
“சார்” படத்தின் வெற்றியை, ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு !!
திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, “சார்” பட வெற்றியைக் கொண்டாடிய படக்குழு !!
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக வெளிவந்துள்ள “சார்” திரைப்படத்திற்கு, கிடைத்து வரும் வரவேற்பை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, சார் பட வெற்றியைக் கொண்டாடியுள்ளது படக்குழு.

கடந்த வாரம் வெளியான “சார்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கல்வி எனும் ஆயுதம் நம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தையும், கிராமப்புற ஆசிரியர்களின் வலிமிகுந்த தியாகத்தையும், அழுத்தமாக பேசியுள்ள இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்திற்கு தமிழகமெங்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் மக்களின் பேராதரவில், பெரும் வரவேற்பைப் பெற்ற, “சார்” படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், இயக்குநர் போஸ் வெங்கட், நடிகர் விமல், மற்றும் தயாரிப்பாளர் சிராஜ் உட்பட குழுவினர் திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி, கேக் வெட்டிக் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஶ்ரீ சக்தி சினிமாஸ் உரிமையாளர் கார்த்திக் சுப்பிரமணியம் கூறுகையில்…
தமிழ் சினிமாவில் கருத்துள்ள படங்கள் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. பெரிய படங்களை விட, நல்ல கருத்துள்ள படங்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். லப்பர் பந்து படத்திற்குப் பிறகு, சார் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ரசிகர்கள் கொண்டாடுவதால் படத்திற்கான காட்சிகளை அதிகரித்துள்ளோம், கல்வியின் அவசியத்தை பேசும் இது போன்ற படத்தை தந்த இயக்குநர் போஸ் வெங்கட், நடிகர் விமல் மற்றும் படக்குழுவிற்கு நன்றி. இது போல் தொடர்ந்து நல்ல படங்களை தர வேண்டுமென அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி என்றார்.

இயக்குநர் போஸ் வெங்கட் கூறுகையில்..,
தற்போதைய காலகட்டத்தில், பெரிய படங்களைத் தாண்டி சிறிய நல்ல படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தருவது பெரிய மகிழ்ச்சி தருகிறது. வார நாட்களை தாண்டி, திரையரங்கில் படத்தை எடுத்துவிடாமல், திரையரங்குகள் இப்போது எங்கள் படத்திற்கு காட்சிகளை அதிகப்படுத்தி வருகின்றனர். படத்திற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பை நேரில் கண்டது இன்னும் மகிழ்ச்சி. இந்த வரவேற்பு, இது போல் நல்ல படத்தை தர வேண்டும் எனும் ஊக்கத்தை தந்துள்ளது என்றார்.
நடிகர் விமல் கூறுகையில்…
ஒரு நடிகனாக வாகை சூடவா, களவாணி, சார் போன்ற நல்ல திரைப்படங்கள் அமைந்தது மகிழ்ச்சி தருகிறது. சார் படத்தின் கதையைக் கேட்ட போதே இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என தோன்றியது. இப்போது ரசிகர்கள் தந்து வரும் ஆதரவு, என்னை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. இப்படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் போஸ் வெங்கட் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து இதே போல் ரசிகர்கள் ரசிக்கும் படைப்புகளில் நடிப்பேன் அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்க, ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.