பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்தான செய்தி அஜித் சாரை எப்போதும் மனதளவில் பாதிக்கக் கூடியது. அதுபற்றிய வலுவான மெசேஜ் ‘விடாமுயற்சி’ படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்” – இயக்குநர் மகிழ் திருமேனி!

Share the post

பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்தான செய்தி அஜித் சாரை எப்போதும் மனதளவில் பாதிக்கக் கூடியது. அதுபற்றிய வலுவான மெசேஜ் ‘விடாமுயற்சி’ படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்” – இயக்குநர் மகிழ் திருமேனி!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் இயக்குநர் மகிழ் திருமேனியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படத்தில் உள்ள பல விஷயங்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பெண் மீது ஆண் ஒருவன் காட்டும் அன்பும் அக்கறையும்.

படத்திற்கான வரவேற்பு குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் மகிழ் திருமேனி பகிர்ந்து கொண்டதாவது, “அஜித் குமார் சார் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு என் இதயம் நிறைந்த நன்றி. எங்களின் ஆரம்ப சந்திப்புகளின் போது, பெண்களை மதிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாக அடிக்கடி என்னிடம் கூறுவார். எளிய குடும்ப பின்னணியில் வளர்ந்த எனக்கு இதைக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. பெண்களுக்கான கதை எனும்போது தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மகிழ்ச்சியாக சம்மதித்தனர். மிகப்பெரிய கமர்ஷியல் நடிகர்கள் படத்தில் இருந்தபோதும் இந்த கதைக்கு லைகா சம்மதித்தது சிறப்பான விஷயம். அஜித் சாரும் தன்னுடைய சினிமா பயணத்தில் நிறைய புதுவிதமான படங்களில் நடித்திருக்கிறார்.

அவர் தன் கரியரில் வளர்ந்து வரும்போதே ‘வாலி’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். அதேபோல, ‘முகவரி’யில் கனவுகளும் லட்சியங்களும் கொண்ட ஒரு சாதாரண இளைஞனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். ‘விஸ்வாசம்’ போன்ற மாஸ் ஹிட் படம் கொடுத்த பிறகு கூட ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.

பெண்கள் மீதான வன்முறைகள் குறித்தான செய்தி அஜித் சாரை எப்போதும் மனதளவில் பாதிக்கக் கூடியது. அதனால், அதுபற்றிய வலுவான மெசேஜ் ‘விடாமுயற்சி’ படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இருந்தாலும் அஜித் போன்ற மாஸ் நடிகருக்கான சில கமர்ஷியல் விஷயங்களை ரசிகர்கள் திரையில் எதிர்பார்ப்பார்களே என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. ஆனால், அஜித் சார் என்னிடம் வந்து, “இந்தக் கதை அர்ஜூன் என்ற மிடில் கிளாஸ் மனிதனைப் பற்றியது. வேறு வழியே இல்லை என்றால் தவிர வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்று நினைக்காதவன் அர்ஜூன். சரியான படத்தில் நடிக்கும் போது என் ரசிகர்கள் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். அந்த நம்பிக்கை சரியானது என்பது படம் வெளியானதும் என்னால் உணர முடிகிறது. படத்திற்கு கிடைக்கும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் இயக்குநருக்கு நிறைவான விஷயம். ரசிகர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் மகிழ்ச்சியாக உள்ளது ” என்றார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ், சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *