” விஸ்வநாத்&சன்ஸ்”திரை விமர்சனம் :-

Share the post

விஸ்வநாத் அன்டு சன்ஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
ஆங்கிலத் தலைப்பில் மோகம் வைத்து தமிழை தள்ளி வைப்பது மனத்திற்கு சற்று நெருடல் தான். இனியாவது நல்ல தமிழில் தலைப்பினை வைத்து படம் எடுக்கலாமே !

அம்மா பிள்ளை சூரியா. அம்மாவின் அரவணைப்பில் வளரும் சூரியா மிக மிக பெரிய தொழில் அதிபர். அம்மாவின் ஆசை தன் மகன் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வென்று தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்று. அவரின் ஆசையை நிறைவேற்றி வைக்கின்றார் சூரியா.

வம்சம் தழைக்க வேண்டும். பெயரன் பெயர்த்தியைப் பார்த்து தான் பூரிப்பு அடைய வேண்டும் என நினைக்கும் ராதிகாவுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறார் சூரியா

திருமணம் செய்து கொள்வதில் முரண்டு பிடிக்கிறார் சூரியா. சூரியாவின் மனத்தை மாற்ற முயன்று தோற்று போகிறார் தாயார் ராதிகா. தன் பிள்ளைக்கு அடுத்து தன் குடும்பத்திற்கு வாரிசு இல்லாமல் போய்விடுமே என அஞ்சுகிறார் ராதிகா.

அம்மா ராதிகாவின் கவலையை போக்க சூரியா வாடகைத் தாய் மூலம் தம் வம்சம் தழைக்க முன் வருகிறார். அதன்படி வாடகைத் தாய் மூலம் தன் உயிர் அணுவை செலுத்தி அழகான குழந்தையை வாடகை தாய் குழந்தையை பெற்றுத் தருகிறாள்.

சூரியாவின் இந்தச் செயல் ராதிகாவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் எங்கு தன் பிள்ளைக்கு அடுத்து வாரிசே இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிய ராதிகாவிற்கு சூரியா ஏற்படுத்திய வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தையைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்து நிற்கின்றார் . இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஏன் என்ற கேள்வி கேட்கத் தோன்றும். பிறந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்து. அந்த ஆபத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்ற வாடகைத் தாயை தேடிச் செல்கிறார்.

இதற்கு முன் சூரியா வாடகைத் தாயை பார்த்தது இல்லை. வாடகைத் தாயை தேடி செல்லும் சூரியா . தன்னைவிட இருபது வயது இளையவளான மமிதா பைஜூ தான் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறார்.

குழந்தையின் நிலைமையை எடுத்துச் சொல்லி வாடகைத் தாய் மமிதா பைஜூவை விஷால் அழைக்கும் போது ஏற்கெனவே பணத்திற்காக வாடகைத் தாயாக ஒப்புக் கொண்டவள் இப்பொழுது குழந்தையின் உடல்நலனைக் கருதி அதே பணத்திற்காக குழந்தையைக் காப்பாற்ற ஒப்புக் கொள்கிறாள் மமிதா பைஜூ இதற்காக சூரியாவுடன் செல்கின்றாள். பாசத்தில் மிக நெருக்கமான பாசம் இரத்தப் பாசம். இந்தப் பாசம் தான் வாடகைத் தாய் மமிதாபைஜூவையும் தொற்றிக் கொண்டது. குழந்தையுடன் ஒட்டிக் கொண்டது. இதற்கு காரணமான சூரியாவை நேசிக்கத் தொடங்குகிறாள். அதுவே நாளடைவில் காதலாக மாறுகிறது.

ஒருதலைக் காதல் என்று சொல்வதா ! மனமொத்த காதல் என்று சொல்வதா ! வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி சூரியா மமிதா பைஜூவின் காதலை ஏற்க மறுக்கிறார்.தன்னை துரத்தி துரத்தி காதலிக்கும் மமிதா பைஜூவின் மனத்தை மாற்றுகின்றாரா ? திருமணத்தின் மீது எதற்காக சூரியாவிற்கு வெறுப்பு ? அதற்கான காரணம் என்ன ? என்பதனை பணக்காரர்கள் குடும்பங்களில் சில இடங்களில் நடக்கும் குடும்ப பின்னணியை திரையில் சொல்ல வருவதே இந்த ” விஸ்வநாத் &சன்ஸ் ” என்னும் திரைப்படம்.

முன்னணி நட்சத்திரங்கள் எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி தன்னை தக்க வைத்துக் கொள்கின்றனர்.

அந்த வரிசையில் சூரியா தன்னை தக்க வைத்துக் கொள்வது பாராட்ட வேண்டிய விஷயங்களில் ஒன்று. இதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்தப் படத்தில் பணக்காரன் வேடத்தில் நடித்திருந்தாலும் பணக்காரனுக்கே உண்டான திமிர் , அகம்பாவம் ,ஆணவம் இவை எதுவுமே இல்லாமல் தோற்றத்தில் எளிமை , பெற்றோரை மதிப்பதில் பொறுமை , தன்னை நம்புவர்களை பாதுகாக்கும் கடமை இப்படி பற்பல.

சஞ்சு விஸ்வநாத் என்ற தொழில் அதிபர் வேடத்தில் தன்னை இணைத்து ஸ்டைலாக வந்தாலும் அவரின் எளிமை எளியவர்களையும் கவர்ந்து இழுக்கும் வகையில் நடித்திருக்கிறார்.

தன்னை விட இளையவளின் காதலை ஏற்க மறுப்பது ஏன் ? திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்று ஏன் பிடிவாதம் பிடிக்கின்றார் ? அதனின் பின்னணி என்ன ?

அம்மா மீது தான் கொண்ட பாசத்தை மறைமுகமாக வெளிப்படுத்தி இரசிகர்கள் மனத்தை கட்டிப் போடுகிறார் சூரியா.

அம்மாவை நினைத்து அழும் காட்சியில் இரசிகர்கள் கண்களை கலங்க வைக்கின்றார் சூரியா.

இக் கதையின் நாயகி மமிதா பைஜூவிற்கு வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம். பாத்திரத்தை உணர்ந்து தனது துள்ளல் நடிப்பால் தனி முத்திரையைப் பதிக்கின்றார்.

திரைக்கதைக்கு பெரும் திருப்புமுனை மமிதா பைஜூவின் நடிப்பு தான். ஆங்கிலம் கலந்து தமிழில் பேசி அலட்டிக் கொள்ளாமல் அசால்ட்டாக நடித்திருப்பது ஏற்க வேண்டியது தான். பெண்ணுக்கே உரிய நாணம் , காதல் , மகிழ்ச்சி , சோகம் என நவரச நடிப்பால் உயர்ந்து நிற்கின்றார்.

ராதிகாவின் அனுபவம் மிக்க நடிப்பு . தாய்க்கே உண்டான அந்த இலக்கண வரம்பை மீறாமல் தன் நடிப்பால் இரசிகர்களை நெகிழ வைக்கின்றார்.அவரின் இயல்பான நடிப்பு இப் படத்திற்கு இன்னொரு மைல் கல். பாராட்டலாம்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
படம் மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டது என்பதனை நிருபணம் செய்யும் வகையில் தன் காமிரா மூலம் காட்சிகளை பிரமாண்டப் படுத்தியிருக்கின்றார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவான அனைத்து பாடல்களும் அருமை.படத்திற்கு உயிரூட்டுவது பின்னணி இசை. குறை இல்லாமல் நிறை செய்திருக்கிறார்.

படத் தொகுப்பாளர் நவீன் நூலி. திரைக்கதை நத்தையாக ஊர்ந்தாலும் பார்வையாளர்களின் கவனம் முழுவதையும் தனது படத்தொகுப்பால் காட்சிகளை மிக அருமையாக தொகுத்து படத்தின் வெற்றிக்கு கைக் கொடுத்து இருக்கின்றார் நவீன் நூலி இவரை நாம் பாராட்டி மகிழ்வோம்.

எண்ணம் எழுத்து இயக்கம் வெங்கி அட்லூரி.
திருமணம் ஓர் புனிதமான பந்தத்தை ஏற்படுத்தும் நல்லுறவு. வாழ்கையின் முதல் அங்கம். மனித உயிரினங்களின் வாழ்க்கைத் தத்துவம். இப்படிப்பட்ட பந்தத்தை சூரியா வெறுக்கும் காரணத்தை உண்மையாக சொல்லி இருப்பதும் துணிச்சலாக படம் எடுத்து இருப்பதும் பாராட்டக் கூடிய விஷயங்களில் ஒன்று..

எளிய கதை என்றாலும் தரமான கதை. திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை. இயல்பான காட்சிகள் படத்திற்கு வலு சேர்த்தாலும் ஆரம்பம் முதல் முடியும் வரை தன்னுடைய கவனத்தை சிதறவிடாமல் இரசிகர்களை ஒருமுகப் படுத்த நினைத்தாலும் சில இடங்களில் கோட்டை விட்டு விட்டார்.இப் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி.

மகன் சூரியாவின் வெளிநாட்டுப் பயணம் . அதன் பின்னணியில் நடந்த நிகழ்வு என்ன என்பதனை தாய் ராதிகாவிற்கு தெரிந்திருந்தும் அதனை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்வது ஜீரணிக்க முடியவில்லை. கண்டிப்பு , பாசம் இரண்டும் இருந்தால் தான் அந்தக் குழந்தை இந்தச் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும். இதில் ஏதாவது ஒன்று குறைந்தால் நெறிக் கெட்டுதான் போகும்.

திருமண பந்தம் சமூகத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்த்தைக் கொடுக்கும் . இதனை கொச்சைப் படுத்தினால் இந்தச் சமூகம் கைக்கட்டி சும்மா நிற்காது.

அடங்காபிடாரியை பெண்டாட்டியாக ஏற்றுக் கொண்டவன் பேசாமல் பேயோடு குடும்பம் நடத்தலாம். பேயும் அடங்காபிடாரியும் ஒன்று தான்.

திருமண உறவு வேண்டாம் ! ஆனால் பெண்ணோடு சல்லாபமாக இருக்க வேண்டும் என்ற சபல புத்தியுடன் பயணிக்கும் நாயகன் . தன் தத்தையை போல இரண்டும் போதாது என்று சுற்றுவது போல் இருக்கிறது.

நல்ல விஷயங்களை கையில் எடுத்த இயக்குநருக்கு நன்றி சொல்லலாம்.
மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
கோபமும் , வெறுப்பும் மனிதனை மனிதனாக வைத்திருப்பதில்லை. சண்டையின் காரணமாக உறவுகள் நிரந்தரமாக பிரிவது இல்லை. அதன் பிறகு எப்படி மீண்டும் ஒன்று சேர்வது என்ற கவலைதான் மனிதனைத் தொற்றிக் கொள்கிறது.

திரைவிமர்சனத்தில் ” விஸ்வநாத்&சன்ஸ் என்னும் படத்தினை விமர்சனம் செய்து பார்த்ததில் மக்களுக்கு நல்ல செய்திகளை சொல்லியிருப்பது படத்திற்கு இதுவே வெற்றி என்னும் முதற்படி ! இப் படி ஏறினால் சாதனை என்னும் சிகரத்தினை தொடலாம். இயக்குநருக்கு பாராட்டு ! நடிகர் நடிகையர்களுக்கு பாராட்டு ! தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு பாராட்டு ! எங்களின் பத்திரிகை குழு இவர்களை மனதார பாராட்டுகிறது. எங்கள் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. இனி அடுத்த திரைவிமர்சனத்தில் சந்திப்போம் அதுவரை காத்திருப்போம் ! உங்கள் ஆதரவை நாடும் உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *