மண்டேலா’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்ற YNOT ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் S.சஷிகாந்த்

Share the post

68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ‘இந்திரா காந்தி சிறந்த அறிமுக இயக்குநரின் படம்’ பிரிவில் தயாரிப்பாளருக்கான விருதை 2020-ஆம் ஆண்டு வெளிவந்த ‘மண்டேலா’ திரைப்படம் வென்றதை நாங்கள் மிகப்பெருமையுடன் தெரிவிக்கிறோம். செப்டம்பர் 30 அன்று புது தில்லியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு ஜனாதிபதி திருமதி. திரௌபதி முர்மு அவர்களிடம் இருந்து தயாரிப்பாளர் திரு. S. சஷிகாந்த் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

தயாரிப்பாளர் திரு. S. சஷிகாந்த் கூறியதாவது –

“இந்திய திரைப்பட விழாக்களின் இயக்ககம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் மற்றும் இப்படத்தை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘இந்திரா காந்தி சிறந்த அறிமுக இயக்குநரின் படம்’ மற்றும் ‘சிறந்த வசனகர்த்தா’ உள்ளிட்ட விருதுகளை வென்ற திரு. மடோன் அஷ்வின் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மடோனின் திறமையை கண்டறிந்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு உருதுணையாக இருந்த கிரியேடிவ் ப்ரொடியூசர் திரு. பாலாஜி மோகன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்றும், பிரத்தியேக திறமைசாலிகளை கண்டறிந்து ஆதரிக்க வேண்டும் என்கிற குறிக்கோள்களுடன் YNOT ஸ்டூடியோஸ் 2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பயணத்தில் இயக்குநர்கள் திரு. C.S. அமுதன், திரு. பாலாஜி மோகன், திரு. மடோன் அஸ்வின், திரு. நிஷாந்த் கலிதிண்டி போன்ற திறமைசாலிகளை அறிமுகப்படுத்தியதில் பெருமை கொள்கிறேன். குறிப்பாக, இந்த பிரிவில் எங்களுக்கு இவ்விருது கிடைத்ததை, எங்களது பன்னிரெண்டு ஆண்டு கால உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். பல்வேறு வளர்ந்து வரும் திறமைசாலிகளுடன் எங்களது எதிர்கால படங்கள் அமையவுள்ளன. இந்த விருது என்னை போலவே அவர்களுக்கும் மிகவும் ஊக்கமளிக்கிறது.

இந்த படத்தை சாத்தியமாக்க ஒன்றிணைந்து உழைத்த எங்கள் பங்குதாரர்கள், குறிப்பாக ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், விநியோகஸ்தர்கள், அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சேவை வழங்கியவர்கள் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் குழுவிற்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் முயற்சிகளுக்காக, குறிப்பாக “மண்டேலா”க்காக பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் தொடர்ந்து அளித்து வருகின்ற அளவற்ற அன்பிருக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

ஒரு திரைப்படம் தனது பார்வையாளர்களை அமைத்துக்கொள்ளும் என்று நான் எப்போதும் உறுதியாக நம்புகிறேன். கலாச்சாரம் மற்றும் மொழித் தடைகளைத் தாண்டி உலகம் முழுவதிலும் இருந்து “மண்டேலா” தொடர்ந்து பெற்றுவரும் ஆதரவும், எப்போதும் தரமான கதைக்களம் கொண்ட படங்களை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகும். மண்டேலா திரைப்படத்தை கொண்டாடிய பார்வையாளர்களுக்கு நான் முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்.

68வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும், குறிப்பாக திரையுலகில் புதிய படைப்புகளை  தொடர்ந்து அளித்து வரும் திரு. சூர்யா, திருமதி. ஜோதிகா, திருமதி. சுதா கொங்கரா, திரு. S. தமன், திரு. GV பிரகாஷ் குமார் போன்ற எனது அன்பான நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *