



நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம், சாலை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சார்லஸ். அடுத்ததாக தனது லைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம் சார்பில் ‘ஆண்டவன் அவதாரம்’ என்கிற படத்தை தயாரித்து இயக்குகிறார்.
சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து, படத்திற்கு படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நடிகர் நட்டி நட்ராஜ் இந்த படத்தில் கதாநாயகனாக அதிலும் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.


நடிகர் ராகவ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகி மற்றும் இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களின் தேர்வு இன்னொரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் (அக்-9) இந்த படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் சென்னையில் துவங்கியுள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
படம் குறித்து இயக்குநர் சார்லஸ் கூறும்போது, “இந்த படத்திற்கு ‘அவதாரம்’ என்றுதான் டைட்டில் வைக்க விரும்பினேன். ஆனால் அது நாசர் சாரிடம் இருப்பதால், அவர்களது பெருமைக்குரிய படைப்பு என்பதால் அந்த டைட்டிலைத் தர அவர்களுக்கு விருப்பமில்லை. அதனால் ‘ஆண்டவன் அவதாரம்’ எனப் பெயர் சூட்டி படப்பிடிப்பை துவங்கியுள்ளோம்.
நடிகர் நட்டி இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அப்பா-மகன், அண்ணன்-தம்பி என்று வழக்கமான இரு வேடங்கள் போன்று இல்லாமல் யாரும் யூகிக்க முடியாதபடி இவை உருவாக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இது ஒரு சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரங்கள் போன்று அதிலிருந்து இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சயின்ஸ் பிக்சன் என்றாலும் எதிர்காலத்தில் நடப்பது போன்ற அல்லது நம்ப முடியாத விஷயங்கள் போல அல்லாமல் இன்று நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை வைத்து இதை உருவாக்கி உள்ளோம். அதே சமயம் முழுக்க முழுக்க நகைச்சுவையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தையும் ஒன்றாக இணைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர் நட்டி இந்த கதையைக் கேட்டதுமே ரொம்பவே ஆர்வம் ஆகிவிட்டார். என்னுடைய சொந்த தயாரிப்பில் இந்த படம் தயாரித்து இயக்குகிறேன் என்பதால் படம் தொடர்பான மற்ற பணிகளைத் தீவிரமாகக் கவனியுங்கள், என்னுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு இருக்கும், என்னைப் பற்றி, எனது சம்பளம், வசதிகள் பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நான் இந்த படத்தில் நிச்சயம் நடிக்கிறேன் என்று உற்சாகம் கொடுத்தார்.
பல ஹீரோக்கள் பிரபல தயாரிப்பு நிறுவனம், இயக்குநர்களைத் தேடும் சூழலில், நாம் நடிக்கும் இந்தப் படமும், படத்தைத் தயாரிக்கும் நிறுவனமும் பெரிய அளவில் மாறும் என நம்பிக்கை வைத்து அவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
என்னுடைய ‘நஞ்சுபுரம்’ படத்தில் நடித்த ராகவ் இதில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இசையமைப்பாளர் நவ்நீத்துடன் இணைந்து இசையமைக்கவும் செய்கிறார்” என்று கூறினார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ; சார்லஸ்
ஒளிப்பதிவு ; ஜி. பாலமுருகன்
இசை ; நவ்நீத்-ராகவ்
படத்தொகுப்பு ; பிரவீன் பாஸ்கர்
மக்கள் தொடர்பு ; A.ஜான்