நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரை விமர்சனம
பூர்வா புரொடக்ஷன்ஸ் – பிரதீப் குமார் தயாரித்து
பிரசாத் ராமர் இயக்கி ,
செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ் செல்வி இவர் நடிப்பில்வெளி வந்திருக்கும் படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே !
இசை: பிரதீப் குமார்
மதுரையைச் சேர்ந்த நாயகன் செந்தூர் பாண்டியன் படித்துவிட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல், காதல் என்ற பெயரில் செல்போனில் பெண்களிடம் கடலைப்போடுவது,
திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்று கசமுசா செய்வது என்று வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே ஃபேஸ்புக் மூலம் நட்பாகும் நாயகி ப்ரீத்தி கரணை அவரது பிறந்தநாளன்று சந்திக்க முடிவு செய்யும் செந்துர் பாண்டியன், மற்ற பெண்களைப் போலவே அவரையும் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளும் எண்ணத்தோடு மாயவரம் பயணிக்கிறார்.
அதன்படி, ப்ரீத்தி கரனை சந்திக்கும் செந்தூர் பாண்டியன், திரையரங்கிற்கு அவரை அழைத்துச் செல்ல முயற்சிக்க, அவரோ திரையரங்கம் வேண்டாம், பூம்புகார் செல்லலாம் என்று சொல்ல, இருவரும் மாயவரத்தில் இருந்து பூம்புகார் செல்கிறார்கள். அங்கு சென்றவுடன் செந்தூர் பாண்டியனின் எண்ணம் நிறைவேறியதா?, ஃபேஸ்புக் மூலம் நட்பான செந்தூர் பாண்டியனுடன் பைக்கில் பயணிக்கும் ப்ரீத்தி கரணின் மனநிலை என்ன? என்பதை, இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு சொல்வது தான் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’.
படத்தின் ஆரம்பக்காட்சியே இந்த படத்திற்கு எதற்காக ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிய வைத்துவிடுகிறது
அதை தொடர்ந்து வரும் காட்சிகளும், நண்பர்களுக்கு இடையிலான உரையாடல்கள் அத்தனையும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான படம் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் செந்தூர் பாண்டியனுக்கு இது தான் முதல் படம். ஆனால், அதை வெளிக்காட்டாமல் மிக இயல்பாக நடித்திருக்கிறார். ஒரு நடிகருக்கான எந்த இமேஜும் இல்லாமல், நாம் அன்றாட சந்திக்கும் சக மனிதராக வரும் அவரது ஒவ்வொரு அசைவுகளும் தற்போதைய இளைஞர்களின் மனநிலையையும், வக்கிர எண்ணத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
மாடல் துறையைச் சேர்ந்த ப்ரீத்தி கரண் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சொன்னால் மட்டுமே அவர் மாடலாக இருக்கிறார் என்பது தெரியுமே தவிர, படத்தில் அப்படிப்பட்ட எந்த ஒரு அறிகுறியும் இன்றி பக்கத்து வீட்டு பெண் போல் மிக எளிமையாக நடித்திருக்கிறார். “காதல் என்ற பெயரில் கூட்டிட்டு வந்து நீங்க தடவுவீங்க, நாங்க சும்மா இருக்கணுமா?” என்று அவர் கேட்கும் கேள்வி, பெண்களின் மனநிலையை பிரதிபலிப்பதோடு, பெண்கள் எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் சுரேஷ் மதியழகன், வயதுக்கு ஏற்ற ஏக்கத்தோடு வலம் வரும் காட்சிகளும், நண்பனுக்காக ஆணுறை வாங்கும் காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார். இவரும் புதியவர் தான், ஆனால் நடிப்பில் அசத்தியிருக்கிறார்
நாயகியின் தோழியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி, அவரது தங்கையாக நடித்திருக்கும் தமிழ்செல்வி ஆகியோரும், அவ்வபோது தலைக்காட்டும் சிறு சிறு நடிகர்களும் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல் கதாபாத்திரங்களைப் போலவே காட்சிகளையும் மிக எளிமையாக படமாக்கியிருக்கிறார்.
பிரதீப் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் வித்தியாசமான முயற்சியாக இருப்பதோடு, கவனம் ஈர்க்கவும் செய்கிறது. பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது.
தற்போதைய காலக்கட்ட இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்?, பெண்கள் மீதான அவர்களது மனநிலை எப்படி இருக்கிறது, என்பதை வெளிக்காட்டியிருக்கும் இயக்குநர் பிரசாத் ராமர், பெண்களின் மனநிலை மற்றும் எதிர்பார்ப்பையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இது தவறு, இது சரி என்று சொல்லாமலும், இதை செய்யுங்கள், இதை செய்யாதீர்கள் என்று அறிவுரை சொல்லாமல், இருட்டில் நடக்கும் சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். அதே சமயம், இளம் வயதில் எப்படி வாழ்ந்தாலும், சூழல் அவர்களை பக்குவப்படுத்தும் என்பதையும் புரிய வைத்திருக்கிறார்.
குறைவான பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர், அதற்காக மதுரையில் நான்கு தெரு மட்டுமே இருக்கிறது, மெட்ராஸில் இருக்கும் வசதி இல்லை என்றெல்லாம் சொல்வது காதில் வாழைப்பூ சுற்றுவது போல் இருக்கிறது.
மொத்தத்தில், ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ கெட்ட பசங்க சார்.