விஜய் மில்டன் இயக்கத்தில் ஷாம்
வாரிசு படத்தை தொடர்ந்து மீண்டும் பிஸியான ஷாம்
தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாக மட்டும் தேர்ந்தெடுத்து வருவதால் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தில் சீரான வேகத்தில் பயணித்து வருகிறார்.

அதன் பயனாகத்தான் தளபதி விஜய்யுடன் இணைந்து ‘வாரிசு’ படத்தில் அவரது சகோதரராக நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு ஷாமை தேடி வந்தது.

சமீபத்தில் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீசான வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் அதில் நடித்துள்ள ஷாமின் நடிப்புக்கும் பாராட்டுக்களைத் தேடி தந்துள்ளது.
அதுமட்டுமல்ல புதிய பட வாய்ப்புகளையும் அவருக்கு பெற்று தந்துள்ளது.
அந்தவகையில் தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஷாம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னதாக விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமாரை வைத்து விஜய் மில்டன் இயக்கிய மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..
விஜய் மில்டன் படத்தை தொடர்ந்து இன்னும் சில முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்காக நடிகர் ஷாமுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
வாரிசு படத்தின் வெற்றியில் மகிழ்ந்திருக்கும் ஷாம், இனிவரும் வருடங்களில் தன்னுடைய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகும் என உறுதி செய்துள்ளார்.
இதன் அறிகுறி விஜய் மில்டன் படம் மூலமாகவே தெரிய ஆரம்பித்திருக்கிறது.