந்த காரணம் சொல்லியிருக்கலாம். கதை எழுதும் போதே அலசி ஆய்ந்து சொல்ல வேண்டியதை தரமாக முறையாக சொல்லியிருக்கலாமே ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *