
சினிமாவின் எதிர்காலம் இனி ஏஐ, விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில்” இயக்குநர் ஆர்.கே. செல்வமணி!
டிவா (டிஜிட்டல் இண்டர்மீடியேட் விஷூவல் எஃபெக்ட்ஸ் அசோசியேஷன்) 25வது கிராஃப்ட்டாக அங்கீகரிக்க வேண்டி நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.
திவா வைஸ் பிரசிடெண்ட் கலரிஸ்ட் முத்து, “இந்த நிகழ்விற்கு வருகை புரிந்திருக்கும் இயக்குநர்கள் செல்வமணி, ரவிக்குமார் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறோம். நிறைய பேருக்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், விஎஃப்எக்ஸ் பற்றி தெரிந்திருக்கும். ஆனால், டிஐ பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. தயாரிப்பாளர் பட்ஜெட்டுக்கு ஏற்ற நல்ல விஷூவல் கொண்டு வரும் புராசெஸாக டிஐ இருக்கிறது. தொழில்நுட்ப ககைஞர்களுக்கு என ஒரு அசோஷியேஷன் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இது. கலரிஸ்ட், டிஐ, விஎஃப்எக்ஸில் பணிபுரிபவர்களுக்கும் அரசு மற்றும் மற்ற தனியார் விருதுகளும் வழங்கி உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம். அதன் முன்னெடுப்பாகதான் இந்த ‘திவா ஒடிஸி விருதுகள்’ தொடங்கி இருக்கிறோம்” என்றார்.

ஒடிஸி நிறுவனர் ஹர்ஷவர்தன், “திவா ஃபெப்ஸியில் இணைய உறுதுணையாக இருக்கும் செல்வமணி சாருக்கு நன்றி. விஎஃப்எக்ஸ் சூப்ரவைஸர் என்ற பொசிஷன் நமக்குத் தெரிய வருவதற்கு முன்பே ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களில் கமல் சாரே நடிகர், விஎஃப்எக்ஸ் போன்ற எல்லா பணிகளையும் சேர்த்து ஒரே நபராக செய்திருக்கிறார். அவருக்கும் முன்பே என் தாத்தா விஎஃப்எக்ஸ் இல்லாத காலக்கட்டத்திலேயே பல படங்களில் திறம்பட பணிபுரிந்திருக்கிறார். இது போன்று பல கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ராஜமவுலி போன்ற இயக்குநர்களின் கற்பனையை திரையில் கொண்டு வருவதற்கு இவர்களது பங்கு மிகப் பெரியது. எங்களது இந்த முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.

இயக்குநர் ‘அயலான்’ ரவிக்குமார், “ஃபிலிம் இருந்த காலத்தில் டிஐ தேவைப்படவில்லை. ஆனால், டிஜிட்டல் வந்த பின்பு இதன் பயன்பாடு அதிகரித்தது. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதும் யூனியனாக அவர்கள் ஒன்றிணைவதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். தொழிலாளர்களின் அடிப்படைத் தேவை இன்று விழாவாக மாறியிருக்கிறது. முன்பெல்லாம் படம் முடித்த பின்பு தான் விஎப்எக்ஸ் பற்றி தயாரிப்பாளர்களிடம் பேச முடியும். ஆனால், இன்று ஸ்கிரிப்ட் முடிந்த உடனேயே படக்குழுவினர் அனைவருக்கும் படம் எப்படி வரப்போகிறது என்பதை முன்கூட்டியே காண்பிப்பதற்கான தொழிலாளர்கள் எல்லாருமே இந்த சங்கத்தில் இருக்கிறார்கள். இது படத்தின் பட்ஜெட்டை பெருமளவு குறைக்கவும் உதவுகிறது. இந்த சங்கத்திற்கும் முன்னெடுப்பிற்கும் வாழ்த்துக்கள்”.


இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “திவாவின் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்! முன்பு நான் படம் செய்யும் பொழுது நினைத்ததை முன்கூட்டியே பார்ப்பதற்காக நிறைய உடல் உழைப்பும் பண உழைப்பும் தேவைப்பட்டது. அதிலும் 40% தான் எட்ட முடியும். ஆனால், இன்று அது தொழில்நுட்பத்தின் உதவியால் 100% மாறி இருக்கிறது. பாரதிராஜா, பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்ற இயக்குநர்களின் காலகட்டத்தில் தான் சினிமா தொழில்நுட்ப கலைஞர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பின்பு ரஜினி, கமல் என நடிகர்களின் கட்டுப்பாட்டிற்கு சினிமா வந்தது. இப்போது 2025 ல் இருந்து 2050 வரையிலான காலக்கட்டத்தில் சினிமாவை ஆளப்போவது விஎஃப்எக்ஸ், ஏஐ மற்றும் சிஜி தொழில்நுட்பம் தான். அவர்களுக்காக ஒரு சங்கம் என்பது பெரிய விஷயம். உங்கள் திறமையை எல்லோருக்கும் கொடுங்கள். அப்பொழுது தான் நீங்களும் சினிமாவும் வளர முடியும். மூன்று வருடம் உங்கள் யூனியனை சரியாக நடத்தினால் ஃபெப்சியில் இணைய வாய்ப்பு தருகிறோம் என்று சொல்லி இருந்தேன். இப்பொழுது இரண்டாவது வருடத்தில் இருக்கிறார்கள். நிச்சயம் ஃபெப்சியில் இணைவதற்கான முன்னெடுப்பை எடுப்போம். அதேபோல மத்திய மாநில அரசிடமும் பேசி உங்களை அங்கீகரிப்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்போம். தயாரிப்பாளர்களுக்கு அதிகம் செலவு வைக்காமல் அவர்களுடன் இணைந்து இணக்கமாக பணிபுரிவதையும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நேர்மையும் வாய்மையும் எப்போதும் வெல்லும். சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்கள்” என்றார்.