நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Share the post

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேற்று கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படமான இது வரும் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
’அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கேஜேஆர், கருணாகரன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே. ராஜேஷ் பேசியதாவது,
”தமிழ் சினிமாவிற்கு ’அயலான்’ படம் ஒரு மைல் கல் படமாக இருக்கும். தெலுங்கு சினிமாவுக்கு எப்படி ’பாகுபலி’யோ, கன்னட சினிமாவுக்கு எப்படி ஒரு ’கேஜிஎப்’போ அதேபோல் சிஜியில் தமிழ் சினிமாவுக்கு ’அயலான்’ பெஞ்ச் மார்க்காக இருக்கும். இயக்குநர் ரவிக்குமார் உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பல கோடிகளை தாண்டி விட்டனர். நீங்களும் அந்த நிலையை அடைவீர்கள். நீங்கள் பவுடர், ரத்தத்தை நம்பாமல் ஏலியனை நம்பி உள்ளீர்கள். இப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 5ம் தேதி வெளியாகும். இப்படத்தால் சிவகார்த்திகேயனுக்கு பல கோடி கடன் என்கின்றனர். அது எல்லாம் முடிந்துவிட்டது. இது ’அயலான்’ பொங்கல்” என்றார்.

அடுத்ததாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பேசும்போது, “ரவிக்குமார், விவேக் போன்ற புதிய தலைமுறை கலைஞர்களுடன் பணிபுரிந்து உள்ளேன். சிஜி என்றதும் பயம் வந்தது. ஆனால், இந்தப் படத்தில் சிஜி நன்றாக இருந்தது. இதற்காக ஐந்து மடங்கு வேலை செய்ய வேண்டி இருந்தது. இயக்குநர் ரவிக்குமார் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வேலை செய்துள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே”.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது, “இயக்குநர் ரவிக்குமார் ஒரு நேர்மறையான ஆளுமை. ஒரு படத்தை வைத்துக்கொண்டு வலிகளை சுமந்து கொண்டு இருக்கிறார். இந்த ஐந்து வருடத்தில் எந்தவித மாற்றமும் இன்றி இருக்கிறார். உங்க மனசுக்கு நல்லது நடக்கும். திறமையான மனிதர்கள் அமைதியாக இருப்பார்கள். சென்னை வந்தது முதல் நான் பழகிய ஆள் சிவகார்த்திகேயன். இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நான் பால் போட்டால் சிக்ஸர் தான். இவரால் தான் நான் கிரிக்கெட் விளையாடுவதையே நிறுத்திவிட்டேன். தென் மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு ரஹ்மான் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து அரிசி அனுப்பி வைத்தனர். அதுக்காக தென்‌மாவட்ட மக்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்கிறேன். கலைப்புலி தாணு, ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியோரும் அனுப்பினர். அவர்கள் இல்லை என்றால் அந்த மக்கள் இவ்வளவு விரைவாக மீண்டு வந்திருக்க மாட்டார்கள். சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசை. நிச்சயம் அதற்கு வாய்ப்பு இருக்கு! கண்டிப்பாக அது நடக்கும்” என்றார்.

இயக்குநர் ரவிக்குமார், “இந்தப் பயணத்தில் நிறைய நண்பர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி. இந்தப் படத்திற்காக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ’அயலான்’ ஏலியனுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்துக்கு நன்றி. இந்த சமயத்தில் என் அம்மாவை மிஸ் செய்கிறேன். அவரது ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு உண்டு. இந்தப் படத்தை ஏன் இத்தனை வருடங்கள் விடாமல் நான் வைத்திருந்தேன் என்றால், என் அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்த கமிட்மெண்ட்தான் காரணம். படத்தின் கலெக்‌ஷன் மீது எப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு படத்தை உணர்வுப்பூர்வமாக பார்ப்பவன் நான். இந்தப் படத்தில் வேலை பார்த்த அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. ரஹ்மான் சார் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். நீரவ் ஷாவின் அனுபவம் பெரியது. அவர் எங்களுக்கு மிகப்பெரிய பலம். இப்படி திறமையான கலைஞர்களை வைத்துக் கொண்டு படம் சரியாக எடுக்கவில்லை என்றால் என்மீதுதான் பிழை. அதனால், எல்லா விஷயங்களுமே சிறப்பாக செய்துள்ளோம். விஎஃப்எக்ஸ் வைத்து படம் நிச்சயம் சிறப்பாக எடுப்போம் என்ற நம்பிக்கை இருந்தது. அதை சாத்தியமாக்கிக் கொடுத்த சாந்தோம் எஃபெக்ட்ஸூக்கு நன்றி. உலகத்தரமான எஃபெக்ட்ஸை அவர்கள் செய்து கொடுத்தனர். அந்தக் காட்சிகளை எல்லாம் பாக்கும்போது எனக்கே பெருமையாக இருந்தது. என் உதவியாளர்கள் என்னுடன் ஆறு வருடங்களாக இருந்தனர். அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் சப்போர்ட் மிக அதிகமாக இருந்தது. சிவகார்த்திகேயன் என்னை எந்த இடத்திலும் சந்தேகிக்கவில்லை, தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். நான் எப்போதுமே அவருக்கு ஸ்பெஷல். இது எனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது. படத்தில் ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளளார்” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “இந்த மேடை நிறைய வகையில் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ’அயலான்’ வருமா வந்துவிடுமா எப்போ வரும் என்று கேள்வி வரும். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இன்னொரு படம் ஈசியா பண்ணிவிடலாம். இது இவர்களை தாண்டி பெரிய ஆள் ஆக வேண்டும் என்று நினைத்து பண்ணியதில்லை. இந்தப் படம் தொடங்கும் முன் பான் இந்தியா இல்லை. இது தமிழ் மக்களுக்காக பண்ணியது. நாம ஆசைப்பட்ட படம் கண்முன் தெரிகிறது. இதில் நாமும் நடித்துள்ளோம் என்பதில் சந்தோஷமாக உள்ளது. இதில் சரக்கு, புகை பிடித்தல், கிளாமர், போதைப் பொருள் கிடையாது. குழந்தைகளுக்கான விஷயங்கள் இருக்கும். ஏஆர் ரஹ்மானின் வெறித்தனமான ரசிகர்களில் நானும் ஒருவன். என் படத்தில் ரஹ்மான் இசை வருது என்பதை விட எனது வாழ்க்கையில் வேறு என்ன இருக்கு. படத்தை பார்த்து முதலில் சூப்பர் என்று சொன்னவர் ஏஆர். ரஹ்மான். டீசரை விட ட்ரெய்லர் இன்னும் நன்றாக இருக்கும். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அன்பறிவு மாஸ்டர்ஸ் போல, நானும் இரட்டையராக இருந்தால் நான் ஒருபடமும் அவர் ஒரு படமும் போய் இரட்டை சம்பளம் வாங்கலாம். எங்க ஒரு படத்திற்கு போனாலே சம்பளம் தரமாட்டேங்குறாங்க! ரஹ்மான் சார் இசையில் நான் பாடல் எழுதியுள்ளேன். அந்த அனுபவம் மிகவும் சுவாரசியமானது. இப்படத்தில் அயலானாக நடித்த வெங்கடேஷ் நாயகனாக நடித்துள்ள மதிமாறன் திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது அவருக்கும் வாழ்த்துகள். பாய்ஸ் படத்தில் சித்தார்த் அத்தனை அழகாக இருப்பார். அயலானுக்கு குரல் கொடுத்த சித்தார்த்துக்கு நன்றி. பணம் வாங்காமல் பண்ணிக் கொடுத்தார்.‌ இதுபோன்ற படங்கள் வருவது அபூர்வம்.

ஆரம்பத்தில் இருந்து இப்படத்தின்‌ மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இப்படம் நிச்சயம் உங்களை சந்தோஷப்படுத்தும். நீங்கள் என்னை அண்ணா என்று சொல்கிறீர்கள். சிலர் திட்டுவார்கள். நடிப்பு வரவில்லை என்பார்கள். அதை நான் காதில் வாங்குவதில்லை. என்னை பிடித்தவர்களுக்கு, அவர்களுக்கு பிடித்த படத்தை தொடர்ந்து பண்ண வேண்டும் என்று ஆசை. என்னை வெறுப்பவர்களுக்கு நான் பதில் கூட சொல்ல விரும்பவில்லை. இந்த படத்துக்கு நான் உதவி செய்தேன் என்கின்றனர். சம்பளம் வாங்காததற்கு ஆர்த்தி மாதிரி ஒருவர் எனக்கு இருப்பதுதான் காரணம். இப்படத்திற்கு பிரச்சினை வரும்போது நம்ம ரவிக்குமார் அண்ணன்தானே என்றார். ’டாக்டர்’ சமயத்திலும் நம்ம நெல்சன் அண்ணன்தானே என்றார். ’கனா’ படத்துக்கும் அப்படியேதான். எல்லோரும் கொடுத்த தைரியம் தான் இப்படத்தை இங்கு கொண்டு வந்து நிறுத்த வைத்துள்ளது. கஷ்டப்பட்ட எல்லோருக்கும் இது ஒர்த் என்று தோன்றும். பணம் கொடுத்து பார்க்கும் அனைவருக்கும் இது ஒர்த் என்று தோன்றும். எனது மகன் குகன் முதலில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளோம். ராஜ்குமார் பெரியசாமி படம் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதனை முடித்துக்கொண்டு பக்கா மாஸ் என்டர்டெயின்மென்ட் படம் பண்ண உள்ளேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *