’கள்வன்’ திரை
விமர்சனம் !!
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி – ஜி.டில்லி பாபு தயாரித்து, பி.வி. சங்கர் இயக்கி, வெளி வந்திருக்கும் படம் கள்வன்!
ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர் !
இசை: பாடல்கள் இசை – ஜி.வி. பிரகாஷ் குமார் –
பின்னணி இசை – ரேவா
.வனப்பகுதியை ஒட்டியுள்ள, யானைகள் அடிக்கடி வந்து போகும் ஆபத்துமிக்க கிராமத்தில் வசித்து வரும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார்!
தனது நண்பர் தினாவுடன் சேர்ந்து திருடுவது, மது அருந்துவது என்று வாழ்ந்து வருகிறார்!
இதற்கிடையே நாயகி இவானாவை சந்திப்பவர் அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால், ஜி.வி-யின் காதலை இவான நிராகரிக்க, அவரை விடாமல் துரத்துபவர், அவருக்காக ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தத்தெடுக்கிறார்.
காதலுக்காக தான் ஆதரவற்ற முதியவரை ஜி.வி.பிரகாஷ் குமார் தத்தெடுத்தார், என்று அவரது நண்பர் நினைக்கும் போது. தத்தெடுப்புக்கு பின்னணியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் அதிர்ச்சியளிக்கும் திட்டம் பற்றி தெரிய வருகிறது. அது என்ன? என்பதையும், அவரது திட்டமும், காதலும் நிறைவேறியதா? என்பதை சொல்வது தான் ‘கள்வன்’.
கெம்பன் என்ற கதாபாத்திரத்திற்காக தோற்றத்தில் எவ்வித மாற்றத்தையும் காட்டவில்லை என்றாலும், கொங்கு தமிழ் பேசி நடித்ததில் ஜி.வி.பிரகாஷ் கெம்பன் என்ற கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்!
திருடுவது, மது அருந்துவது என்று வழக்கமான ஜி.வி.பிரகாஷாக ஆரம்பத்தில் வலம் வந்தாலும், காதல் நிராகரிப்படும் போது கலங்கும் காட்சிகளில் நடிப்பில் ஜொலிப்பவர், பாராதிராஜாவை வைத்து போடும் திட்டத்தால் வில்லத்தனமான நடிப்பையும் வெளிக்காட்டி மிரட்டுகிறார்!
நாயகியாக நடித்திருக்கும் இவானா, சிரித்த முகத்தோடு ரசிகர்களை கவர்கிறார். இயல்பான நடிப்பு மூலம் கதையோட்டத்துடன் பயணிப்பவர், திருடனின் காதலை ஏற்க மறுத்து, கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், தனது காதலனின் சுயரூபம் தெரிந்த பிறகு கோபமடையும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதிர்ச்சியான வயதில், ஏக்கமான மனநிலையோடு பரிதாபமாக அறிமுகமாகும் பாரதிராஜா, தாத்தாவாக தத்தெடுக்கப்பட்ட பிறகு அதிகாரம் செய்து பேரன்களை அசரடிப்பது கலகலப்பு. தான் யார்? என்று தெரிய வருவதற்கு முன்பாகவே புலியை பார்வையால் விரட்டுவது, மலையாளத்தில் பேசி யானையை அடிப்பணிய செய்வது என்று தன் கதாபாத்திரம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவர், தனிமையின் தவிப்பு பற்றி பேசி வருந்தும் காட்சியில், நடிப்பால் பார்வையாளர்களை கலங்க வைத்துவிடுகிறார்.
ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் தினா, படம் முழுவதும் பயணிக்கிறார். அவ்வபோது சில வார்த்தைகள் மற்றும் தனது வழக்கமான பாணியின் மூலமாக சிரிக்க வைப்பவர், குணச்சித்திர நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஊர் தலைவர் மற்றும் ஊர் மக்கள், வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்கள் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் புத்துணர்ச்சியை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ரேவாவின் பின்னணி இசை கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
பசுமை நிறைந்த காடு, அதில் இருக்கும் யானைகளின் ஆபத்து இரண்டும் திரைக்கதையின் முக்கிய அம்சங்கள் என்றாலும், ஒளிப்பதிவாளராக அதை பிரமாண்டமாக காட்டாமல் மிக சாதாரணமாக காட்டியிருக்கிக்கிறார் பி.வி.சங்கர். அதே சமயம், நாயகனை யானை துரத்தும் இறுதிக் காட்சியை காட்சிப்படுத்திய விதம் மிரட்டல்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் திட்டம் மற்றும் பாரதிராஜாவின் பின்னணி ஆகியவற்றின் மூலம் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் பி.வி.சங்கர், இறுதியில் என்ன நடக்கப்போகிறது?, என்பதை ரசிகர்கள் எளிதில் யூகித்துவிடும்படி திரைக்கதை அமைத்திருப்பது படத்தை சற்று தொய்வடைய செய்கிறது.
யானை விரட்டும் கிளைமாக்ஸ் காட்சியில் இருந்த விறுவிறுப்பு மற்றும் யானையிடம் இருந்த பிரமாண்டம், படம் முழுவதும் இருந்திருந்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுத்திருக்கும். இருந்தாலும், காதல், காமெடி, துரோகம், செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களையும் அளவாக கையாண்டு அனைத்து தரப்பினருக்குமான படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் பி.வி.சங்கர், விலங்குகள் மூலம் சிறுவர்களையும் ஈர்த்துவிடுகிறார்.
மொத்தத்தில்
இந்த ‘கள்வன்’அனைவர் மனதையும் இடம் பிடித்திருக்கிறார்!!