‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Share the post

‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

பாடலாசிரியர் சிநேகன், “ஜிவி சாருடன் சேர்ந்து நிறைய படங்களில் பயணப்பட்டிருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதும்போது வரிகளை ரசிக்கும் இசையமைப்பாளர் இருந்தால் எழுதுவதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அப்படியான ஒருவர்தான் ஜிவி. இந்தப் படத்தின் பாடல்களும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இயக்குநர் ஷங்கர் அவ்வளவு ஒற்றுமையுடன் அணியை எடுத்துச் சென்றார். ஜிவி பிரகாஷ் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வார்”.

இசையமைப்பாளர் ரேவா, “’கள்வன்’ படம் எங்கள் எல்லோருக்குமே ஸ்பெஷல் படம். என்னை நம்பி இசையமைக்க வாய்ப்புக் கொடுத்தத் தயாரிப்பாளர், ஜிவி பிரகாஷ், இயக்குநர் என அனைவருக்கும் நன்றி. பாரதிராஜா சார், ஜிவி பிரகாஷ் சிறப்பாக நடித்துள்ளனர். நிச்சயம் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்”.

இயக்குநர் பேரரசு, “பாரதிராஜா சார் நடிப்பதற்காக சினிமாவுக்கு வந்து இயக்குநர் இமயம் ஆனவர். என்னைக் கேட்டால், வந்த புதிதில் அவர் நடிக்காமல் போனது நல்ல விஷயம். ஏனெனில், என்னைப் போன்ற பல நபர்கள் சினிமாவுக்கு வருவதற்கு ஊக்கம் கொடுத்தவர் அவர்தான். இயக்குநர் இமயம் நடிகர் இமயமாக இன்னும் உயர வேண்டும். நடிகை இவானா நடித்த ‘லவ் டுடே’ ரசித்துப் பார்த்தோம். பொதுவாக கதாநாயகிகள் பூ, புடவை என்றால்தான் அழகாக இருப்பார்கள். ஆனால், நைட்டியில் பார்க்கும்போது கூட இவானா அழகாகத் தெரிந்தார். ஜிவி பிரகாஷ் இப்போது வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வருகிறார். நல்ல கதை இருந்தால் புதுமுக இயக்குநருக்கு தயங்காமல் வாய்ப்புக் கொடுக்கிறார். ’கள்வன்’ படம் யானையை முதன்மையாக வைத்து இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ரஜினி சார், பிரபாஸ், விக்ரம் பிரபு என யானையை வைத்து அவர்கள் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆகி இருக்கிறது. அந்த செண்டிமெண்ட் இந்தப் படத்திற்கும் ஹிட் கொடுக்க வாழ்த்துகள்”

கலை இயக்குநர் என்.கே. ராகவ், “எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் லிங்குசாமி, “இதேபோல ஒரு ஆடியோ ஃபங்கனில் ஜிவி பிரகாஷைப் பார்த்துவிட்டு ஹீரோ போல இருக்கிறார் என்று சொன்னேன். ரூட்டை மாற்றி விட்டேன் போல. இப்போது பார்த்த இந்தப் பாடலில் அவ்வளவு அருமையாக நடித்துள்ளார். ’பொல்லாதான்’ படத்தில் தனுஷ் நடித்த அளவிற்கு ஜிவி நடிப்பில் மிரட்டியுள்ளார். ஜிவி பிரகாஷ்- இவானா ஜோடி நன்றாக உள்ளது. இந்த விழாவிற்கு நான் வர முக்கியக் காரணம் பாரதிராஜா. அவரைப் பார்த்துதான் நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். அவருக்கு சீக்கிரம் விழா எடுக்கவுள்ளோம். பாரதிராஜா சாரும் பாதுகாக்கப்பட வேண்டிய அதிசயம். உங்கள் பயோபிக்கும் சீக்கிரம் யாராவது எடுப்பார்கள். பாரதிராஜா அருகில் உட்கார தகுதியானவர் வெற்றிமாறன். எனக்குப் பிடித்த இயக்குநர் அவர். ஷங்கர் என்ற பெயர் யானை மாதிரியான பிரம்மாண்டம் கொண்டது. அந்தப் பெயர் கொண்ட இயக்குநர், படக்குழுவுக்கு வாழ்த்துகள்!”

எடிட்டர் சான் லோகேஷ், “எனக்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. படம் குடும்பமாக எல்லோருக்கும் பிடிக்கும். ஏப்ரல் 4 அன்று படம் பாருங்கள்”.

தயாரிப்பாளர் தனஞ்செயன், “’மரகதநாணயம்’, ‘ராட்சசன்’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த டெல்லி பாபு தயாரிப்பில் ‘கள்வன்’ வந்துள்ளது. ஜிவி சார் போல மல்டி டேலண்டட் நபரைப் பார்க்க முடியாது. அவருக்கு மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். மேக்கிங் சூப்பராக உள்ளது. ’நாச்சியார்’, ‘லவ் டுடே’ போல இவானாவுக்கு இந்தப் படமும் ஹிட் ஆக வேண்டும். மிகப்பெரிய ஹீரோக்கள் வெளி மாநில தயாரிப்பாளர்களுக்கு படம் நடித்துக் கொடுப்பது போல தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கும் படம் நடிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். அந்த வகையில் புதிய தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து வரும் ஜிவி பிரகாஷூக்கு வாழ்த்துகள். தமிழ் சினிமா ஜெயிக்க வேண்டும்!”.

படத்தின் வசனகர்த்தா ராஜேஷ் கண்ணா, “பாரதிராஜா இருக்கும் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சி. ’நாச்சியார்’ என ஜிவி சாரின் ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இயக்குநர் ஷங்கர், வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் டில்லி பாபு என படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!”

புகைப்படக்கலைஞர் வெங்கட்ராம், “ஜிவி பிரகாஷ் சாருக்கு அவர் தந்தை சொல்லி 15 வருடங்களுக்கு முன்னால் இசையமைப்பாளராக போர்ட்ஃபோலியோ செய்திருக்கிறேன். இப்போது நடிகராக சிறப்பாக நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கருக்கும் வாழ்த்துகள்”

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “காட்டுக்குள் சென்று படம் எடுத்தாலே அது வெற்றிப் படம்தான். மாற்றுத்திறனாளியை வைத்து ஹிட் படம் கொடுத்த ஒரே இயக்குநர் பாரதிராஜா. அவர் பலருக்கும் இன்ஸ்பிரேஷன். மத்திய அரசுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். ஸ்டுடியோவில் இருந்த சினிமாவை கிராமத்துக்கு எடுத்து வந்தவர் பாரதிராஜா. அவருக்கு உயரிய தாதா சாகேப் பால்கே விருது கொடுக்க வேண்டும். இவர் ஒரு சினிமா கம்பன். சீக்கிரம் அவருக்கு விழா எடுக்க வேண்டும். அவர் நடித்துள்ள ‘கள்வன்’ படம் நிச்சயம் வெற்றிப் பெறும்”.

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், “படத்தின் டிரெய்லர் சிறப்பாக உள்ளது. இயக்குநர் ஷங்கருக்கு வாழ்த்துகள். இளையராஜா போல ஜிவி பிரகாஷின் இசையும் படத்தை அடுத்த லெவலுக்க்கு எடுத்துப் போகும். நிச்சயம் அவர் அடுத்தடுத்து நடிகராகவும் பெரிய வெற்றிகளைப் பார்க்க வேண்டும். ‘லவ் டுடே’ இவானாவுக்கும் வாழ்த்துகள். ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் பாரதிராஜா சாரின் நடிப்பைப் பார்த்துவிட்டு சிலிர்த்து விட்டேன். சிறப்பான நடிகர். நான் சினிமாவுக்கு வர காரணமே அவரது ‘16 வயதினிலே’ படம்தான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, “பாரதிராஜா சாரிடம் உதவி இயக்குநராக பணி புரிய ஆசைப்பட்டேன். இப்போது அவர் படத்தின் விழாவில் கலந்து கொள்வது பெருமை. தன் வாழ்வில் மிகச்சிறந்த படத்தில் நடித்திருப்பதாக பாரதிராஜா சொல்வார். அதில் இருந்தே ‘கள்வன்’ படம் மீது எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. தயாரிப்பாளர் டில்லி பாபு சாருக்கு நன்றி. படம் வெற்றிப் பெற வேண்டும்”.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், “தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் இந்தப் படத்திறகாக ஒன்றிணைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. வியாபாரம் தாண்டி டில்லி பாபு சார் எனக்குக் கொடுத்து வரும் ஆதரவு பெரியது. அவருக்கு நன்றி. முழு அர்ப்பணிப்போடு இந்தப் படத்தில் அனைவரும் உழைத்துள்ளனர். பாரதிராஜா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரது நடிப்பை இதில் பார்த்து ரசிக்க ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் டில்லி பாபு, “அம்மா கிரியேஷன்ஸ், சத்ய ஜோதி போன்ற பேனர்களுக்காகவே நான் போய் படங்கள் பார்த்த காலம் உண்டு. தனஞ்செயன் சார் தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா. கிளைமாக்ஸ் காட்சிக்கு முந்தின நாள் யானக்கு மதம் பிடித்து விட்டது. அதற்காக சில காலம் காத்திருந்தோம். படம் சிறிய பட்ஜெட் என்றாலும் டெக்னீஷியன்ஸ் எல்லோருமே பெரியவர்கள் தான். பாலக்காட்டில் கிளைமாக்ஸ் ஷூட்டு ஒரு வாரத்திற்க்கு மட்டும் ஒன்றரை கோடி செலவானது. பாரதிராஜா சார், ஜிவி பிரகாஷ், இவனா என எல்லாருமே சிறப்பாக நடித்துள்ள படம் வெற்றி அடைய வேண்டும். பாரதிராஜா சாரின் பயோபிக் உருவாகிறது என்றால் அதை வெற்றிமாறன் இயக்க வேண்டும் நாங்கள் தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்” என்றார்.

நடிகை இவானா, “‘நாச்சியார்’ படத்திற்குப் பிறகு ஜிவி பிரகாஷூடன் சேர்ந்து நடிக்கிறேன். அப்போது அவருடன் சரியாக நிறைய பேச முடியவில்லை. இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள். பாரதிராஜா சாருடன் நான் நடித்திருப்பது எனக்குப் பெருமை. படத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஏப்ரல் 4 அன்று உங்கள் இதயங்களை ‘கள்வன்’ நிச்சயம் திருடுவான்”.

நடிகர் தீனா, “இந்தப் படத்தில் ஜிவி சாருக்கும் இவானாவுக்கும் நிறைய காதல் காட்சி உள்ளது. இயக்குநர் ஷங்கர் சிறப்பாக செய்துள்ளார். இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்”.

இயக்குநர் ஷங்கர், “படத்திற்காக வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்”.

இயக்குநர் வெற்றிமாறன், “’கள்வன்’ படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் உள்ளது. நான் விடுதலை படத்தில் பாரதிராஜா சார் தான் நடிக்க வேண்டும் என முடியெல்லாம் வெட்டி லுக் டெஸ்ட் பண்ணேன். நான் லொகேஷன் பார்க்க சென்ற பிறகு அவர் வேண்டாம் என நினைத்தேன். அதற்கு என்னிடம் பாரதிராஜா செல்லமாக கோபித்துக் கொண்டார். அதன்பிறகு கொஞ்ச நாள் கழித்து, இதே முடியோடு என்னை வைத்து ஒருத்தர் படம் எடுக்கப் போறாருன்னு சொன்னாரு. அது தான் ‘கள்வன்’ படம். நாங்க ‘விடுதலை’ படம் ஷூட் பண்ண இடத்தில் தான் ‘கள்வன்’ படமும் ஷூட் பண்ணினார்கள். காட்டில் படப்பிடிப்பு என்பது ரொம்ப கஷ்டம். ஒளிப்பதிவாளருக்கு எவ்வளவு சவால் இருந்திருக்கும் என்பது தெரியும். ஒரு படத்துக்காக காத்திருப்பது என்பது மற்றவர்களை விட இயக்குநருக்கு ரொம்ப சவாலாக இருந்திருக்கும். 6 மாதம் வரை ஒரு நம்பிக்கை வரும். பின் போகும், திரும்ப நம்பிக்கை வரும் என பல விஷயங்கள் உள்ளது.
நம்ம யானையை வைத்தோ, டைனோசரை வைத்தோ படம் எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் படம் ஓடும். ஜிவி நடிகராக சிறப்பாக பரிணமித்து வருகிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜா, “இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜிவி நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத்தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்”.

நடிகர் ஜிவி பிரகாஷ், ” இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *