காற்றழுத்த தாழ்வு மண்டலம் மகாபலிபுரம் அருகே நாளை கரையை கடக்கும்
தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஐந்து மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், நேற்றில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூரை ஒட்டி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க திருச்சி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, நாகை, கடலூர் (சிதம்பரம்), மதுரை, திருவள்ளூர், அரியலூர் (கூடுதலாக பெரம்பலூர்), விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்துவரும் திசை திரும்பியுள்ளது. காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூரையொட்டி கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது திசை திரும்பி, மகாபலிபுரம்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும். நாளை காலை 6.00 மணிக்கு கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.