
கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
சத்யா சிவாஜி நாயகனாக நடிக்கிறார் – நாகா.KMI இயக்குகிறார் – விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்!
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் அர்ப்பணித்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. Arowana Pictures Pvt. Ltd. சார்பில் தீபா சிவாஜி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள CKN கல்லூரியில் நடைபெற்றது. நாகா. KMI எழுதி இயக்கும் இப்படத்தில் தயாரிப்பாளர் தீபா சிவாஜியின் மகன் சத்யா சிவாஜி, சி. கந்தசாமி நாயுடுவின் கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இன்றைய படபூஜை விழாவில் தயாரிப்பாளர் கமலக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்திய நாராயணன், பிரியங்கா, ரோபோ சங்கர், சோனியா, போஸ் வெங்கட் மற்றும் கந்தசாமி நாயுடு குடும்பத்தினர் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.







1885ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்த சி. கந்தசாமி நாயுடு, சிறுவயதில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறாத நிலையிலும் கல்வியின் முக்கியத்துவத்தை ஆழமாக உணர்ந்தவர். சென்னைக்கு வந்து செங்கல் சூளையில் தொழிலாளியாகப் பணியாற்றிய அவர், பின்னர் கொத்தனாராக உயர்ந்து சொந்தமாகச் செங்கல் சூளை தொடங்கி, தனது கடின உழைப்பால் பொருளாதாரத்தில் முன்னேறியவர். சாதாரண தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, சமூகத்தில் மதிக்கத்தக்க செல்வந்தராக உயர்ந்த அவரது பயணம் பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்தது.
தான் கல்வி கற்க முடியாமல் போன ஏக்கத்தை, மற்ற மாணவர்களுக்கும் அந்த நிலை ஏற்படக்கூடாது என்ற எண்ணமாக மாற்றிக்கொண்டவர் சி. கந்தசாமி நாயுடு. பச்சையப்பா அறக்கட்டளையுடன் இணைந்து கல்விப் பணிகளில் ஈடுபட்டதுடன், தனது சொத்தில் ஒரு பகுதியை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கிய அவரது கொடை உள்ளம் குறிப்பிடத்தக்கது. அவரது பெயரை நிலைநிறுத்தும் வகையில் 1967-68 கல்வியாண்டில் சென்னை அண்ணாநகரில் ஆண்களுக்கான கல்லூரியும், கடலூரில் பெண்களுக்கான கல்லூரியும் தொடங்கப்பட்டன. இக்கல்வி நிறுவனங்கள் மூலம் பல தலைமுறை மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
தனது வாழ்க்கைப் பயணத்தில் துணையாக நின்ற செல்லம்மாளின் அன்பும் ஆதரவும் அவரது லட்சியப் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது. உழைப்பு, கல்வி மீதான ஆர்வம், சமூக அக்கறை, கொடை உள்ளம் எனப் பல்வேறு அம்சங்களைக் கொண்ட சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கையை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இப்படம் உருவாகிறது. முதலில் அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாகவும், தொடர்ந்து முழுநீளத் திரைப்படமாகவும் உருவாக்கும் திட்டத்துடன் படக்குழு பணியாற்றுகிறது.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு பாபு கே. செல்வராஜன், இசை ஜோஸ் பிராங்க்ளின், படத்தொகுப்பு வி.எம். சந்தோஷ், ஒலி வடிவமைப்பு ஏ. சதீஷ்குமார், விஷுவல் எஃபெக்ட்ஸ் Absolute Frames, மக்கள் தொடர்பு ஆர். மணி மதன், ஸ்டில்ஸ் எஸ்.எஸ். சுரேஷ்நிதின், கலை வடிவமைப்பு சரண் ஆகியோர் பணியாற்றுகின்றனர். படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இன்று நடைபெற்ற பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
PRO மணி மதன்