மார்ச்-7ஆம் தேதி வெளியாகும் ஷாமின் ‘அஸ்திரம்.
“தனித்துவமான கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களம் ‘அஸ்திரம்’” ; நடிகர் ஷாம் நம்பிக்கை.
“’அஸ்திரம்’ படம் எனக்கு கிடைத்த பிரம்மாஸ்திரமா ?” ; நடிகர் ஷாம்.
“சிவகார்த்தியனின் இந்த உயரம் குறித்து நான் ஆச்சர்யப்படவில்லை” ; நடிகர் ஷாம்.
“’அஸ்திரம்’ படத்தில் ஷாமின் ஜோடியாக அறிமுகமாவது எனக்கு கிடைத்த வரம் ; நடிகை நிரா பெருமிதம்.

பத்து புதிய இயக்குநர்களை உருவாக்க ‘அஸ்திரம்’ தயாரிப்பாளர் சபதம்.
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
வரும் மார்ச்-7ஆம் தேதி இந்தப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது. இதையடுத்து ‘அஸ்திரம்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.









நாயகன் ஷாம் பேசும்போது,
“பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமான அரவிந்த் ராஜகோபால் நான் படம் இயக்கப் போகிறேன் அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என என்னை தொடர்பு கொண்டார். அதன் பின் அரவிந்த், கதாசிரியர் ஜெகன் இருவரும் என்னை நேரில் சந்தித்தனர். அவர்கள் சொன்ன கதை ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. இதுவரை பல த்ரில்லர் படங்களை ரசித்து பார்த்து உள்ளோம். இந்தப் படத்தில் ஒரு தனித்துவமான கிரைம் இன்வெஸ்டிகேஷன் கதையை திரில்லர் வடிவத்தில் கொடுத்தது மற்ற படங்களில் இருந்து இதை வித்தியாசப்படுத்துகிறது. இதன் திரைக்கதையும் சுவாரசியமாக இருந்தது.





இயக்குநர் அரவிந்த் டைரக்சனுக்கு புதியவர் என்றாலும் சினிமாவில் பல வருடங்களாக பணியாற்றிய அனுபவம், சில படங்களில் நடித்த அனுபவம் எல்லாமே அவரிடம் இருந்தது. அவரது பேச்சிலும் தன்னம்பிக்கை தெரிந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஈரோட்டை சேர்ந்தவர். கடுமையாக உழைத்து முன்னேறியவர். இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டவர், இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் ஒரே கட்டமாக ஆக 30 நாட்கள் நடைபெற இருப்பதால் மொத்தமாக தேதிகளை வழங்கினால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டார்.



புது இயக்குநர் என்பதால் 15 நாட்களாக பிரித்து படப்பிடிப்பை நடத்தலாமே என்று கூட நான் சொன்னேன். ஆனால் இயக்குநர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அது மட்டுமல்ல எந்த வித பிரச்சனைகளாலும் படம் நின்று விடக்கூடாது என்பதற்காகத்தான் என் சொந்த பணத்தை மட்டுமே வைத்து படம் எடுக்கிறேன் என நம்பிக்கையுடன் கூறினார். அவர் கூறியது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. சொந்தப் பணம் போட்டு படம் எடுப்பவர்கள் சினிமாவில் ரொம்பவே குறைவானவர்கள் தான். அதனால் தான் இந்த படம் திட்டமிட்டபடி எந்த தடங்கலும் இன்றி அழகாக நிறைவு பெற்று இப்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.













































இயக்குநர் அரவிந்த் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தன்னுடைய வேலையை விட்டுவிட்டு சினிமா மீது இருந்த ஆர்வத்தால் இந்த படத்தை பண்ணுகிறார் என்பதை உணர்ந்து கொண்டு அவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய அவருடைய நண்பர்கள் அனைவரும் அவருக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அப்படி ஒரு பிரண்ட்ஷிப்பை இப்போதுதான் நான் சந்திக்கிறேன். அரவிந்த் அந்த வகையில் ரொம்பவே லக்கி என்று சொல்லலாம். அதேபோல படப்பிடிப்பின் முதல் நாளில் இருந்து ஒரு அனுபவமிக்க இயக்குநர் போலவே எல்லாவற்றையும் அழகாக கையாண்டார் அரவிந்த்.






வாரிசு திரைப்படம் எனக்கு ஒரு கம் பேக் படமாக அமைந்தது. அதற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இந்த ‘அஸ்திரம்’ படம் எனக்கு மிக முக்கியமான படம். இந்த படத்தின் கதையை எழுதியுள்ள ஜெகன் பார்ப்பதற்கு சிறியவராக தோன்றினாலும் சினிமா பற்றிய அறிவு மிகுதியாக உள்ளவர். படம் என்ன கேட்கிறதோ அதை மட்டுமே, அழகாக திரைக்கதையாக எழுதியுள்ளார். ஒரு அற்புதமான மெசேஜும் இந்த படத்தில் இருக்கிறது. படம் பார்க்கும் அனைவருமே அதை மனதார ஒப்புக் கொள்வார்கள். இந்த படத்தில் நடித்துள்ள ரஞ்சித் இதில் அறிமுகமாகி இருக்கிறார். கிட்டத்தட்ட 20 நாட்கள் ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பில் எந்தவித தயக்கமும் குழப்பமும் இன்றி அழகாக நடித்துள்ளார். நடிகர் ஜீவா ரவியும் இந்த படத்தில் தான் நடித்துள்ள ஜேம்ஸ் கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகி நிரா மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். ‘நீ போதும்’ என்கிற ஒரு மியூசிக் ஆல்பத்தில் அவரை பார்த்தபோது இவர் நமது படத்திற்கு சரியாக இருப்பார் என அரவிந்திடம் கூறினேன். அதற்கேற்ற மாதிரி படத்திலும் நிரா சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவர் ஒரு பிசியான ஹீரோயினாக மாறுவார். படத்தில் பணியாற்றிய அனைவரிடமும் பாசிட்டிவான எண்ணங்களே அதிகம் இருந்தன. அதை படத்தில் நடித்த ஒவ்வொரு கணமும் உணர முடிந்தது.
ஒளிப்பதிவாளர் கல்யாண் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்” என்று கூறினார்
















இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் பேசும்போது,
“கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி விட்டு சில குறும்படங்கள் இயக்கி, சில திரைப்படங்களில் நடித்தும் இந்த பத்து வருட பயணத்தில் ஒரு இயக்குநராக இங்கே அமர்ந்திருப்பது ஒரு கனவு போல தான் இருக்கிறது. அதே சமயம் எனக்கு குறும்படம் அனுபவம் மட்டுமே இருக்கிறது என்று தெரிந்தும் கூட புதிய இயக்குனர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்ட தயாரிப்பாளர் தன சண்முகமணி என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதையை கேட்டதும் படம் தயாரிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தின் கதையை ஒரு சில ஹீரோக்களிடம் சொல்ல ஆறு மாதம் அலைந்த நிலையில், சோசியல் மீடியாவில் நான் அனுப்பிய ஒரு மெசேஜை பார்த்து விட்டு என் மீது நம்பிக்கை வைத்து என்னை அழைத்து கதை கேட்டு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றதில் நடிகர் ஷாமுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. படத்தின் கதாநாயகி நிரா, நடிகர் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அரௌல் D ஷங்கர் ஆகியோர் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து தங்களுடைய சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர் கல்யாண் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி பின்னணி இசையில் புதுமையை கையாண்டிருக்கிறார். மேலும் எடிட்டர் பூபதி எடிட்டிங்கில் மேஜிக் செய்து இருக்கிறார்.” என்றார்.



நாயகி நிரா பேசும்போது,
“அஸ்திரம் படத்தின் கதாநாயகி என்று சொல்வதே எனக்கு சந்தோஷப்படக்கூடிய, பெருமை படக்கூடிய ஒரு விஷயம். எல்லோரையும் போல நானும் சினிமாவில் நடிப்பின் மீதான ஆர்வத்தில் நடிக்க முயற்சிகள் எடுத்து வந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் தான், வாய்ப்புகளை தேடி நாம் போகாமல், நம்மை தேடி வாய்ப்புக்களை வர வைக்க வேண்டும் என கொஞ்சம் மாற்றி யோசித்தேன். அப்படி உருவானது தான் ‘நீ போதும்’ என்கிற இசை ஆல்பம். நான் திண்டுக்கல்லில் பிறந்து சென்னையில் வளர்ந்த பெண். அப்படி இருக்கையில் அமெரிக்காவில் இப்படி ஒரு ஆல்பத்தை உருவாக்கி அதை அங்கே அறிமுகப்படுத்தும்போது நிறைய இடர்பாடுகள் வந்தது.




























ஆனால் நமக்கு நல்லது நாம் எதிர்பாராமல் நடக்கும் என்பது போல ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, குஷ்பூ, போன்றவர்கள் தங்களது டிஜிட்டல் பிளாட்பாரத்தில் அந்த பாடலை ரிலீஸ் செய்து கொடுத்தார்கள். அந்த நிகழ்வில் ஷாம் சார் நேரிலேயே வந்து அந்த ஆல்பத்தை ரிலீஸ் செய்ததோடு என்னிடம் அந்த ஆல்பம் உருவாக்கிய விதம் குறித்து பல தகவல்களை கேட்டு அறிந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து இயக்குநரிடம் இருந்து இந்த படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. அவரையும் ஜெகனையும் நேரில் சந்தித்தபோது என்னை அவர்கள் வரவேற்றது முதல் நடத்திய விதம் எல்லாமே ஒரு நல்ல அணுகுமுறையாக இருந்தது.

















மேலும் இந்த கதையை கேட்டதுமே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதே சமயம் ஒரு ஜெயிக்கிற படத்தில் நாமும் ஒரு பாகமாக இருந்தாலே நாமும் ஜெயித்தது போன்று தான் என உறுதியாக நம்புகிறவள் நான். படப்பிடிப்பு தளத்தில் நமக்கான வசதிகள், தங்குமிடம் எல்லாம் எப்படி இருக்குமோ என்ற ஒரு தயக்கத்துடன் சென்று பார்த்தால், தயாரிப்பாளர் தன சண்முகமணி அங்கே ஒரு குடும்ப சூழல் கொண்ட ஒரு சுற்றுப்புற சூழலையே உருவாக்கி வைத்திருந்தார். அங்கே படப்பிடிப்பில் நடித்த நாட்களில் எப்போதுமே தனிமையாக உணர்ந்ததில்லை. பாதுகாப்பின்மையே உணர்ந்ததில்லை. அதுதான் ஒவ்வொரு நடிகைக்கும் தேவைப்படுகின்ற விஷயம்.






















படத்தில் கதையை நடிகர் ஷாம் சார் தான் தனது தோளில் தாங்கி பிடித்து இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக தான் நாங்கள் எல்லாம் பயணித்திருக்கிறோம். அதில் குறிப்பாக இதில் அறிமுகமாக இருக்கும் ரஞ்சித் அவருடன் முழுவதும் பயணிக்க கூடிய கதாபாத்திரம் என்றாலும் ஒரு புதுமுகம் என்பதே தெரியாதபடி அவ்வளவு இயல்பாக நடிப்பதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். குறிப்பாக திறந்த மனதுடன் எதையும் கற்றுக் கொள்வதற்கு அவர் தயாராக இருந்தார்.


தனது 20 வருட திரை உலக பயணத்தில் ஜோதிகா, திரிஷா, சிம்ரன் போன்ற மிகப்பெரிய நடிகைகளுடன் சிறப்பாக நடித்தவர் ஷாம் சார், நான் அவருடைய படத்தில் அறிமுகமாகிறேன் என்பதையே மிகப்பெரிய வரமாக பார்க்கிறேன். இசை ஆல்பத்தை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் என்னை தனது படத்திலும் நடிப்பதற்கு பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்ட அந்த மனதை நான் கடவுளாக பார்க்கிறேன். சின்னத்திரை நடிகை என்று சொல்லப்படும் ஸ்டீரியோ டைப் விஷயத்தை உடைத்து இதை அவர் செய்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த நிழல்கள் ரவி, ஜீவா ரவி உள்ளிட்ட அனைவருமே எனக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். இந்த அஸ்திரம் திரைப்படம் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரு அஸ்திரம் என்றே சொல்வேன். ஒரு வரமாகத்தான் இதைப் பார்க்கிறேன்” என்று கூறினார்.
அறிமுக நடிகர் ரஞ்சித் பேசும்போது,




“பெஸ்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி எனக்கு வாய்ப்பளித்த என் தந்தைக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர் முன்னேற துடிக்கும் 10 இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பத்து படங்களுமே அறிமுக இயக்குநர்களுக்காக வாழ்க்கை கொடுக்கும் படமாக தான் தயாரிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் பற்றி நான் இப்போது சொல்வதைவிட இந்த படம் பார்த்து நீங்கள் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்து எனது பயத்தை போக்கி எனக்கு உற்சாகம் அளித்தார் நடிகர் ஷாம். பெரிய துணி கடைகளில் துணி எடுத்து விட்டு வெளியே பிளாட்பாரத்தில் உள்ள சிறிய கடைகளில் கூட கொஞ்சம் பொருட்கள் வாங்கினால் அவர்களுக்கு அதுவே பேருதவியாக இருக்கும். அது போல பெரிய படங்களை வரவேற்கும் அதே நேரத்தில் சின்ன படங்களையும் வரவேற்று ஆதரவு அளிக்க வேண்டும். ஒரு திருமண விழா போல இதற்கு உங்களை அழைக்கிறோம் வந்து பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சுவை எப்படி இருக்கிறது என்பதை உங்கள் மனதில் தோன்றிய படி சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
தயாரிப்பாளர் தன சண்முகமணி பேசும்போது,
“ஈரோடு தான் எனக்கு சொந்த ஊர். சிறுவயதிலிருந்து சினிமா பார்ப்பது தான் எனக்கு பொழுதுபோக்கு. கஷ்டமோ சந்தோஷமோ எது வந்தாலும் சினிமா பார்ப்பது என் வழக்கம். எனக்கு விவரம் தெரிந்து பெரிய படங்களை பார்ப்பதை விட தோல்வியுற்ற படங்களை அதிகமாக பார்ப்பேன். ஒருவன் அதற்காக வாழ்ந்து இருக்கிறான், கஷ்டப்பட்டு இருக்கிறான். என்ன தப்பு பண்ணியிருக்கிறான் என்பதற்காகவே அந்த படத்தை பார்ப்பேன். அப்படிப்பட்ட இயக்குநர்கள், உதவி இயக்குநர்களுக்கு இங்கே மிகப்பெரிய அளவில் வாய்ப்பு கிடைப்பதாக தெரியவில்லை. ஓடுகின்ற 10 குதிரைகளிலேயே பணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடவுள் எனக்கு தேவையான வசதியை கொடுத்து விட்டார். ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்த வயதில் நான் சினிமா துறையை தேர்ந்தெடுத்தேன்,
என்னுடைய மகன் ரஞ்சித் வக்கீலுக்கு படித்தவர்.. ஆனாலும் சினிமா மீதான ஆர்வத்தில் நடிக்க விரும்பினார் அதேசமயம் ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் எல்லாம் கொடுக்க விரும்பாமல், ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் அதன் பிறகு காலம் தீர்மானிக்கட்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டார். இந்த படத்தின் இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வருவதாக கூறியபோது நான் மிகுந்த பயண களைப்பில் இருந்தேன். ஆனால் அவர் இரண்டு மணி நேரம் கூறிய கதையை கேட்டதுமே எனக்கு களைப்பு எல்லாம் போய்விட்டது. அதற்கடுத்த சந்திப்பிலேயே அவர்தான் படத்தின் இயக்குனர் என்பதை உறுதி செய்து விட்டேன்.
இந்த படத்தின் இயக்குனர் அரவிந்த் ஆகட்டும், கதாசிரியர் ஜெகன் ஆகட்டும்.. இதில் உழைத்த டைரக்சன் டீம் ஆகட்டும். வெற்றிக்காக உழைக்கக்கூடிய ஒரு குழுவினர்.. இவர்களை நம்பி யார் படம் கொடுத்தாலும் நிச்சயமாக வெற்றிக்காக பாடுபடக் கூடியவர்கள். தோற்க விட மாட்டார்கள். அதை உறுதியாக சொல்கிறேன். தயாரிப்பாளர் எந்த விதத்திலும் நஷ்டமாகாமல் பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு டீம்.
























ஒரு சிலர் பயப்படுத்துவது போல எந்த விதத்திலும் ஒரு ஹீரோவாக ஷாம் சார் எங்களுக்கு ஒரு தொந்தரவு கூட கொடுக்கவில்லை. எல்லா விதத்திலும் பக்கபலமாக இருந்தார். குறிப்பாக இவர்கள் புதியவர்கள் என்றாலும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களையும் விட்டு விடாமல் அரவணைத்து சென்றார்” என்று கூறினார்.
நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து நடிகர் ஷாம் பேசும்போது,
“அஸ்திரம் திரைப்படம் உங்கள் திரைப்பயணத்தில் பிரம்மாஸ்திரமாக அமையுமா ?” என்ற கேள்விக்கு
“இந்த படம் எனக்கு பிரம்மாஸ்திரமாக அமையுமா என்று தெரியாது. ஒரு நல்ல இயக்குனரிடம் நல்ல கதையில் நடித்துள்ளேன் என்கிற நம்பிக்கை மட்டும் இருக்கிறது. வாரிசு படத்துக்கு பிறகு நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என இருக்கிறேன். தற்போது துரை செந்தில்குமார், விஜய் ஆதிராஜ் ஆகியோரின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவங்களின் மத்தியிலும் இப்படி ஒரு புது இயக்குநரை மீண்டும் தேர்ந்தெடுக்கிறேன் என்றால் இயக்குநர் அரவிந்த் மீதும் கதை மீதும் இருந்த நம்பிக்கை என்னை கைவிடாது” என்று கூறினார்.
“அஸ்திரம் திரைப்படத்தின் அனுபவம் மற்றும் திரைப்பயணத்தின் வெற்றி வாய்ப்புகள்” குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,
“இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்றதால் வேறு எந்த படங்களுக்கும் சென்று வராமல் இதில் மட்டுமே கவனம் செலுத்தி நடிக்க முடிந்தது. மற்றவர்கள் சொல்வது போல இந்த படத்தை என் தோள் மீது ஏற்றி கொண்டு செல்லும் பொறுப்பு இருந்ததை என்னால் உணர முடிந்தது. சினிமாவில் எனக்கு 12-பியின் மூலமாக நல்ல அறிமுகம் கிடைத்தது. கடுமையான போராட்டம் எல்லாம் நான் படவில்லை. அதே சமயம் சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைவதற்கு மிகப்பெரிய அளவில் போராடி சின்னத்திரையில் பங்கு பெற்று அதன் பிறகு சினிமாவுக்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது இந்த இடத்தை பிடித்திருக்கிறார். எல்லோருக்கும் கால நேரம் என்று ஒன்று இருக்கிறது.
சிவகார்த்திகேயன் பங்கு பெற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் ஜட்ஜாக இருந்தேன். அப்போதே சிவகார்த்திகேயனிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன்.. உனக்குள் நல்ல திறமை இருக்கிறது.. நல்ல வாய்ப்பு கிடைத்தால் நீ பெரிய இடத்திற்கு செல்வாய்.. என் வீட்டில் மட்டுமல்ல.. மற்ற பல வீடுகளில் உள்ள குழந்தைகளை கவரும் திறமை உன்னிடம் இருக்கிறது என்று கூறி இருக்கிறேன். இன்று அவருடைய இந்த உயரம், வெற்றி மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் நான் அதை அப்போதே யூகித்த ஒன்றுதான். சிவகார்த்திகேயன் இப்போது பார்த்தாலும் கூட அன்றைக்கு நீங்கள் சொன்னீர்களே சார் என சொல்லுவார்..” என்று கூறினார்.
ஐரா, எட்டு தோட்டாக்கள், பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் வெளியாக உள்ள ரேஞ்சர், ஜாக்சன் துரை 2 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களில் துணை படத்தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார். கலை வடிவமைப்பை ராஜவேல் கவனிக்க, சண்டை பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார்.