நாயகனுடன் நெருக்கம் காட்டி நடித்தது ஏன் ; ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர் விளக்கம்
ஒரு பக்கம் வருத்தம்.. இன்னொரு பக்கம் மகிழ்ச்சி ; இருவித ரியாக்சன் காட்டும் ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர்

2019-ல் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் ஜீவி. வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்திருந்தார், ரோகிணி, ரமா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படத்தை V.J. கோபிநாத் இயக்கியிருந்தார்.

இந்தநிலையில் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் ஜீவி-2 என்கிற பெயரில் உருவாகி கடந்த ஆக-19ல் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியானது.
..
முதல் பாகத்தை போலவே கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல், அடுத்தடுத்த திருப்பங்களுடன் வெளியாகியுள்ள இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் தங்கள் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

முதல் பாகத்தில் இடம்பெற்ற அதே கலைஞர்கள், தொழில்நுட்ப குழுவினர் என பலரும் இந்தப்படத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக இந்தப்படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக வெகு இயல்பாக நடித்துள்ள நாயகி அஸ்வினி சந்திரசேகருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அஸ்வினி சந்திரசேகர் பெங்களூருவை சேர்ந்தவர். ஆர்க்கிடெக் படித்திருந்தாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்குள் நுழைந்தவர். முறைப்படி கிளாசிக் டான்ஸ் கற்றவர். தமிழில் இவர் நடித்த மெர்லின் என்கிற படம் வெளியாகியுள்ள நிலையில் ஜீவி-2 தவிர, கால் டாக்சி, மரகதக்காடு, டைட்டில், காதல் புதிது ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். சமீபத்தில் கூட மலையாளத்தில் நடிகர் நிவின்பாலியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஜீவி-2 படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அஸ்வினி சந்திரசேகர்.

“ஜீவி திரைப்படம் எனக்கு தமிழில் நல்ல ஒரு என்ட்ரி ஆக அமைந்துவிட்டது. ஆடிஷன் மூலமாகததான் ஜீவி பட வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் முன் இரண்டு கதாபாத்திரங்கள் இருந்தன. அதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரை தேர்வு செய்தேன். ஆனால் அதில் நடிப்பது சவாலாக இருந்தது. இயக்குநர் கொடுத்த ஆலோசனைகளையும், நிஜத்தில் நான் பார்த்த சிலரையும் மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன்.

ஆனால் இரண்டாம் பாகத்தில் எனக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பழக்கமாகி விட்டது. சொல்லப்போனால் இதில் அந்த கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் செய்து நடித்துள்ளேன். முதல் பாகத்தில் எனது போர்ஷன் கொஞ்சம் குறைவு தான். காரணம் கதை பல கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து சுற்றி வந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்திரம் படம் முழுவதும் வரும் விதமாக கதை அமைந்துள்ளது.
.
முதல் பாகத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என படத்தில் நடித்த சமயத்தில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.. அதிலும் இரண்டாம் பாகம் உருவாகும் என்றெல்லாம் நினைத்தே பார்க்கவில்லை.. எல்லாம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

கோவிட் சமயத்தில் அமேசான் பிரைமில் ஜீவி முதல் பாகத்தை பார்த்து விட்டு சிங்கப்பூர், மலேசியா என பல இடங்களில் இருந்து இருந்து போன் செய்து பேசினார்கள். இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன் என அது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போதெல்லாம் கூட நிறைய பேர் இந்தப்படம் பற்றி ஆவலாக விசாரித்தார்கள்.
முதல் பாகத்தில் பணியாற்றிய அதே டீம் என்பதால் ஒரு குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. ரோகிணி, ரமா, மைம் கோபி, கருணாகரன் என சீனியர் நடிகர்களுடன் இணைந்து நடித்ததில் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான்..

நாயகன் வெற்றி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இந்தப்படத்தில் ‘நீ நீ போதுமே’ என்கிற பாடலில் நாயகனுடன் ரொம்பவே நெருக்கமாக நடித்துள்ளீர்களே என பலர் கேட்கின்றனர்.. அது கதைக்கு தேவையாக இருந்தது. அதனால் சில விஷயங்களில் துணிச்சலாக இருக்கவேண்டும். தவிர வலிந்து திணித்தது போன்ற காட்சிகள் எதுவுமே எடுக்கப்படவில்லை.

இந்த இரண்டாம் பாகம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை என்பதில் கொஞ்சம் வருத்தம் தான். அதேசமயம் ஒடிடியில் ரிலீஸானாதால் உலகம் முழுக்க அதிக அளவிலான ரசிகர்கள் இந்தப்படத்தை பார்த்திருக்கிறார்கள் என நினைக்கும்போது இன்னொரு பக்கம் மகிழ்சியாகவும் இருக்கிறது” என்று கூறியுள்ளார் அஸ்வினி சந்திரசேகர்..