ZEE தமிழின் ‘தவமாய் தவமிருந்து’… ஸ்லைஸ் ஆஃப் லைஃப் கதையில் அப்படி என்ன ஸ்பெஷல்?

Share the post

ZEE தமிழின்தவமாய் தவமிருந்துஸ்லைஸ் ஆஃப் லைஃப் கதையில் அப்படி என்ன ஸ்பெஷல்?

சென்னை : டிவி என்றாலே மெகா சீரியல்கள்தான் நம் எல்லோரின் நினைவுக்கும் வரும். அந்த அளவுக்கு தமிழ் தொலைக்காட்சி உலகை நெடுந்தொடர்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. மெகா சீரியல்கள்தான் இன்று ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் வணிக வெற்றியை தீர்மானிக்கும் முதல் முக்கிய காரணி. எத்தனை லட்சம் மக்கள் ஒரு நெடுந்தொடரை பார்க்கிறார்கள், அதன் டிஆர்பி என்ன என்பதைக்கொண்டுதான் ஒரு நெடுந்தொடரின் வெற்றி, தோல்வியுமே உறுதிசெய்யப்படுகிறது. அதனாலேயே எல்லா சேனல்களும் டிஆர்பி ரிசல்ட்டைக் கொண்டே ஒரு நெடுந்தொடரின் கதையை தீர்மானிக்கின்றன.

முன்பு திருமணமான பெண்கள் மற்றும் வீட்டில் இருக்கும் வயதானவர்களை டார்கெட் ஆடியன்ஸாக கொண்டு எடுக்கப்பட்ட ‘ஓவர் டிராமா’ வகை மெகா சீரியல்கள் இப்போது இளைஞர்களுக்கான கதைகளையும் உள்ளடக்கி வண்ணமயமாக மாறி இருக்கிறது. ஆனாலும் சராசரி மக்களின் வாழ்க்கையோடு பொருந்திப் போகாத. நாடகத்தன்மையுடன் வேறொரு ஃபேண்டசி உலகமாக பெரும்பாலான சீரியல்கள் இருக்கின்றன.  இதனால் வாழ்வியல் சார்ந்த நெடுந்தொடர்களே தொலைக்காட்சிகளில் இன்று இல்லாமலேயே போய்விட்டது.

இந்த சூழலில்தான் ZEE தமிழ் தொலைக்காட்சி ‘தவமாய் தவமிருந்து’ எனும் வாழ்வியல் கதையை சொல்லத்தொடங்கியிருக்கிறது. ‘ஸ்லைஸ் ஆஃப் லைஃப்’ என்கிற Gener-ஐயே தமிழ் தொலைகாட்சிகள் மறந்திருந்த நிலையில் அந்த வகைமைக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறது ZEE தமிழ். ஒரு கதாபாத்திரத்தின் கதையை அதன் அன்றாட வாழ்க்கையின் வழியே மிகவும் இயல்பாக சொல்வதுதான் ஸ்லைஸ் ஆஃப் டிராமா. இந்த வகைமைக்கு மிகச்சிறந்த உதாரணமாக ‘தவமாய் தவமிருந்து’ தொடரை சொல்லலாம். நம் வீடுகளுக்குள் சிசிடிவி கேமரா வைத்து பதிவு செய்தது போன்ற காட்சிகளை கொண்டு யதார்த்தமான சீரியலாக களமிறங்கியிருக்கிறது ZEE தமிழ் சேனலின் ‘தவமாய் தவமிருந்து’.

50 வயதுகளில் வாழும் மார்க்கண்டேயன் – சீதா எனும் தம்பதியினரின் வாழ்க்கைக் கதையே ‘தவமாய் தவமிருந்து’.  55 வயதான மார்க்கண்டேயன் ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை செய்கிறார். நம் குடும்பங்களில் பிள்ளைகளுடன் அதிகம் உரையாடாத அப்பாக்களே அதிகம். குறிப்பாக பிள்ளைகள் வளர வளர அப்பாக்கள் தனித்து விடப்படுகின்றனர். அம்மாக்களின் பிரச்னை, சிரமங்கள், வலி தெரியும் அளவிற்கு கூட அப்பாக்களின் உழைப்பும் வலியும் பிள்ளைகளுக்கு தெரிவதில்லை. அன்பை வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் மனைவியும், பிள்ளைகளும் மட்டுமே உலகம் என நேசிப்பவராக, அதேசமயம் நண்பர்களுக்கு ஒரு பிரச்சினை எனும்போது உடனடியாக முன்நின்று உதவி செய்பவராக இந்த கதையின் நாயகன் மார்க்கண்டேயன் இருக்கிறார். இந்த சீரியலை பார்க்கும் 80s மற்றும் 90s கிட்ஸ்களுக்கு தங்கள் அப்பாவை மார்க்கண்டேயன் கண்முன் நிறுத்துகிறார்.

மார்க்கண்டேயனின் மனைவி சீதா. தமிழ் குடும்பங்களின் அஸ்திவாரமாக, ஆணி வேராக, உறவுகளுக்கிடையிலான இணைப்பு பாலமாக இருப்பவர்கள் பெண்கள். ‘தவமாய் தவமிருந்து’ சீரியலின் நாயகி சீதா அப்படி ஒரு ஒருவராக இருக்கிறார்.சன்னுக்கு ஏது சன்டே என குடும்பத்துக்காக ஓடிக்கொண்டேயிருப்பவர். வீட்டில் ஒவ்வொருவரையும் அவரவர் போக்கில் சமாளித்து குடும்பத்தில் ஒற்றுமையும், நிம்மதியும் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை அச்சு பிசகாமல் செய்யும் நம் அம்மாக்களின் பிரதிபிம்பமாக சீதா திரையில் வலம்வருகிறார்.

மார்க்கண்டேயன் – சீதா தம்பதியிருக்கு நான்கு பிள்ளைகள். மூத்த மகள் ரேவதிக்கு வயது 36. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள், கணவருடன் தனியே வசிக்கிறார். என்னதான் கணவன் கண் கலங்காமல் பார்த்துக்கொண்டாலும், அம்மா வீட்டுக்கு அடிக்கடி கண் கலங்க்கியபடியே வருவது ரேவதியின் ஹாபி.  திருமணமாகி வெளியே போனாலும் பெற்றவர்கள் வீட்டில் இருந்து வரவு வந்துகொண்டேயிருக்க வேண்டும் என நினைப்பவள். தொடரின் இரண்டாவது எபிசோடிலேயே ரேவதியின் கதாபாத்திரம் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் அவ்வளவு இயல்பாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது.

அடுத்து ராஜா. மண்டைக்குள் எப்போதும் கால்குலேட்டரை ஆன் செய்தபடியே அலையும் ‘’எதையும் கணக்குப் பார்க்காம செய்யமுடியாதுல்ல’’ டைப் ஆசாமி. முதல் எபிசோடில் மனைவியிடம் தனிக்குடித்தனம் போனால் எவ்வளவு செலவாகும் என மனக்கணக்குப்போடும்போதே இப்படி ஒரு கேரெக்டரை தினமும் நம்ம வீட்டுலயும் பார்க்குறோம்ல என்கிற எண்ணம் வருகிறது. ராஜாவின் மனைவி மேகலா. மாமியாரோடு சேர்ந்து வீட்டில் சமையல் தொடங்கி அத்தனை வேலைகளையும் பார்த்துக்கொள்பவள். தனிக்கென இந்த வீட்டுக்குள் எந்த சுதந்திரமும் இல்லை என்பது மேகலாவின் மனக்குமுறல். இந்த குமுறல்கள் வெளியே வரும்போதெல்லாம் கால்குலேட்டரை ஆன் செய்து மேகலாவை ஆஃப் செய்வது ராஜாவின் வழக்கம்.

அடுத்த மகன் ரவி. ‘இப்படி ஒரு கணவன் நமக்கு அமையலேயே’ என 80’ஸ்,90’ஸ், 2கே பெண்கள் வர எல்லோரையும் பொறாமைப்படவைக்கும் உமாவின் அன்புக்கணவன். மனைவிக்கு காலையில் காபி போட்டுத்தருவதில் தொடங்கி, மனைவியின் உடைகளை அயர்ன் செய்து, அவரின் ஆபிஸ் மீட்டிங்குக்கு ஏற்றபடி மெனுவையும் தயார் செய்து, மனைவியை அலுவலகத்தில் கொண்டுபோய் விடுவது, மீண்டும் வீட்டுக்கு கொண்டுவந்து சேர்ப்பது என ‘பொண்டாட்டி கண்ல ஒரு சொட்டு தண்ணி வந்துடக்கூடாது’ என அரும்பாடுபட்டு உழைக்கும் அன்புக்கணவன். பொண்டாட்டியைப் பார்த்துக்கொள்வதையே 24 மணி நேரப் பணியாக செய்வதால் தனக்கென தனி வேலை எதுவும் தேவையில்லை எனும் கொள்கையுடைவன் ரவி. இருந்தாலும் ஊர் தப்பாகப் பேசும் என்பதால் ‘ஒரு பிசினஸ் பண்ணப்போறேன்’ என்றே நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறான்.

வேலைக்கும்போகும் இரண்டாவது மருமகள் உமாவும், வீட்டு வேலைகள் செய்யும் முதல் மருமகள் மேகலாவும் ரஷ்யாவும்- உக்ரேனும்போல அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். இவர்களின் சண்டைக்கான காரணம் என்னவாக இருக்கும் எனத் தனியாக சொல்லவேண்டுமா என்ன? 

மார்க்கண்டேயன் – சீதா தம்பதியினரின் கடைசி மகள் மலர். பேரைப் போன்றே மென்மையாவள், அன்பானவள். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்காகத் தயாராகிக்கொண்டிருக்கிறாள். மார்க் – சீதாவின் செல்லக்குட்டியான மலருக்கு ஒரு காதலன் இருக்கிறான். பாண்டியன் மலருடன் பள்ளியில் படித்தவன். இப்போது அந்த ஏரியாவிலேயே சொந்தமாக ஒரு பைக் மெக்கானிக் ஷெட்டை நடத்திவருகிறான். பாண்டியன் ஒரு பெரிய சர்வீஸ் சென்டர் நடத்தி வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்கொண்டுவர வேண்டும் என்பது மலரின் முக்கியமான லட்சியம்.

இந்த மார்க்கண்டேயன் – சீதா வீட்டுக்குள் அடுத்தடுத்த நடக்கும்போகும் எதார்த்தமான சம்பவங்களைக் கொண்டே ‘தவமாய் தவமிருந்து’ நெடுந்தொடர் பின்னப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சவால்களை காலமும், இந்த சமூகமும் கொடுத்துக்கொண்டேயிருக்க அதை சீதா- மார்க்கண்டேயன் குடும்பம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதைத்தான் தினந்தோறும் பார்க்கப்போகிறோம்.

ZEE தமிழில் ஏப்ரல் 18 முதல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘தவமாய் தவமிருந்து’ நெடுந்தொடரை வாழ்வனுபவமாக கண்டு ரசிக்கத் தயாராவோம்.

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் ‘தவமாய் தவமிருந்து’ தொடரை சீரியலாக இல்லாமல் தங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்போகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழ்த்துகள் ZEE தமிழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *