மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தலைமை அலுவலகம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிட திறப்பு விழா

Share the post

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்

தலைமை அலுவலகம்

மற்றும்

தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை

புதிய வெளிநோயாளர் பிரிவு

கட்டிட திறப்பு விழா

                  இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சிப் பெற்ற அமைப்பாக செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமமானது 2010 ஆம் ஆண்டு மத்திய ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ குழுமத்திலிருந்து பிரிந்து தனி அமைப்பாக செயல்படுகிறது.  மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் 2010 முதல் 2012 வரை புதுடெல்லியில் செயல்பட்டு வந்தது.  அதன்பிறகு 2012 முதல் 2022 வரை 10 வருடங்கள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

       சித்த மருத்துவத்தின் முறையான வளர்ச்சிக்காகவும், அடிப்படையான கட்டமைப்புகளுக்காகவும் தாம்பரம் சானிடோரியத்தில் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் ஒப்புதலுடன் 13 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கான தலைமை அலுவலகம் கட்ட முடிவானது. 

       இதனுடன் 2004 ஆம் ஆண்டு இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தாம்பரம் சானிடோரியத்தில் இயங்கி வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அயோத்தி தாச பண்டிதர் வெளிநோயாளர் பகுதியின் புதிய விரிவாக்கக் கட்டிடமும் 35 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கான செயல் திட்டம் தீட்டப்பட்டு, மே மாதம் 2 ஆம் நாள் 2018 ஆம் ஆண்டு மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. ஸ்ரீபாத் யசோ நாயக் முன்னாள் மத்திய ஆயுஷ் அமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.  தற்போது இந்த இரு கட்டிட வேலைகளும் சென்னையில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை அமைப்பினால் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள் சனிக்கிழமை அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா சிறப்பாக நடந்தேறியது.

       இந்த விழாவானது நேற்று தேசிய சித்த மருத்துவ வளாகத்திலுள்ள பயிலரங்கில் தமிழ்தாய் வாழ்த்து மற்றும் சித்தர் வணக்கப்பாடலுடன் இனிதே துவங்கியது. மத்திய ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குனர், பேராசிரியர். மரு. கே. கனகவல்லி அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்த மத்திய மாநில அமைச்சர்கள், விருந்தினர்கள், அரசு அலுவலர்கள், CPWD அலுவலர்கள், காவல் துறையினர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.  தொடர்ச்சியாக விருந்தினர்களால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.

       விழாவின் முக்கிய நிகழ்வாக மத்திய ஆராய்ச்சிக் குழுமத்தின் புதிய தலைமை அலுவலகக் கட்டிடம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை, புதிய வெளிநோயாளர் பிரிவு, விரிவாக்க கட்டிடம் ஆகியவை தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா. சுப்பிரமணியன் அவர்களின் முன்னிலையில் மாண்புமிகு இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் துறைமுகம், கப்பல் & நீர்வழி போக்குவரத்துத்துறை மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால் அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.

       இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை தலைமைச் செயலர் உயர்திரு. மருத்துவர். பி. செந்தில் குமார், இ.ஆ.ப. அவர்களும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் உயர்திரு. எஸ். கணேஷ், இ.ஆ.ப. அவர்களும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு. டி.ஆர். பாலு அவர்கள் இவ் அமைவிடம் குறித்தும் அதற்கான தமிழக அரசின் ஆகச்சிறந்த பங்களிப்பு குறித்தும் விளக்கினார். அவரைத் தொடர்ந்து  திருமதி கே. வசந்தகுமாரி, தாம்பரம் மாநகராட்சி மேயர் மற்றும் தாம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு. எஸ். ஆர். ராஜா தனது விளக்கவுரையை வழங்கினார். இந்திய அரசின், ஆயுஷ் அமைச்சக சிறப்பு செயலர் மாண்புமிகு. பிரமோத் குமார் பாடக் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.  

       தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா. சுப்பிரமணியன் அவர்கள் சித்த மருத்துவத்தின் தொண்மை மற்றும் தமிழக அரசு மற்றும் தமிழக முதலமைச்சரின் தொடர் நடவடிக்கையால் சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடங்கப்பட்டது குறித்தும் மக்களைத் தேடி மருத்துவம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் மற்றும் சித்த மருத்துவ கோவிட் மையங்கள் ஆகியவை தமிழக மக்களுக்காக செயல்படுத்த பட்டு வருவதை தனது சிறப்புரையில் கூறினார்.

       விழா நாயகரான இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் துறைமுகம், கப்பல் & நீர்வழிப் போக்குவரத்து துறை மத்திய அமைச்சர் மாண்புமிகு சர்ப்பானந்த சோனாவால் அவர்களின் தொடக்க உரையில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தில் சிறப்பாக சித்த மருத்துவத்திற்கு ஆற்றிவரும் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்தும் இவ்விரு புதிய கட்டிடங்களையும் 75 ஆம் வருட சுதந்திர தின அமுத விழாவில் இந்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக எடுத்துரைத்தார். மேலும் அவர் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் துவங்கி வைத்த பயோ இன்ஃபர்மேடிக்ஸ் பிரிவில் தொற்றா நோய்களான நீரிழிவு நோய், புற்று நோய், முடக்கு வாதம், வெண்படை, கருப்பை கட்டிகள், சிறுநீரக கற்கள் போன்றவையும் மற்றும் தொற்றும் நோய்களான டெங்கு, சிக்கன் குனியா, கோவிட் போன்ற நோய்கள் மீதான ஆராய்ச்சி மற்றும் காப்புரிமைகள் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார். மத்திய ஆராய்ச்சிக் குழுமத்தின் சாதனை குறித்த குறிப்பேடு, வெளியிட்டு நோய் எதிர்பாற்றலை ஊக்குவிக்கும் அமுக்கரா சூரணம் மாத்திரை விநியோகித்து பாரத பிரதமரின் இல்லம் தோறும் மூவர்ணக்கொடிதொடர் நிகழ்வினையும் தொடங்கி வைத்தார்.

     இந்நிகழ்ச்சியில் பங்கேற்று புதிய கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்பித்த மத்திய அமைச்சர், விருந்தினர்கள், அரசு அலுவலர்கள், CPWD அலுவலர்கள், காவல் துறையினர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அனைவருக்கும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர். மரு. இரா. மீனாகுமாரி அவர்கள் நன்றி கூறி நிறைவுரை ஆற்றினார்.

       இறுதியாக தமிழக கலாச்சாரம், 75 ஆம் சுதந்திர தின அமுதப்பெருவிழா மற்றும் சித்த மருத்துவ சிறப்புகளை எடுத்துரைக்கும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது.  நாட்டுப்பண்ணுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *