“தக்ஸ்” திரைப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக விழா !
HR Pictures சார்பில் ரியா சிபு தயாரிப்பில், பிருந்தா இயக்கத்தில் உருவாகி இருக்கும் “தக்ஸ்” திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு.



HR Pictures சார்பில் ரியா சிபு தயாரிப்பில், இந்திய அளவில் புகழ் பெற்ற முன்னணி நடன இயக்குநரான, பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ்காந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக்ஸ்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழா, இன்று சத்யம் திரையரங்கில் திரை பிரபலங்கள் முன்னிலையில் அரங்கேறியது.

ஆர்யா, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தேசிங்கு பெரியசாமி, ரவியரசு, நடிகை குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், கலா மாஸ்டர் இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றனர்.

இத்திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை பிரியேஷ் குருசாமியும், படத்தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனியும் செய்கின்றனர். புரொடக்ஷன் டிசைனர் – ஜோசப் நெல்லிகல்
இவ்விழாவினில்….

நடிகர் ஆர்யா கூறியதாவது..,
“பிருந்தா மாஸ்டர் உடன் பல படங்கள் பணிபுரிந்துள்ளேன். அவருடைய நிஜ கதாபாத்திரம் ஆக்ஷனோடு தான் இருக்கும். அது இந்த படத்தில் பிரதிபலித்து இருக்கிறது. பவர்புல்லான ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருக்கிறது. படத்தின் டீசரில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. தயாரிப்பாளர் சிபு, எல்லாவற்றிலும் தனித்துவத்தை எதிர்பார்க்கும் ஒருவர், இந்தப் படம் அவர் நினைத்தது போல் இருக்கும். இந்த படத்திற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.”

இயக்குனர் கௌதம் மேனன் கூறியதாவது..,
“பிருந்தா ஒரு மான்ஸ்டர், என்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்கள் சிறப்பாக வர அவரும் ஒரு காரணம். வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க பாடலில் வரும் ஆக்ஷன் பகுதிகளை அவர் தான் இயக்கினார். அதனால் அவர் ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்குகிறார் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமில்லை, அவர் கண்டிப்பாக பெரிய இடத்தை தொடுவார். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ”

இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கூறியதாவது..,
“ஒரு டீசர் மூலமாக கதாபாத்திரத்தை வெளிக்காட்டியது படத்தை பார்க்க வைக்கும் ஆவலை தூண்டுகிறது. பிருந்தா மாஸ்டருடன் பணிபுரிய எனக்கு பயமாக இருக்கும். வெவ்வேறு வகையான கதைகளத்தை இயக்குனர் பிருந்தா தேர்ந்தெடுத்து இருப்பது ஆச்சரியத்தை தருகிறது. நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்“

நடிகை குஷ்பூ கூறியதாவது..,
“ பிருந்தாவால் கண்டிப்பாக ஆக்ஷன் காட்சிகளை சுலபமாக எடுக்க முடியும், அவர் அதற்காகவே பழக்கப்பட்டவர். பிருந்தா மாஸ்டர் தான் உண்மையான தக். பிருந்தா சிறப்பானதை தவிர வேறு எதையும் கொடுக்க மாட்டார். ஒரு பெண் இயக்குனரால் இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்ற பேச்சை அவர் உருவாக்குவார். படத்தின் நடிகர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். “

இயக்குனர் கேபாக்யராஜ் கூறியதாவது..,“
படத்தின் டீசரில் ஆக்ஷன் திரைப்படத்திற்குண்டான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. இந்த திரைப்படம் குண்டர்கள் எனப்படும் ரவுடிகளை பற்றிய கதை என்று தான் தெரிகிறது. பிருந்தா மாஸ்டரின் முதல் படம் காதல் படமாக இருந்தது, இப்போது அவரது இரண்டாவது படம் அதற்கு நேர் எதிராக ஆக்ஷன் படமாக இருக்கிறது. இது அவர் பல வகையான திரைப்படங்களை எடுக்க விரும்புகிறார் என்று காட்டுகிறது. படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். டீசர் பார்க்கும் போது படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது. இந்த படத்தின் வெற்றிவிழாவில் சந்திக்கலாம். நன்றி.

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கூறியதாவது..,
“இந்த படத்தினை மிகவும் வேகமாக முடித்துள்ளனர். இந்த படத்தின் கதை எனக்கு தெரியும். இந்த திரைப்படம் ஒரு ஆழமான ஆக்ஷன் கதைகளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.”

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கூறியதவாது..,
“ இயக்குனர் பிருந்தா மாஸ்டர் தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்க கூடியவர். அவர் நேர்த்தியாக படத்தை உருவாக்க கூடியவர். அவர் இந்தியாவில் ஒரு தனித்துவமான இயக்குனராக வலம் வருவார். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.”

தயாரிப்பாளர் ரியா சுபு கூறியதாவது..,
“தக்ஸ் திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வெளியிடும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு இயக்குனராக ஒரு சிறந்த படைப்பை உருவாக்கியுள்ள இயக்குனர் பிருந்தாவிற்கு எனது வாழ்த்துகள். பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் அவருடைய வளர்ச்சி இருக்கிறது, அது எனக்கும் ஒரு உத்வேகம் அளிக்கிறது. படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பணியை அளித்து சிறந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி.”

இயக்குனர் பிருந்தா கூறியதாவது..,,
“ எனது முதல் படமான ஹே சினாமிகா வில் இருந்து வேறு ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று நினைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். எனது தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிகொள்கிறேன். இந்த படத்தை எடுக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சிபு அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி. “

நடிகர் ஆர் கே சுரேஷ் கூறியதாவது..,
“தயாரிப்பாளர் சிபுவிற்கு எனது நன்றிகள், அவர் எல்லாவற்றிலும் அதிகமாக உழைப்பை தரும் ஒருத்தர். படத்தின் ஹீரோ ஹிருது, குமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நபர் போல மாறி, படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார், அவருடைய அர்ப்பணிப்பு அவருக்கு பல வெற்றிகளை கொடுக்கும். இயக்குனர் பிருந்தா கடின உழைப்பை கொடுக்க கூடியவர், அவரது வேகம் எல்லோரையும் ஊக்கப்படுத்தும். இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். என்னுடன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன்.

நடிகர் ஹிருது ஹரூன் கூறியதாவது..,
“ எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குனர் பிருந்தா அவர்களுக்கு நன்றி. படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் எனது நன்றியை கூறிகொள்கிறேன். இந்த படத்தின் கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்க அனைவரும் அதிக உழைப்பை கொடுத்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவு தாருங்கள்.”

ஒளிப்பதிவாளர் பிரியேஷ் கூறியதாவது..,
“இயக்குனர் பிருந்தா மேடமுடன் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்“

எடிட்டர் பிரவீன் ஆண்டனி கூறியதாவது..,
“பிருந்தா மாஸ்டர் தொழில்நுட்ப அறிவு இருக்க கூடிய ஒரு இயக்குனர். இந்த படத்தை அனைவரும் இணைந்து உருவாக்கியுள்ளோம். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.”

ரியா ஷிபு, இந்தியத் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவரான தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் மகள் ஆவார். பிரபல தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ் ஏ பி சி டி, புலி, இருமுகன், சாமி ஸ்கொயர் முதலான படங்களை தயாதித்ததோடு 130 படங்களுக்கு மேல் விநியோகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. HR Pictures நிறுவனம் மும்பைகர் படத்தை தயாரித்தது மேலும் விக்ரம், ஆர்ஆர்ஆர், டான், தற்போது கேப்டன் போன்ற படங்களை விநியோகம் செய்ததோடு, தற்போது தக்ஸ் படத்தை தயாரித்து வருகிறது. இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கெளரவ விருந்தினர்கள், இயக்குனர் பிருந்தா, நடிகர் ஹிருது ஹரூன், “தக்ஸ்” படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்தினார்கள்.
