” டிசி ” ( DC ) திரைவிமர்சனம் !

Share the post

” டிசி ” (DC) என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம்
பிறக்கும் பொழுதே யாரும் குற்றவாளி யாகப் பிறப்பதில்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் ஒருவனை குற்றவாளியாக்குகின்றது. சூழ்நிலை காரணமாக குற்றவாளியாகி சிறைக்குச் செல்லுகிறார் இத் திரைப்படத்தின் கதைநாயகன் லோகேஷ் கனகராஜ்.

சிறைவாசம் சிலரை புத்தராக மாற்றுகின்றது. சிலரை சாதாரண வாழ்க்கையிலிருந்து அசாதாரண வாழ்க்கையாக மாற்றுகின்றது.

விந்தையான கூடம் தான் சிறைக்கூடம். குற்றவாளியை திருத்தவும் செய்கிறது. அதே சமயத்தில் மேலும் மேலும் தப்பு செய்யும் இடமாக சில நேரங்களில் முன் மாதிரியாக அமைந்து விடுகின்றது.

குற்றம் புரிபவர்களை காவல் துறை தேடி தேடி பிடிக்கிறது. பிடித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துகிறது. நீதிமன்றமும் விசாரித்து தக்க தண்டனையை வழங்குகிறது.

இக் கதையின் நாயகன் தொடர்ந்து செய்யும் குற்றங்கள் காவல் துறைக்கே பெருத்த சவாலாக அமைந்து விடுகிறது. காவல்துறை இவரை விரட்டுகிறது. வழக்கம் போல தப்பித்து ஓடும் குற்றவாளிகளைப் போல இவரும் தப்பியோடுகிறார்.

இப் படத்தின் இன்னொரு கதைநாயகி சஞ்சனா ஏ.கே வை இப் படத்தின் நாயகன் லோகேஷ் கனகராஜ் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பு இவர்களுக்குள் நட்பு ஒன்றை ஏற்படுத்துகிறது. அந்த நட்பு லோகேஷ் கனகராஜின் மனத்தை மாற்றும் நேரத்தில் போலீஸின் துப்பாக்கிச் சூட்டுக்கு சஞ்சனா ஏ.கே. பலியாகின்றார்.

காவல் துறைக்கே சவால் விடும் லோகேஷ் கனகராஜ் காவல் துறையினர் பார்வைக்கு எட்டாமல் ; அவர்கள் குண்டுகளுக்கு இரையாகாமல் தப்பி ஓடுகின்றார். அந்த நேரத்தில் இப்படத்தின் முதன்மை கதைநாயகி வாமிகா கபியை சந்திக்கின்றார்.

இப் படத்தின் முதன்மை நாயகி வாமிகா கபி தனக்கு பிடிக்காத நரக வாழ்க்கையை நரக வேதனையைப் பற்றி தெரிந்து கொள்ளும் லோகேஷ் கனகராஜ் அந்த நரகக் குழியிலிருந்து வாமிகா கபியை காப்பாற்றுகின்றார்.

லோகேஷ் கனகராஜ் என்பவரால் காப்பாற்றப்பட்ட வாமிகா கபி போக வழி தெரியாமல் வாழ வழித் தெரியாமல் தவிக்கும் இவரின் மனநிலையைப் புரிந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் தன்னுடன் பயணிக்க வருமாறு அழைக்க இவளும் உடன்பட்டு உடன் செல்கிறாள்.

பெண்ணாக பிறந்தவள் இரவில் தன்னந்தனியாக சேதாரம் இல்லாமல் என்று சுதந்திரமாக சுற்றி வருகின்றாளோ அன்று தான் இந்த நாட்டிற்கு முழுமையான சுதந்திரம் என்று மகாத்மா காந்தியடிகள் அன்று சொன்னாரே ! அந்த வாக்கு இன்றுவரை ஏனோ நிறைவேறவில்லை.

மகாத்மாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அவரே மறுபடியும் நம் நாட்டில் வந்து பிறக்க வேண்டும். பெண் சுதந்திரம் கிடைக்க இன்னொரு தர்மயுத்தம் நடத்த வேண்டும். அது முடியுமா ? சாத்தியம் ஆகுமா ? கேள்வி குறி நிமிர்ந்தால் ஆச்சரிய குறி நாம் நினைத்தால் ; இன்றைய இளைஞர்கள் நினைத்தால் நிச்சயம் பெண் சுதந்திரம் இந் நாட்டில் மலரும். ஆனால் இங்கு நடப்பது என்ன ? வேலியே பயிரை மேய்ந்தார் போல சில காவல் துறையினரே தவறுக்கு துணை போகும் போது பெண்ணுக்கு ஏது பாதுகாப்பு ? உயிரைக் காக்கும் மருத்துவரே உயிரைக் குடிக்கும் எமனாக ; தன் இச்சைக்கு பெண்மையை சூறையாடும் காமுகனாக இந் நாட்டில் காட்டு மிராண்டிகளாக சுற்றித் திரிந்தால் ஏது பெண்மைக்கு இங்கு பாதுகாப்பு ?

வாமிகா கபி தன்னைச் சீரழித்து தன் வாழ்க்கையை உருகுலைத்த மருத்துவரை பழித் தீர்க்க கொலை செய்து விடுகின்றார். கொலையாளியை ஒருபோதும் காவல்துறை விட்டு வைப்பதில்லை. வாமிகா கபியையும் பின் துரத்துகிறது காவல் துறை.

லோகேஷ் கனகராஜ் – வாமிகா கபி இவர்களைத் துரத்தும் காவல் துறை. அதிலிருந்து தப்பிக்க இவர்கள் செய்யும் முயற்சி .
காவல் துறைக்கும் – குற்றவாளி கூட்டத்திற்கும் இடையே மோதும் மோதலே கதையாக சொல்வது தான் ” டிசி ” என்னும் திரைப்படம்.

தெரியாமல் செய்வது தவறு . அதே தவறை மீண்டும் தெரிந்தே செய்தால் அது தப்பு. தப்பைத் தட்டிக் கேட்க காவல் துறை , நீதி துறை வரிசையாக நிற்க தனி மனிதனே தண்டிக்க ஆரம்பித்தால் நாட்டின் நிலைமை என்னவாகும் ?

தப்பு செய்தவர்களை தட்டிக் கேட்பது காவல் துறை. அந்தக் காவல் துறையே தப்பு செய்தால் ? அதையே தனி மனிதன் தட்டிக் கேட்டால் ? அவனுக்கு பட்டம் ரவுடி … குற்றவாளி… கொலைக்காரன் இப்படி பட்டியல் தொடர் வண்டியைப் போல நீளும்.

குற்றவாளி என்னும் அக்மார்க் முத்திரையை லோகேஷ் கனகராஜ் மீது காவல் துறை குத்த அந்த முத்திரையோடு இவர் களம் இறங்குகிறார்.

காவல் துறையால் தனக்கு ஏற்பட்ட இரணங்களை ஆற்ற மன வேதனையை தணிக்க களம் இறங்கும் இப் படத்தின் நாயகன் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை நாம் இரசிக்கும் வண்ணம் திரைமொழியில் அழகாக சொல்லியிருக்கின்றார் இப்படத்தின் திரைப்பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

இதுவரை இயக்குநராக வலம் வந்த லோகேஷ் கனகராஜ் நடிகனாக கதை நாயகனாக வலம் வர ஆரம்பித்திருக்கின்றார். அவரை வரவேற்போம். பாராட்டுவோம்.

தேவதாஸ் என்னும் கதாபாத்திரத்தில் அறிமுக அதிரடி கதைநாயகனாக லோகேஷ் கனகராஜ் களம் இறங்கி இருக்கின்றார். கதைக்கு பொருத்தமாக கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து தன் அளவான நடிப்பால் இரசிகர் மனத்தில் இடம் பிடித்திருக்கின்றார். ஆக்‌ஷன்
காட்சிகளில் மிரட்டு மிரட்டு என மிரட்டியிருக்கின்றார்.

முதன்மை கதை நாயகியாக வாமிகா கபி நடித்திருக்கின்றார். இல்லை இல்லை வாழ்ந்திருக்கின்றார். ஒரு பெண்ணுக்கு கற்பு பறிபோகும் போது அவள் படும் வேதனை சொல்லிமாளாது. ஏட்டில் எழுதினாலும் அடங்காது. அந்த வேதனையை நரக வேதனையை தன் உடல்மொழியால் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கின்றார் வாமிகா கபி.

இன்னொரு கதைநாயகி சஞ்சனா ஏ.கே. இவர் ஒருசில காட்சிகளில் வந்து போனாலும் இவரின் விபரீத முடிவு பார்வையாளர்களின் கண்ணீர் கரைந்து உருகும். இதயத்தை கனக்கச் செய்யும். அந்த வகையில் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

வழக்கம் போல நட்சத்திரப் பட்டாளங்கள் இப் படத்தினை தாங்கி நிற்கும் வைரத் தூண்கள் இவர்களை வரவேற்று இவர்களின் நடிப்பை பாராட்டுவோம் . பாராட்டுக்கு உரியோர் யார் யார் ? என்பதனை பார்ப்போமா ?

தலைவாசல் விஜய் , கஸ்தூரிராஜா , கிரிஷ் டய்ஹயால் , அவினாஷ் ரகுதேவன் , ஜவஹர் சக்தி , ஷரத் ரவி , பிரணவ் தியோஃபைன் , ஏ. ராஜரிஷி , பாலாஜி தேவிபிரசாத் , அட்டுல் இவர்களையும் பாராட்டுவோமே !

திரை விமர்சனத்தில் ” டிசி” என்னும் திரைப்படத்தினை பார்க்கும் பொழுது ஓர் உண்மை புலப்படுகிறது. வானத்திலிருந்து கீழே மழையாக வரும் மழை நீர் தூய்மையாக இருக்கின்றது அது விழும் இடத்தினைப் பொருத்து நல்ல நீரா , சாக்கடை நீரா என்று முடிவு பண்ணுகிறோம். அதைப்போல தான் மனிதன் பிறக்கும் பொழுது நல்லவனாக பிறக்கின்றான். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் ஒரு மனிதனை சூழ்நிலை கைதியாக்குகின்றன. குற்றவாளியே சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டால் இந்த பூமி தாங்காது என்பதனை மிக அழகாக இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப கதையை சொல்லியிருப்பது மிக அருமை. பார்க்க வேண்டிய படங்களுள் இதுவும் ஒன்று. எங்கள் பத்திரிகைக் குழுவினர் நடுநிலையோடு நின்று ஆய்ந்து தோய்ந்து உள்ளதை உள்ளபடி விருப்பு வெறுப்பு இன்றி நல்ல தீர்ப்பை , நல்ல தீர்வையை தந்து இருக்கின்றது. நீங்கள் படத்தினை தியேட்டரில் சென்று பாருங்கள். அதுவரை காத்திருப்பேன் எங்கள் பத்திரிகைக் குழு சார்பாக ! அடுத்த திரைப்படத்தின் திரைவிமர்சனத்தில் மீண்டும் சந்திப்போம்.அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ராஜேஷ் ஓகே டேக் ;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *