வீட்டிலிருந்தே யோகா பயிற்சிகள்: கொண்டாடி மகிழும் கலர்ஸ் தமிழ்!சர்வதேச யோகா தினம் 2021 அனுசரிப்பு, உடற்தகுதி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறது
~மெய்நிகர் (ஆன்லைன்) யோகா அமர்வை ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் – சென்ட்ரல், பிரபல யோகா பயிற்றுனர்கள், இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் விளையாட்டுத்துறை ஆலோசகர்களின் ஒத்துழைப்போடு நடத்துகிறது~
சென்னை, 21 ஜுன் 2021: கோவிட் பெருந்தொற்று இரண்டாவது அலையின் தாக்குதல் நிலவும் இக்காலகட்டத்தில் மக்களது உணர்வு, மனம் மற்றும் உடல் நலத்தின் மீது யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சர்வதேச யோகா தினம் 2021 திங்களன்று அனுசரிக்கப்படுவதை கொண்டாடுவதற்காக கலர்ஸ் தமிழின் பிரபல நட்சத்திரங்கள் மெய்நிகர் முறையில் ஒருங்கிணைந்து பங்கேற்றனர். இந்த மெய்நிகர் யோகா அமர்வை கலர்ஸ் தமிழ் அலைவரிசை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சென்ட்ரல் என்பதன் கூட்டாண்மையோடு நடத்தியது. இந்நிகழ்விற்காக நாடெங்கிலுமிருந்து பிரபல உடல்நல நிபுணர்கள், விளையாட்டு சிகிச்சை ஆலோசகர்கள், பிரபல யோகா பயிற்றுனர்கள், உடற்தகுதி வல்லுனர்கள் மற்றும் இயன்முறை மருத்துவ நிபுணர்கள் என பலதரப்பட்ட பிரிவினரும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தனர். ஆரோக்கியமான நுரையீரல்களின் முக்கியத்வத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்திய இச்செயல்திட்டத்தில் பிராணயாமா என அழைக்கப்படும் மூச்சுப்பயிற்சி மற்றும் சூர்ய நமஸ்காரம் ஆகியவற்றோடு அடிப்படை யோகக்கலை பயிற்சிகள் இடம்பெற்றன. தங்களது தினசரி வாழ்க்கையில் எந்தவொரு நபரும் எளிதாக செய்யக்கூடிய அடிப்படை யோகா பயிற்சிகள் இதில் செய்முறை விளக்கத்தோடு கற்றுத்தரப்பட்டன.
தனது பார்வையாளர்களுக்காக முகநூல் நேரலை வழியாக ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த மின்-யோகா நிகழ்ச்சியை ஆயர்வேதாவின் பிரபல நிபுணர்கள் மற்றும் உடற்தகுதி பயற்சியாளர்கள் தலைமையேற்று வழிநடத்தினர். டாக்டர். தர்மேஷ் குபேந்திரன் (விளையாட்டு சிகிச்சை ஆலோசகர் – டிரிம்மர்ஸ் & டோனர்ஸ்) டாக்டர். சிம்ரன்ஜித் கௌர் (தசை எலும்புக்கூட்டியல் இயன்முறை நிபுணர், மகளிர் உடல்நல பயிற்சியாளர் மற்றும் பல்வேறு பிரபலங்களுக்கு ஆலோசகராக செயல்படுபவர்), டாக்டர். கிருஷ்ண ஷா (ஸ்பைன் ஆக்ஷன் என்பதன் முதுநிலை இயன்முறை சிகிச்சை வல்லுனர்), நதியா (ஆயுர்வேதா நிபுணர் மற்றும் யோகா சிகிச்சையாளர்), திருமதி. சுப்ரியா சுந்தர்ராமன் (ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் – ன் தலைவர்) ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுள் சிலராவர். இப்பெருந்தொற்றின்போது மனஅழுத்தத்தை எப்படி சமாளிப்பது, உடலில் நெகிழ்வுத்திறனை எப்படி கொண்டிருப்பது மற்றும் ஒட்டுமொத்த நலம் ஆகிய அம்சங்கள் குறித்து அனுபவம் மிக்க நிபுணர்கள் இந்த அமர்வில் உரையாற்றினர். தினசரி உடல்நல செயல்முறையாக சுவாசத்தை மேம்படுத்துதல், யோகக்கலைப் பயிற்சிகள் மற்றும் பிற பயனளிக்கக்கூடிய உடற்பயிற்சிகள் குறித்து சிறப்பான ஆலோசனை குறிப்புகளையும் அவர்கள் வழங்கினர். யோகா மீது நிலவுகின்ற தவறான கண்ணோட்டங்களையும், புனைவுகளையும் அகற்றும் நோக்கத்தோடு சரியான உடல்தோரணை மற்றும் அதிக நேர்மறை உணர்வு, புத்துணர்ச்சியோடு மனஅழுத்தமில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை அதிக ஆற்றல் அளவுகளோடு வாழ்வதன் முக்கியத்துவம் பற்றியும் இந்த அமர்வில் அவர்கள் விவாதித்தனர்.
அனைவருக்கும் பயனளிக்கும் இச்சிறப்பான முன்னெடுப்பு குறித்துப்பேசிய கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன், “மனஅழுத்தத்தை சமாளிப்பதும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதும் மிக முக்கியத் தேவைப்பாடாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. எனினும், முன்கணிக்க இயலாத, சவால்மிக்க இந்த காலகட்டத்தின்போது இன்னும் அதிக தீவிரத்தோடு இதை மனதில் இருத்தி செயல்படுவது அவசியமாகும். சர்வதேச யோகா தின அனுசரிப்பிற்காக தொடர்ந்து இரண்டாவது முறையாக ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சென்ட்ரல் உடன் நாங்கள் கூட்டாக இணைந்திருக்கிறோம். ஆன்லைன் முறையில் நடைபெற்ற இந்த வெற்றிகரமான மெய்நிகர் அமர்வு குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சியும், திருப்தியும் கொண்டிருக்கிறோம். ஆரோக்கியமான இத்தகைய முனைப்புத்திட்டத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டிருப்பது எங்களுக்கு கிடைத்திருக்கும் கௌரவமாகும். வழக்கமான பணி செயல்பாடுகள் மற்றும் பிற கடமைப்பொறுப்புகள் அல்லாது இருக்கக்கூடிய பிற ஆர்வமூட்டும் ஏராளமான நல்ல விஷயங்களை நாம் நமது தினசரி வாழ்க்கையில் சேர்த்துக்கொள்வதும், அவற்றை ஆராய்வதும் அவசியம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று கூறினார்.
இந்த சிறப்பான முனைப்புத்திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்றது குறித்து தங்கள் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொண்ட கலர்ஸ் தமிழின் நட்சத்திரங்கள் வெளியிட்டிருக்கின்ற ஒரு கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: நல்ல ஆரோக்கியம், மனஅமைதி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மூலம் எண்ணற்ற நபர்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றம் ஏற்படுவதற்கு உத்வேகம் அளிக்கும் சக்தியாக உடல்தகுதி, ஆரோக்கியம் மற்றும் யோகா ஆகிய அம்சங்கள் எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்நிலையில், தங்களது சிறப்பான அமர்வுகள் வழியாக இச்சமூகத்திற்கு நிகரற்ற சேவையை வழங்கி வந்திருக்கின்ற உடற்தகுதி, யோகா மற்றும் உடல்ஆரோக்கிய வல்லுனர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம் செய்முறை விளக்கத்துடன் வழிகாட்டப்பட்ட, மகிழ்ச்சியளிக்கும் ஒரு அனுபவமாக இந்த அமர்வு இருந்தது,”
அதிகாலை வேளையில் நடைபெற்ற இந்த யோகா அமர்வில் பிரபல நகைச்சுவை நடிகர் படாவா கோபி, கலர்ஸ் தமிழின் ‘அபி டெய்லர்ஸ்’ நெடுந்தொடரிலிருந்து ரேஷ்மா முரளிதரன், சஞ்சய் ராஜா மற்றும் சுஜு, ‘சில்லுனு ஒரு காதல்’ நெடுந்தொடரிலிருந்து சமீர், தர்ஷினி, ஹன்னா, வி.ஜே. அயூப் மற்றும் ஷ்யாம் மற்றும் ‘அம்மன்’ நெடுந்தொடரிலிருந்து அமல்ஜித், பவித்ரா, வைகா மற்றும் ஹரிசங்கர் ஆகிய சின்னத்திரை நட்சத்திரங்களுடன் இன்னும் பலரும் கலந்து கொண்டனர். இவர்களது ஆர்வமிக்க, தீவிர பங்கேற்பு இந்த யோகா தின அமர்வை இன்னும் பிரபலமானதாக, ஆர்வத்தை அதிகரிப்பதாக அமைந்திருந்தது.