வேல்ஸ் பட்டமளிப்பு விழா – 05.08.2022
சென்னை, பல்லாவரம், வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் பன்னிரெண்டாம் ஆண்டுப் பட்டமளிப்பு விழா 05.08.2022 அன்று நண்பகல் 12.00 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றிப் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.


வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ்
அவர்கள் தலைமையில் நிகழ்ந்த இவ்விழாவில், துணைவேந்தர் பேராசிரியர் ச.ஸ்ரீமன்நாராயணன் அவர்கள் வரவேற்புரையாற்றி, 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வழங்கினார்.


இவ்விழாவில், புகழ்பெற்ற நான்கு ஆளுமைகளான பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் அஜித்குமார் மொஹந்தி, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.சங்கர், இந்திய கிரிக்கெட் வீரர் திரு.சுரேஷ்குமார் ரெய்னா, ராடிசன் ப்ளூ குழுமத் தலைவர் திரு.விக்ரம் அகர்வால்
ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இந்தக் கல்வியாண்டில் 68 தங்கப் பதக்கங்களும் 48 வெள்ளிப் பதக்கங்களும் 43 வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் 4011 இளநிலைப் பட்டங்களும் 583 முதுநிலைப் பட்டங்களும் 87 ஆய்வியல் நிறைஞர் பட்டங்களும் 148 முனைவர் பட்டங்களும் என மொத்தம் 4829 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக செயல் பட்ட மாணவர்கள் சிலரின் முயற்சிகள் மற்றும் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) பேராசிரியர் ஏ.ஜோதிமுருகன், இணைவேந்தர் (கல்வி) முனைவர் ஆர்த்தி கணேஷ், வேல்ஸ் கல்விக்குழுமத் துணைத்தலைவர் செல்வி பிரித்தா கணேஷ், பதிவாளர் பேராசிரியர் பெ.சரவணன், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் அ.உதயகுமார், பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி அலுவல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்கள், இளம்பட்டதாரிகள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் எனப் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வு வண்ணமிகு வேல்ஸ் கல்வித் திருவிழாவாக நடந்தேறியது.