ஆன்ட்டி இண்டியன் படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் மும்முரம்
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான படம் ஆன்டி இண்டியன். யூடியூப் சேனல் சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார். இந்த படத்தில் ராதாரவி, ஆடுகளம் நரேன், இயக்குனர் வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறி மரணித்த ஒருவரின் இறுதிச்சடங்கு எந்த அளவுக்கு மதரீதியான, அரசியல் ரீதியான பிரச்சனைகளை உருவாக்குகிறது என்பதை தனது பாணியில் நையாண்டி கலந்து இந்த படத்தை இயக்கியிருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

இந்த படம் பல சிரமங்களை தாண்டி வெளியானது. அந்த சமயத்தில் ஓடிடி தளத்தில் இந்த படத்திற்கு நேரடியாக வெளியிட நல்ல வரவேற்பு இருந்தாலும் தியேட்டர்களில் தான் வெளியிட வேண்டும் என உறுதியாக நின்று வெளியிட்டனர். இந்த படத்தை பார்த்த ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் திருப்திகரமான வசூலையும் பெற்றது.


இந்த நிலையில் இந்த படத்தை தற்போது ஓடிடியில் வெளியிடுவதற்கும் சாட்டிலைட் உரிமையை பெறுவதற்கும் சில முன்னணி நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது