’டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

Share the post

’டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

நடிகர் முத்துப்பாண்டி, “இது என்னுடைய முதல் மேடை. வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி. எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ராஜா சார் இசையில் வரும் வரிகளின் மீனாட்சியாய் இந்தப் படத்திற்கு வழித்துணையாய் இருந்த கீர்த்தி சுரேஷ் மேமுக்கு நன்றி”.

நடிகர் செளந்தரராஜன், “கார்த்திக் சுப்புராஜ்ஜை ஷார்ட் பிலிம் காலத்திலிருந்து தெரியும். மிகச்சிறந்த திறமையான இயக்குநர். அவருடைய எண்ணம் செயலெல்லாம் ஒன்று போல இருக்கும். அவர் மதுரையையும் அந்த மனிதர்களையும் மிகவும் நேசிப்பார். இந்திய அளவிலும் அவர் பெரிய இயக்குநராக வளர வேண்டும். ‘டோரதி’ படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. சனந்த், ரிஷி இருவரின் வளர்ச்சியும் மகிழ்ச்சியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் இயக்குநரின் நடிகை. ஆட்டோகிராஃப் அவரிடம் வாங்கி இருக்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் “.

கலை இயக்குநர் குமார், “திண்டுக்கல், மதுரை ஆகிய ஊர்களில் லொகேஷன் பார்த்தோம். நிறைய சவாலான விஷயங்கள் இருந்தது. விஷூவலாக நன்றாக இருக்கும். படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். நிச்சயமாக படம் வெற்றி பெறும்”.

நடிகை ஜீவா, “முதன்முறையாக என்னை உலக மேடைக்கு அழைத்து சென்றது ‘டோரதி’ திரைப்படம் தான். படம் வெளியான பின்பு நிச்சயம் அதை பற்றி பேசுவீர்கள். கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி. தமிழ்நாட்டில் இருந்து முதன்முறையாக திருநங்கை ஒருவர் டொரன்டோ ஃபிலிம் பெஸ்டிவல் போனது நான்தான் என்று சொன்னார்கள். நெகிழ்ச்சியாக இருந்தது. என்னை நன்றாக பார்த்துக் கொண்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் சாதனையாக இந்தப் படம் இருக்கும் என்று நம்புகிறேன். சனந்த், ரிஷி என்னுடைய தம்பிகள். எல்லோருடைய அன்பிற்கும் நன்றி. இளையராஜா சார் இசையில் நடித்திருப்பது கனவு நனவான தருணம்”.

படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா, “நான் சினிமாவிற்கு வர காரணமாக இருந்த படம் ஜிகர்தண்டா. அப்படி இருக்கும் பொழுது கார்த்திக் சுப்புராஜ் சார் படத்தில் பணிபுரிவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. இந்த படமே மேஜிக் போல இருந்தது. படம் நன்றாக வந்திருக்கிறது”.

நடிகர் முத்துக்குமார், ” இந்திய சினிமாவிற்கு அவசியமான தேவையான படம் இது. ‘டோரதி’ படத்தில் நல்ல கதாபாத்திரம் செய்திருப்பது நிறைவாக உள்ளது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் ரிஷிகாந்த், “என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி. ‘டோரதி’ வரும் 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்காக மதுரையில் இரண்டு மாதம் பயிற்சி எடுத்தோம். கார்த்திக் சார் எங்களை மிகத் திறமையாக வழி நடத்தினார். இந்த படத்திற்கு எங்களுக்கு பாராட்டு கிடைத்தால் அது முழுக்க முழுக்க அவரையை சாரும். படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்து உள்ளனர். கீர்த்தி மேமின் நல்ல மனதிற்கு அவர் இன்னும் பல விருதுகள் பெறுவார். சனந்தும் நானும் பல வருட நண்பர்கள். நாங்கள் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. ‘மொதராத்திரி’ படத்திற்கு முன்பே ‘டோரதி’ நடித்து முடித்து விட்டேன். ராஜா சாரின் இசையில் நடிப்பேன் என்ற கனவில் கூட நினைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் நன்றி”.

நடிகர் சனந்த், ” டொரன்டோ பிலிம் பெஸ்ட்டிவலில் படம் பார்த்த நிறைய பேர் பாராட்டினார்கள். அதோடு என்னை கட்டி பிடித்தார்கள். அது என் வாழ்வின் சிறப்பான தருணம். எங்கள் அணியினர் அனைவருக்கும் இது ஸ்பெஷலான படம். ரிலீஸூக்கு பின் உங்களுக்கும் இது ஸ்பெஷல் படமாக மாறும். இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் நல்ல நண்பராகியுள்ளார். கார்த்திக் அண்ணனோடு பணிபுரிந்தது மீண்டும் ஷார்ட் ஃபிலிம் காலத்திற்கு சென்றது போல இருந்தது. அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் எனக்கு வாய்ப்புகள் கொடுக்கிறார். அந்த நம்பிக்கையை எப்போதும் காப்பாற்ற வேண்டும். இந்தப் படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரிக்கும் இந்த படம் ஸ்பெஷலானதாக இருக்கும். ராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. இப்பொழுது அவரது பாடலுக்கு நடனமாடி அவருடன் ஒரு பாடலிலும் நடித்து விட்டோம். வரும் 25 ஆம் தேதி படம் வெளியாகிறது. உங்கள் ஆதரவு தேவை”.

விநியோகஸ்தர், சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன், “இது எனக்கு முக்கியமான படம். கார்த்திக் சார் இயக்கம், ராஜா சார் மியூசிக் மட்டுமே நம்பி படம் பார்த்தேன். இந்தப் படம் நிச்சயம் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். எக்ஸ்ட்ரீம் லெவல் கமர்ஷியல் படம். சுப்ரமணியபுரம் படம் போல கார்த்திக் சுப்புராஜ் சார் ஸ்டைலில் மதுரை படம் இது. கொண்டாட்டமான கமர்ஷியல் படம் இது. சிறந்த அனுபவம் இந்தப் படம் கொடுக்கும். ரஜினி- விஜயகாந்த் சார் சேர்ந்து ஒரு படம் எண்பதுகளில் நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி ரிஷி- சனந்த் காம்பினேஷன் இருக்கும்”.

நடிகை கீர்த்தி சுரேஷ், ” இந்தப் படத்தின் கதை படித்ததும் உடனே ஒத்துக்கொண்டேன். ஏனெனில், இது போன்ற படத்தில் நடிப்பது எனக்கு தான் பெருமை. சில நாட்கள் வேலை செய்தாலும் கார்த்திக் சாரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே சிறப்பாக உழைத்திருக்கிறார்கள் ரிஷி, சனந்த் இருவருடனும் கொஞ்ச நாட்களே பணிபுரிந்திருந்தாலும் அவர்களுடன் நல்ல பாண்ட் கிரியேட் ஆகி இருக்கிறது. செப்டம்பர் 25 அன்று படம் வெளியாகிறது. நிச்சயம் உலகளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி”.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “எனக்கு சினிமா மீது ஆர்வம் வர காரணம் நான் பிறந்து வளர்ந்த மதுரை மண் தான். சினிமா ரசனைக்கு பெயர் போன ஊர் அது. என்னுடைய படங்களிலேயே இறைவி தான் மிகப்பிடித்தது என பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அதற்கு காரணம் அது மனித உணர்வுகளுடன் நெருக்கமாக உள்ளது. என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து வந்த கதையும் கூட. ‘இறைவி’யை விட உணர்வுபூர்வமான கதை ‘டோரதி’. இந்த படம் தொடங்கியதில் இருந்து ஒரு மேஜிக் போல உள்ளது. படம் பார்த்த எல்லோரும் பாராட்டி வருகின்றனர். கலை இயக்குநர், எடிட்டர் என படத்தின் ஒவ்வொரு தொழில்நுட்ப குழுவினரும் திறமையானவர்கள். எல்லோரும் எல்லா வேலையும் இந்த படத்தில் பார்த்தோம். ராஜா சார் இசை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சாரின் இசைதான். டோரதி படத்தின் ஆன்மாவாக இருப்பதற்கு நன்றி சார். சனந்த் திறமையான நடிகர். ரிஷியை ஆடிஷன் செய்துதான் எடுத்தோம். சனந்தும் ரிஷியும் நிஜமாகவே நண்பர்கள் என்பதால் நன்றாகவே திரையில் வொர்க்கவுட் ஆனது. கதை கேட்டதும் கீர்த்தி சுரேஷ் உடனே ஒத்துக்கொண்டார். அவரது திரையிருப்பு படத்திற்கு இன்னும் அதிக வேல்யூ கொடுத்தது. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இது என்னுடைய 10ஆவது படம். உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *