
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் – குஷ்பு பேட்டி
இன்று நடைபெறும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அவற்றைச் சங்க உறுப்பினர்களிடம் எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. இன்றைய கூட்டத்தில் ஏராளமான தயாரிப்பாளர்கள் பங்கேற்றிருப்பது தங்களுக்குப் பெரும் பலமாக இருப்பதாகக் குறிப்பிட்ட குஷ்பு, தயாரிப்பாளர்கள் நலமாக இருந்தால்தான் சங்கமும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று தெரிவித்துள்ளார்.



இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உள்ளது. ஆனால், திரைக்கு முன்னால் இருப்பவர்களை மட்டுமே மக்கள் அதிகம் அறிந்துள்ளனர். திரைக்குப் பின்னால் இருந்து பணியாற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பலருக்கும் தெரிவதில்லை. இத்தகைய பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காகவே இந்தக் கூட்டம் நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சங்கத்தில் உள்ள பல தயாரிப்பாளர்கள் தற்போது தொடர்களைத் தயாரித்து வருவதாகவும், சிலர் புதிய தொடர்களைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளின்போது ( FEFSI) பெப்சியின் தலைவர் திரு RK செல்வமணிஅவர்கள் தொடர்ந்து ஆதரவாக இருப்பதாகக் குறிப்பிட்ட குஷ்பு, பிற சங்கங்களைச் சேர்ந்தவர்களும் தங்களுக்குப் பெரும் ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் இந்தக் கூட்டம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தப் பொதுக்குழுக் கூட்டதத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள், மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் மற்றும் சில ஆச்சரியமூட்டும் அறிவிப்புகள் குறித்தும் தயாரிப்பாளர்களுடன் பகிர்ந்துகொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை நிதி சார்ந்தது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
தற்போது அனைத்துப் பொருட்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. ஆனால், தயாரிப்பாளர்களுக்குத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தொகை மட்டும் உயர்வதில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும், ஆனால் தயாரிப்பாளர்களுக்கு எந்தத் தொலைக்காட்சி நிறுவனமும் உரிய வகையில் ஊதிய உயர்வு வழங்குவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இன்று பேசப்படும் அதே தொகை, பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் வழங்கப்படும் நிலை இருப்பதாகக் கூறியுள்ளார்.
சந்தையில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் தொகை மட்டும் உயர்வதில்லை. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டிய சூழலில், தயாரிப்பாளர்கள் அதற்கான நிதியை எவ்வாறு ஏற்பாடு செய்வார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இத்தகைய பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு நிதி தேவைப்படுவதாகவும், அதற்காகத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.
சங்கத்திற்கெனத் தனியாக ஓர் இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக முதலமமைச்சர் திரு சி ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
சங்கத்திற்கான நிதியைத் திரட்டும் நோக்கில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க நடிகர் சிலம்பரசன் STR ஒப்புக்கொண்டுள்ளதாகவும், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று அவர் உறுதியளித்துள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
திரைத்துறை மட்டுமின்றி, பிற துறைகளைச் சேர்ந்தவர்களும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சங்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகத் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசின் ஓ.டி.டி. தொடர்பான முடிவு குறித்த கேள்விக்குப் பதிலளித்த குஷ்பு, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொறுத்தவரையில், ஓ.டி.டி. தளங்கள் ஏற்கெனவே தங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஓ.டி.டி. தளங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் தங்களுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரைக் கலைஞர்களின் வளர்ச்சி குறித்துக் குஷ்பு பேச்சு* :
கலைஞர்களை ஒரு குறிப்பிட்ட தொடரில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது எனக் குஷ்பு தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற கலைஞர்கள் பல்வேறு பின்னணிகளில் இருந்து வளர்ந்து வந்து, இன்று திரைத்துறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர். இதன் மூலம், கலைஞர்களின் வளர்ச்சியில் சின்னத்திரையும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சின்னத்திரையில் இருந்து தொடங்கி இன்று பெரிய நட்சத்திரங்களாக உயர்ந்துள்ள கலைஞர்கள், தற்போது சின்னத்திரைக்கு தங்களது ஆதரவை வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது சின்னத்திரைக்குக் கிடைத்த பெருமையாகவும் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்துப் பேசிய குஷ்பு, ஒவ்வொரு தொழில்நுட்பத்திற்கும் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பதைப் போல, தொழில்நுட்ப வளர்ச்சியிலும் நல்லதும் கெட்டதும் இருக்கலாம். அதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், குறிப்பாகப் பெண்களைப் பாதிக்கும் வகையில் போலியான காணொளிகளை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
ஒரு பெண்ணாகவோ, நடிகையாகவோ அல்லது வேறு எந்தத் துறையைச் சேர்ந்தவராகவோ இருந்தாலும், மற்றவர்களைப் பாதிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு முன்பு, தங்களது குடும்பத்தில் உள்ள பெண்களை வைத்து அத்தகைய காணொளிகளை உருவாக்கிப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு செய்தால் மட்டுமே, அத்தகைய செயல்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர முடியும் என்று செய்தியாளர்களிடம் குஷ்பு தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சார்பில் அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குஷ்பு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, படப்பிடிப்புக்கான இட அனுமதியைப் பெறுவதில் பல சிரமங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்குத் தீர்வாக, இணையவழியில் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் அனுமதி கிடைக்கும் வகையில் ஒரு நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தயாரிப்பாளர்கள் அமர்வதற்கும் பணிகளை மேற்கொள்வதற்கும் உரிய இடவசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், அதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேபோன்று, தயாரிப்பாளர்களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் FEFSI பெப்சியின் தலைவர் திரு RK செல்வமணி , பெப்சியின் செயலாளர் திரு சுவாமிநாதன் , சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு மங்கை ஹரிராஜன் , இயக்குனர் தளபதி , சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் திரு பாரத் , சின்னத்திரை எழுத்தாளர் சங்க தலைவர் திரு பத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் STEPS சங்கத்தின் தலைவர் திருமதி குஷ்பு சுந்தர் , செயலாளர் குட்டி பத்மினி , பொருளாளர் திரு RD பாலேஷ்வர் , foundar member – திரு அழகன் தமிழ்மணி , advisory members – YG மகேந்திரா ,சுஜாதா விஜயகுமார், முரளிராமன் , உப தலைவர்கள் – அபு பாக்கர் சித்திக் , டிவி சங்கர் , துணை செயலாளர்கள் – மதி ஒளி குமார் , மாலினி ஜெயச்சந்திரன் , AH ஷெரீஃப், மற்றும் திருமதி புஷ்பா கந்தசாமி உட்பட பல தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.