நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்” !
நடிகை ஹன்ஷிகா அடுத்ததாக நடிக்கும் “105 மினிட்ஸ்” எனும் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கபடவுள்ளது. சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும், ஒரு கதாப்பாத்திரம் நடிக்கும் தெலுங்கு படம் என்கிற சாதனையை இப்படம் படைக்கவுள்ளது.

நடிகை ஹன்ஷிகா மோத்வானி படம் குறித்து கூறியதாவது…

தெலுங்கு திரையுலகில், முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனை கொண்ட இப்படத்தில் ஒரே ஒரு கதாப்பாத்திரமாக நான் பங்கு கொள்வது மிகவும் மகிழ்ச்சி. இயக்குநர் ராஜா துஷ்ஷா என்னிடம் கதை கூறியபோது மிகவும் வித்தியாசமாக, ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது. திரைக்கதை பரபர திரில் பயணமாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு அம்சமும் அர்த்தம் பொதிந்ததாக அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு சிறப்பு என்னவெனில் படத்தின் தலைப்பான “105 மினிட்ஸ்” தான். படத்தின் நீளம் 105 நிமிடங்கள் கொண்டது, படத்தின் உண்மையான நேரமும் படத்தின் கதை நேரமும் ஒன்றே.

படத்தின் கதை குறித்து கூறுகையில்…
ஒரு வீட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் இளம்பெண்ணை பற்றியது தான் கதை. இதை தவிர தற்போதைக்கு கதை குறித்த ரகசியங்களை கூற முடியாது. ஆனால் மேலும் பல ஆச்சர்யங்கள் படத்தில் காத்திருக்கிறது. மே 3 ஆம் தேதி படப்பிடிப்பை துவங்கவுள்ளோம்.

பொம்மக் சிவா இப்படத்தினை தயாரிக்கிறார். படத்தின் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.