







‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின்
அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு
ஆவணப்படம்!
- ‘நான்கு ஆண்டுகால உழைப்பில் உருவான ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் பார்க்கும் ஆழ்ந்த அனுபவத்தை வெள்ளித்திரையில் அளிக்கிறது.’
சென்னை, செப்டம்பர் 4, 2026: தமிழ் நாட்டின் காடுகளையும், இங்கு வாழும் உயிரினங்களையும் இதுவரைக்கும் நாம் பார்த்திராத கோணத்தில் கண்டுணர வைக்கும் ‘வைல்ட் தமிழ்நாடு’ (Wild Tamil Nadu) ஆவணப்படம். செப்டம்பர் 7-ஆம் தேதி திங்கட்கிழமை முதல், தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் பிவிஆர் சினிமாஸ் (PVR Cinemas) திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. தமிழ்நாட்டின் விதவிதமான நிலப்பரப்புகளையும், காட்டுயிர்களையும் பார்க்கும் ஒரு ஆழ்ந்த திரையரங்கு அனுபவத்தை இந்த ஆவணப்படம் ரசிகர்களுக்கு அளிக்கும்.
சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (Sundram Fasteners Ltd.) பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாடுகளின் முன்னெடுப்பாக, ‘நேச்சர் இன்:ஃபோகஸ்’ (Nature inFocus) நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு வனத்துறையின் ஆதரவோடு இந்த ஒரு மணி நேர ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்து, மலைகள், காடுகள், விளைநிலங்கள், கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் வறண்ட நிலப்பரப்புகள் என தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் செழுமையையும் அதன் பல்லுயிர் பன்முகத்தன்மையையும் இந்த திரைப்படம் ரசிகர்களின் கண்முன்னே நிறுத்துகிறது.
பழந்தமிழ் சங்க இலக்கியத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி (மலைகள்), முல்லை (காடுகள்), மருதம் (விளைநிலங்கள்), நெய்தல் (கடற்கரைகள்) மற்றும் பாலை (வறண்ட நிலங்கள்) ஆகியவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’, இந்த மாறுபட்ட இயற்கை சூழல்களில் வாழும் வனவிலங்குகளை நேர்த்தியாக படம்பிடித்திருக்கிறது. யானைகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற பரிச்சயமான விலங்குகளுடன், செங்குரங்கு (Lion-tailed macaque), மின்மினிப் பூச்சிகள் மற்றும் அரிதாக மட்டுமே கண்ணில் தென்படும் மெட்ராஸ் முள்ளெலி (Madras hedgehog) உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்க்கையையும் இந்த ஆவணப்படம் திரையில் நேரடி அனுபவம் போல உணரச் செய்கிறது.
‘வைல்ட் தமிழ்நாடு’ படத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
இயக்கம்: இயற்கை மற்றும் வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் கல்யாண் வர்மா இதை இயக்கியுள்ளார்.
பின்னணிக் குரல்: பிரபல நடிகர் அரவிந்த் சுவாமி தனது கம்பீரமான குரலில் வண்ணனை (Narration) செய்துள்ளார்.
இசை: மூன்று முறை கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், கர்நாடக இசையையும் மேற்கத்திய வாத்தியங்களையும் நேர்த்தியாக இணைத்து இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு: தென்னிந்தியாவைச் சேர்ந்த திறமையான ஒளிப்பதிவாளர்கள் குழுவினர் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து களத்தில் தங்கி காட்சிகளைப் பதிவு செய்துள்ளனர்.
திரைப்படம் மற்றும் அதன் பரவலான திரையரங்கு வெளியீடு குறித்து சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி ஆரத்தி கிருஷ்ணா (Ms. Arathi Krishna, Managing Director, Sundram Fasteners Ltd.) பேசுகையில், “நமது இயற்கை பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் இதுபோன்ற சிறந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் பெருமிதம் கொள்கிறது. தமிழ்நாட்டின் வனப்பகுதிகளின் எழிலையும், அதன் பல்வேறு நிலப்பகுதிகளில் காணப்படும் அச்சரியமூட்டும் பல்லுயிர் சூழலையும் ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம் மிக நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது. பிவிஆர் திரையரங்குகள் வாயிலாக இந்த ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், இந்த கதைகள் அனைவரையும் எளிதில் சென்றடையச் செய்வதோடு, இயற்கை உலகின் மீது ஆழ்ந்த அன்பையும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடையே உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.
இயக்குநர் கல்யாண் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை பாரம்பரியத்தை ஒரு சினிமா அனுபவமாக வழங்குவதற்காக பல ஆண்டுகள் காடுகளிலும், மலைகளிலும், பல்வேறு நிலப்பகுதிகளிலும் இரவுபகல் பாராமல் களத்தில் நின்று எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்துள்ளது. பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படம், தமிழகத்தின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் எழில்மிகு நிலப்பகுதிகளையும் நேரடியாக பார்க்கும் அனுபவத்தை வெள்ளித்திரை மூலம் உணரச் செய்கிறது.
பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகும் ‘வைல்ட் தமிழ்நாடு’, காடுகள் மற்றும் மலைகள் தொடங்கி கடற்கரைகள் மற்றும் வறண்ட நிலங்கள் வரை தமிழ்நாட்டின் அடங்கியிருக்கும் பல்வேறு இயற்கை உலகங்களை பார்வையாளர்கள் அறிந்துகொள்ள ரசிகர்களை அழைக்கிறது. மாபெரும் திரை இணையும் இயற்கை பாரம்பரியத்தை, திரையரங்குகளுக்கே உரிய பிரம்மாண்டத்துடனும் நேரடி அனுபவத்துடனும் உணரும் வகையில் ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.