”கோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் வாத்தி கதை உருவாக காரணம்” ; மனம் திறக்கும் இயக்குனர் வெங்கி அட்லூரி

Share the post

”கோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் வாத்தி கதை உருவாக காரணம்” ; மனம் திறக்கும் இயக்குனர் வெங்கி அட்லூரி

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ்  சார்பில்  நாகவம்சி S – சாய் சௌஜன்யா தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகியுள்ளது ‘வாத்தி’. தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குனர் வெங்கி அட்லூரி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடப்பள்ளி மது, நார ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரிஸ் பெராடி, பிரவீணா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரியும் நாயகி சம்யுக்தா மேனனும் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இயக்குனர் வெங்கி அட்லூரி கூறும்போது, “2020ல் கொரோனா தாக்கம் துவங்கிய பிறகு கிடைத்த இடைவெளியில் அடுத்த படத்திற்கான சில ஐடியாக்களை யோசிக்க துவங்கினேன் அந்த சமயத்தில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியாததால் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கினார்கள். ஆனால் கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு பதிலாக முன்பை விட அதிக அளவில் உயர்த்தினார்கள். பள்ளிப்பேருந்துகளை இயக்காமலேயே பேருந்துக்கான கட்டணங்களை வசூலித்தார்கள்.

தொண்ணூறுகளின் இறுதியில்  ஐடி கம்பெனிகள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உருவாக ஆரம்பித்த சமயத்திலேயே அரசாங்கம் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகளை அதிகப்படுத்தியது. சில பேர் இதை பயன்படுத்தி கோச்சிங் சென்டர், தனி பயிற்சி வகுப்புகள் என பயனடைய ஆரம்பித்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி கல்லூரிகளின் கட்டணமும் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. 

கல்வி என்பது எப்போதும் மக்களின் உணர்ச்சி பூர்வமான ஒரு விஷயமாகவே இருக்கிறது. தங்களது பிள்ளைகளுக்கு தரமான கல்வியை தரவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதனால் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை நம்பி நடுத்தர வர்க்கத்து பெற்றோர்கள் கூட, தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆரவம் காட்டினார்கள்.. அதேசமயம் அரசு பள்ளிகளிலும் கொஞ்சம் தரம் குறைய ஆரம்பித்தது. ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறமையில்லை என்பதால் அல்ல.. அவர்களுக்கான சரியான ஊதியம் தரப்படவில்லை என்பது தான் முக்கியமான காரணம்.

கல்வி என்பது லாப நோக்கு இல்லாத ஒரு சேவை என்று சொல்வார்கள். ஆனால் அதை வியாபாரமாகவே ஆக்கிவிட்டார்கள். இன்னொரு பக்கம் அறக்கட்டளை துவங்கி படிப்புக்கு உதவி செய்வதாக ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். கல்வியை அதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பட்டவர்த்தனமான வியாபாரமாக்கி விட்டார்கள்.

இதையே முழுப்படமாக சொல்லாமல் அதேசமயம் மக்களுக்கு சொல்லவேண்டிய சில செய்திகளையும் சேர்த்து ஒரு பொழுதுபோக்கு படமாக சொல்லும்போது அவர்களை எளிதாக சென்றடையும். நான் எப்போதும் பொழுதுபோக்கு படங்களையே விரும்புகிறேன். இந்த படத்தில் கல்வி முறை மாற வேண்டுமா? அல்லது பெற்றோர்கள் மாற வேண்டுமா? என்பதை விட இதற்கு ஒரு நல்ல தீர்வு ஒன்றை சொல்லி இருக்கிறோம்.

இது துவக்கத்தில் இருந்தே இருமொழி படமாகவே துவங்கப்பட்டது. கொரோனா முதல் அலை முடிவுக்கு வந்த சமயத்தில் 2021-ல் என்னுடைய ரங்தே படம் ரிலீஸ் ஆனது. அதைத் தொடர்ந்து இரண்டாவது அலையும் துவங்கியது. அந்த சமயத்தில் நான் உருவாக்கி வைத்திருந்த இந்த கதைக்கு ஒரு பெரிய ஹீரோவை அணுகும் எண்ணமே என் மனதில் இல்லை. ஆனால் தயாரிப்பாளர் வம்சி இந்த கதை மீது ரொம்பவே நம்பிக்கையுடன் இருந்தார். தனுஷை சந்தித்து கதை சொல்லும்படி ஊக்குவித்து அதற்கான வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்தார். இப்படி ஒரு மிகப்பெரிய வாய்ப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.

அதே சமயம் அந்த நேரத்தில் ஜகமே தந்திரம் மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக நடித்து வந்தார் தனுஷ். அப்படியே அவர் நடிக்க ஒப்புக்கொண்டாலும் இந்த படத்தை துவங்க எவ்வளவு நாளாகும் என்கிற கேள்வியும் கூடவே இருந்தது. ஆனாலும் ஒரு பெரிய ஹீரோவை சந்தித்து கதை சொல்ல போகிறோமே என்கிற சந்தோஷமே அதிகமாக இருந்தது.

ஆனால் அவரை சந்தித்து கதை சொன்ன பின்னர் அவர் தனக்கு கதை பிடித்து இருப்பதாகவும் எப்போது என்னுடைய தேதிகள் உங்களுக்கு வேண்டும் என்று கேட்டபோது என்னால் அதை நம்பவே முடியவில்லை.  தனுஷும் ஒரு இயக்குனர் என்பதால் எங்களுக்கு அவருடன் இணைந்து பணியாற்றுவது ரொம்பவே எளிதாக இருந்தது. “நேரம் பொன்னானது.. உங்களுடைய நேரத்தை நானோ என்னுடைய நேரத்தை நீங்களோ வீணடிக்காமல் வேலை பார்ப்போம்” என்று தெளிவாக கூறிவிட்டார்.

படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட நாட்களில் அவரது காட்சி படமாக்கி முடிக்கப்பட்டாலும் கூட கேரவன் பக்கம் அவர் போகவே இல்லை. எங்களுடனேயே அவர் இருந்து அடுத்த காட்சிக்கான வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். தமிழ் எங்களுக்கு புதிது என்பதால் படத்தின் வசனங்களில் மிகுந்த கவனம் செலுத்தினார் தனுஷ். தமிழில் ஏதாவது வசனங்களை மாற்றம் செய்ய வேண்டுமானால் கூட அவற்றை எங்களுக்கு தெலுங்கில் எழுதிக்காட்டி இறுதி செய்து அதன்பிறகு தமிழில் அந்த வசனங்களை பேசினார்.

படத்தின் கதைக்கரு, களம் என தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் ஒன்றுதான் என்றாலும் சில விஷயங்களில் கொஞ்சம் மாறுதல்களை செய்துள்ளோம்.  அந்த வகையில் தெலுங்கு படத்தை விட தமிழ் படத்தின் நீளம் இரண்டு நிமிடங்கள் கூடுதலாகவே இருக்கும்.  சமுத்திரக்கனி இந்த படத்தில் படத்தில் பள்ளிகள் மற்றும் கோச்சிங் பயிற்சி நிறுவனங்களை நடத்துபவராக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனியிடம் இந்த கதை பற்றி கூறியபோது மீண்டும் ஒரு நெகட்டிவான கதாபாத்திரமா என்று ஆரம்பத்தில் தயங்கினார் ஏனென்றால் எப்போதுமே அவர் இந்த கல்வி முறை குறித்து பல படங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்.

 இருந்தாலும் இந்த கதை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. தனுஷுக்கும் அவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. ஏற்கனவே தந்தை மகன் கதாபாத்திரங்களில் அவர்கள் நடித்திருந்தாலும் இந்த படத்தில் இவர்கள் எதிர் எதிராக நடித்துள்ளது நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். அரசு பள்ளியில் பணிபுரியும் உயிரியல் ஆசிரியராக சம்யுக்தா நடித்துள்ளார். தனது பள்ளிக்கு உதவி செய்ய நினைத்தாலும் தனக்கான சில எல்லைகள் கட்டுப்பாடுகள் காரணமாக எதுவும் செய்ய முடியாத ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

இந்தக்கதை 97-ல் இருந்து 2000 வரை உள்ள காலகட்டத்தில் நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் துவங்கப்பட்ட சமயத்தில் தமிழ்நாட்டில் தளர்வுகள் அதிகம் வழங்கப்படாததால் பெரும்பாலும் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்தப்படத்திற்காக 90களின் காலகட்டத்தை உணர்த்தும் விதமாக செட் அமைத்து படமாக்கினோம். பாரதிராஜா இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். அவர் இயக்கிய படங்களில் வேதம் புதிது எனக்கு ரொம்பவே பிடித்த படம்.

சமீப காலமாக தெலுங்கு இயக்குனர்கள் தமிழில் படம் பண்ண விரும்புகிறார்கள்.. இது இந்த கோவிட் காலகட்டம் ஏற்படுத்திய மாற்றம். கோவிட் அனைத்து திரையுலகினரையும் ஒன்றாக்கி விட்டது. இந்த காலகட்டத்தில் வெளியான அசுரன், கர்ணன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் தெலுங்கு திரையுலகில் அதிகம் வரவேற்பை பெற்றன.  90களின் கல்வி முறையில் நடைபெற்ற சில விஷயங்களை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருந்தாலும் இப்போது வரை அநத விஷயங்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றால் நிச்சயம

“வாத்தி படம் மூலம் நான் எடுத்து செல்லும் பெருமை இதுதான்” ; சம்யுக்தாவை நெகிழ வைத்த மதுரை

நாயகி சம்யுக்தா இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா மேனன் என்று என்னை அழைக்க வேண்டாம். எந்த ஒரு ஜாதி பெயரையும் சேர்த்துக்கொள்ள நான் விரும்பவில்லை. சம்யுக்தா என்று தான் இந்த வாத்தி பட டைட்டில் கார்டில் கூட குறிப்பிட்டு இருக்கிறார்கள். பள்ளியில் பேர் சேர்க்கும்போது பெரியவர்கள் அப்படி சேர்த்து விட்டதை நாம் அப்போது ஒன்றும் செய்ய முடியாது. இப்போது மாற்றிக் கொள்வது என்பது நம் விருப்பம் தானே.. வேறு சில நட்சத்திரங்கள் இப்படி தங்கள் பெயருடன் ஜாதிப்பெயரை சேர்த்துக் கொண்டிருப்பதை பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது

தமிழ் எனது இளமைக்காலத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த மொழி. குறிப்பாக சின்ன வயதில் முஸ்தபா முஸ்தபா பாடல் மூலம் தமிழ் மீது ரொம்பவே ஆர்வமானேன். அதன்பிறகு தமிழ் பாடல்களை அதிகமாக கேட்க ஆரம்பித்தேன். இதுவரை நான் கேட்ட பாடல்களில் தமிழ் மொழியை போல வேறு எந்த மொழியிலும் இனிமையான பாடல் வரிகளை கேட்டதில்லை. சினிமா பாடல்களிலேயே அதிகம் இனிமையான பாடல் வரிகளை கொண்டது தமிழ் மட்டும்தான்.

 இந்த படத்திற்கு கூட நானே தமிழில் டப்பிங் பேச விரும்பினேன். அதற்காக முயற்சி செய்தாலும், படப்பிடிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் என்னால் டப்பிங் பேச முடியாமல் போனது. மலையாளத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் தமிழ் தெலுங்கு இரண்டு மொழியும் எனக்கு தெரியும். படப்பிடிப்பின்போது எனது கதாபாத்திரத்திற்காக முதலில் தமிழ் வசனங்களை பேசுவதற்காக தயாராகி, அந்த காட்சி படமாக்கி முடிந்ததும் தெலுங்கு வசனங்களுக்காக மீண்டும் என்னை தயார்படுத்தி கொள்வேன்.

தனுஷ் போன்ற மிகச்சிறந்த நடிகருடன் நடிக்கும்போது கொஞ்சம் டென்ஷன் இருக்கவே செய்தது.. காரணம் அவர் சிங்கிள் டேக்கில் ஓகே செய்பவர். என்னால் அவருக்கு எதுவும் தொந்தரவு வந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அப்படியே மீறி சில தவறுகள் வந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார் தனுஷ். தமிழில் சில வருடங்களுக்கு முன்பு ஒருசில படங்களில் நடித்தேன். அப்போது அந்த படங்களில் நடிப்பது குறித்து நான் எடுத்தது குழந்தைத்தனமான முடிவு. மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம் மூலமாகத்தான் தமிழுக்கு திரும்ப வேண்டும் என்று நினைத்தேன். அது இந்த வாத்தி படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

இந்த படத்தில் மாணவர்களுடன் ரொம்பவே ஜாலியாக பழகும் மீனாட்சி என்கிற உயிரியல் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதற்காக நான் பள்ளியில் படித்தபோது இதேபோன்று குணாதிசயங்களுடன் எனக்கு பாடம் சொல்லித் தந்த தீபா டீச்சரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அதையே நடிப்பில் வெளிப்படுத்தினேன்.

இந்தப்படத்தில் கல்வி முறையில் உள்ள சில பிரச்சனைகள் பற்றி கூறியுள்ளோம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எனது பள்ளி காலகட்டம் என்பது மோசமான அனுபவமாகவே இருந்திருக்கிறது. என்னுடன் படித்தவர்கள் வெவ்வேறு விஷயங்களில் நன்கு திறமையானவர்களாக இருந்தாலும் படிப்பில் அவர்கள் தடுமாறுவதை பார்க்க முடிந்தது. இன்ஜினியரிங் படித்த பெண் கூட அதை முடித்துவிட்டு தனக்கு விருப்பமான நடன துறையில் தான் சேர்ந்தார். நானும் பிளஸ் டூ மட்டுமே படித்துள்ளேன். சினிமா மீதான ஆர்வம் இருந்ததால் இங்கே வந்து விட்டேன்.

பெர்சனலாக சொல்லவேண்டும் என்றால் ஒரு  டிகிரி இருந்தால் தான் நமக்கு பிடித்த வேலையை பார்க்க முடியும் என்று சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. அதேசமயம் இந்த படத்தில் நடித்தபோது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பு எவ்வளவு பெரிய மாற்றத்தை அவர்களது வாழ்க்கையில் கொண்டு வருகிறது என்பதை உணர முடிந்தபோது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் இந்த படத்தில் இருந்து நான் விலகி விட்டதாக சில செய்திகள் வெளியாகின. யாரோ அழகாக கற்பனை செய்து உருவாக்கிய செய்தி அது. அதனால் எனக்கு முன்பை விட அதிக எதிர்பார்ப்பு, பப்ளிசிட்டி, அதிக ரசிகர்கள் என நன்மையே கிடைத்தது.

மலையாளத்தில் நடிப்பதையும் தமிழ் படங்களில் நடிப்பதையும் ஒப்பீடு செய்ய தேவையில்லை. தமிழ் சினிமாவில் எந்த படங்களை கமர்சியலாக எடுக்க வேண்டும், எந்த படங்களை ரியலிஸ்டிக்காக எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட மலையாளத்தில் கூட தமிழ் படங்களுக்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது.

முதன்முறையாக இந்தப்படத்தில் தான் ஒரு நடன இயக்குனர் சொல்லிக்கொடுத்த அசைவுகளுக்கு நடனம் ஆகியுள்ளேன். தெலுங்கில் விருபாக்சி, டெவில் என இரண்டு படங்களில் நடித்துள்ளேன்.. எல்லாமே பீரியட் படங்கள் தான்.. எப்போது ஒரு கதையைக் கேட்டதும், உடனே நான் நடிக்கிறேன் என்று சொல்கிறேனா அந்த படங்கள் எனக்கு நன்றாகவே அமைந்திருக்கின்றன.. யோசித்து சொல்கிறேன் எனக்கூறி பின்னர் ஒப்புக்கொண்ட படங்கள் பெரிய அளவில் பலன் தரவில்லை. கதையை தாங்கி பிடிக்கும் கதையின் நாயகியாக நடிக்க ஆசை தான் என்றாலும் அதற்குள் இன்னும் சில படங்களில் நடித்து விட விரும்புகிறேன். அதேசமயம் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் இந்த சூழலையும் ரொம்பவே அனுபவித்து நடித்து வருகிறேன்.

வாத்தி படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்பு வேறொரு படத்திற்காக தென்காசிக்கு சென்றிருந்தபோது, அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்துவிட்டு ஏற்கனவே யூட்யூப் மூலமாக கேள்விப்பட்டிருந்த மதுரை பன் புரோட்டா சாப்பிடலாம் என முகத்தில் மாஸ்க் அணிந்தபடி ஒரு ஹோட்டலுக்கு சென்றேன். அப்போதுதான் தான் ‘வா வாத்தி’ பாடல் ரிலீஸ் ஆகியிருந்த நேரம். நான் மாஸ்கை கழட்டியதுமே அங்கிருந்து என்னை பார்த்த சிலர் ‘ஏ நம்ம டீச்சரம்மா’ என்று ஆச்சரியமாக கூவினார்கள். அந்த பாடல் ஏற்படுத்திய மேஜிக் தான் இது. இந்த படத்தின் மூலம் நான் எனக்கென எடுத்துச் செல்வது இந்த பெருமையைத்தான்” என்று கூறினார்.

வரும் பிப்-17ஆம் தேதி இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

நடிகர்கள்:

தனுஷ், சம்யுக்தா, சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடபள்ளி மது, நார ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரிஸ் பெராடி, பிரவீணா மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

திட்ட வடிவமைப்பாளர் ; அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு ; நவீன் நூலி

ஒளிப்பதிவு ; J யுவராஜ்

இசை ; G.V.பிரகாஷ் குமார்

சண்டைப்பயிற்சி ; வெங்கட்

தயாரிப்பாளர்கள் ; நாகவம்சி S – சாய் சௌஜன்யா

எழுத்து – இயக்கம் ; வெங்கி அட்லூரி

தயாரிப்பு நிறுவனம் ; சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ்

வெளியீடு ; ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்

மக்கள் தொடர்பு – ரியாஸ் K அஹ்மத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *