
சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ கேரளா ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் – மதுரை – திருச்சி – கோயம்புத்தூர் – உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னை, ஹைதராபாத், பெங்களூரூவைத் தொடர்ந்து நேற்று திருவனந்தபுரத்தில் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், இயக்குநர் அருண் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் எஸ். யூ . அருண்குமார் பேசுகையில், ” விக்ரம் சாருடன் இணைந்து பணியாற்றும் முதல் படம். இந்த அனுபவம் எப்படி இருந்தது என்றால் நாங்கள் இருவரும் இணைந்து பத்து இருபது திரைப்படங்களில் பணியாற்றிய பிறகு இந்த படத்தில் இணைந்தது போல் இருந்தது. படபிடிப்பு தளத்தில் அவ்வளவு சௌகரியமாக .. இயல்பாக பணியாற்ற வைத்தார். விக்ரம் சார் – எஸ் ஜே சூர்யா சார் ஒரு திரைப்படத்தில் இருந்தால் … அதிலும் எஸ் ஜே சூர்யா ஒரு படத்தில் இருக்கிறார் என்றால்… அங்கு பாசிடிவ் நிறைய இருக்கும். சிறந்த நடிகர் சுராஜும் இதில் இணைந்திருக்கிறார். அனுபவம் மிக்க நடிகர்கள் ஒன்றிணைந்து என்னை போன்ற இயக்குநர்களின் கற்பனையை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். துஷாரா விஜயனும் தன்னுடைய பங்களிப்பை முழுமையாக வழங்கி இருக்கிறார். தயாரிப்பாளருக்கும் நன்றி.
இந்தப் படம் ஒரு ரியலிஸ்டிக்கான மெயின் ஸ்ட்ரீம் கமர்சியல் ஃபிலிம். உங்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்.
சீயான் விக்ரம் பேசுகையில், ” இந்த திரைப்படம் Raw & Rustic ஃபிலிம். இயக்குநர் எஸ். யூ .அருண்குமார் இரண்டு வகையான படங்களையும் இயக்கி இருக்கிறார். அதாவது ‘சேதுபதி’ போன்ற கமர்சியல் படங்களையும் இயக்கி இருக்கிறார். ‘சித்தா’ போன்ற சென்சிடிவ்வான படங்களையும் இயக்கி இருக்கிறார் இந்த இரண்டு படத்தின் கலவையாக இந்த ‘வீர தீர சூரன்’ படம் இருக்கும்.
இந்தப் படத்தில் வழக்கமான மாஸ் கமர்சியல் திரைப்படங்களுக்கான இலக்கணத்தை மாற்றி புதிதாக முயற்சி செய்து இருக்கிறோம். ஹீரோ இன்ட்ரொடக்ஷன்… ஃபைட்.. சாங்ஸ்.. மாஸ் சீன்ஸ்.. என வழக்கமான விசயங்கள் இல்லாமல் புதிதாக ஒன்றை முயற்சி செய்திருக்கிறோம். இது எங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம். தியேட்டருக்கு வருகை தரும் ரசிகர்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இந்த திரைப்படத்தில் அனைவரும் சிறந்த பெர்ஃபாமர்ஸ். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இது போன்ற ஒரு கமர்சியல் திரைப்படத்தில் சிறந்த நடிகர்கள்.. ஒவ்வொரு காட்சிகளிலும் தங்களுடைய ஷட்டிலான பெர்ஃபார்மன்ஸை வழங்கி இருக்கிறார்கள். இது படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் காட்சிகளிலும்… பாடல்களிலும்… சண்டை காட்சிகளிலும்.. உரையாடல்களிலும் … நுட்பமான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு எமோஷனல் கன்டென்ட் உள்ள படம். இதில் எஸ். ஜே. சூர்யாவும் நன்றாக நடித்திருக்கிறார். நான் அவருடைய ரசிகன். அவர் இயக்கிய ‘குஷி’, ‘வாலி’ போன்ற படங்களை பார்த்து வியந்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் நடிகராக மாறி அதிலும் வெற்றி பெற்று வருகிறார். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பையும் பார்த்து ரசித்திருக்கிறேன்.
ஆக்ஷன் ஓரியண்டட் வயலன்ட் ஃபிலிமில் நடிகைகளுக்கு பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பு இருக்காது என்பார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் நடிகை துஷாரா விஜயனுக்கு நன்றாக நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கு இந்த படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை இயக்குநர் அளித்திருக்கிறார். இயக்குநர் எஸ். யூ . அருண் குமாரின் படைப்பில் பெண் கதாபாத்திரம் வலிமையாக எழுதப்பட்டிருக்கும்.
சுராஜ் – ஒரு மல்டி டேலன்டெட் ஆக்டர். இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது அவருக்கு ஒரு தமிழ் வார்த்தை கூட தெரியாது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் பேசி, பழகி தமிழில் பேச கற்றுக் கொண்டார். இந்தப் படத்திற்காக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ‘பீப் பாக்ஸ்’ செய்து அனைவரையும் கவர்ந்தார்.
நான் மலையாளத்தில் அறிமுகமாகும் போது எனக்கு ‘மதி’ என்ற ஒரு வார்த்தை மட்டும்தான் தெரியும். இதனால் மலையாள படங்களில் நடிக்கும் போது.. மலையாள மொழி பேசி நடிக்கும் போது உள்ளுக்குள் டென்ஷனும் , பதற்றமும் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் பதினைந்து நிமிடத்திற்கு ஒரு நீளமான காட்சியில் சுராஜ் தமிழில் அற்புதமாக நடித்துக் கொண்டே பேசி அனைவரையும் வியக்க வைத்தார்.
இந்தப் படத்தில் அனைவருக்கும் கிரே ஷேடு இருக்கும். அதற்கு ஒரு நியாயமும் இருக்கும். ஹீரோயின் கேரக்டர் மட்டும் தான் பாசிட்டிவ்வாக இருக்கும்.
சமீபத்தில் வெளியான ‘பொன் மான்’, ‘மார்க்கோ’,’ ஆவேசம் ‘போன்ற படங்கள் வெளியாகி மலையாள திரையுலகின் வளர்ச்சியை காட்டுகிறது. மலையாள திரையுலகம் தற்போது சிறப்பாக இருக்கிறது. ‘மின்னல் முரளி ‘பான் இந்திய திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது. ‘கே ஜி எஃப்’, ‘காந்தாரா’, ‘ பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர் ‘ என பான் இந்திய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் பான் இந்திய படமாக வெளியாகும் பிருத்விராஜின் எம்புரான் படமும் வெற்றி பெற வேண்டும். நான் மோகன்லாலின் ரசிகன். எம்புரான் படத்தின் டிரைலர் நன்றாக இருந்தது. அந்தத் திரைப்படத்துடன் எங்களுடைய வீர தீர சூரன் படமும் வெளியாகிறது. இதுவும் ஒரு எமோஷனலான படம். இந்த இரண்டு படமும் வெற்றி பெற வேண்டும். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கேரள ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
எஸ். ஜே. சூர்யா பேசுகையில், ” வீர தீர சூரன் படம் எப்படி இருக்கும் என்றால்.. இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி பாணியிலான மேக்கிங் ஒரு கிராம பின்னணியில் இருந்தால் எப்படி இருக்குமோ.. அப்படி இருக்கும். அருண்குமார் சினிமா மீது பெரும் காதல் கொண்டவர்.
இந்தப் படம் மலையாள ரசிகர்களுக்கு இரண்டு விசயங்களில் தொடர்பு ஏற்படும். முதலாவது இப்படத்தின் தயாரிப்பாளர். இந்த மண்ணை சார்ந்தவர். இண்டியூஜுவல் புரொடியூசர். கதையை நம்பி பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இயக்குநர் என்ன விரும்புகிறாரோ… அதை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். மதுரையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது 15 நாட்கள் மழையால் பணிகள் நின்றது. அப்போதும் அவர் இயக்குநருக்கு உறுதுணையாக இருந்தார்.
இந்தப் படத்தின் முதல் பாதி கதையை கேட்டவுடன் நான் தீர்மானித்து விட்டேன் இந்த படம் பெரிய வெற்றி படம் என்று. இதில் நடிக்க வேண்டும் என்றும் உறுதி கொண்டேன்.
சீயான் விக்ரம் – சுராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.
இந்தப் படத்தில் இடம்பெறும் 16 நிமிட காட்சியை சிங்கிள் ஷாட்டில் படமாக்கும் போது.. இப்படத்தின் மீது அனைவருக்கும் இருந்த காதலும், அன்பும் வெளிப்பட்டது. இயக்குநர் இந்த படத்தினை எவ்வளவு நேர்த்தியாக உருவாக்கி இருப்பார் என்பதற்கு இந்த ஒரு காட்சி போதும் என நான் நினைக்கிறேன். அவருடைய ஸ்டைலில் ஒரு மாஸான படத்தை கொடுத்திருக்கிறார். இதற்கு நாங்கள் எல்லாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறோம்.
காலங்களை கடந்து நிற்கும் ஒரு படமாக இந்த படம் இருக்கும். மாநகரங்களில் இந்த திரைப்படம் பேசப்படும். அருண்குமார் என்றொரு இயக்குநர் வீர தீர சூரன் என்ற படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார் என அனைவரும் பேசுவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.
சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில், ” நான் நடிக்கும் முதல் வேற்று மொழி படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.
மலையாளம் தவிர வேறு எந்த மொழியும் எனக்கு பேச தெரியாது. இந்தப் படத்தில் நான் தமிழில் பேசி நடித்திருக்கிறேன். இதில் கிடைக்கும் பாராட்டுகள் அனைத்தும் இந்த படக் குழுவினரை தான் சேரும்.
இந்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டருக்கு வருபவர்கள் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து விட வேண்டும். ஏனெனில் மற்ற படங்களைப் போல் இது சாதாரண படமல்ல. இந்தப் படத்தின் முதல் ஷாட்டில் இருந்தே கதை தொடங்கி விடும். அதனால் அதனை காண தவறாதீர்கள். இதில் இன்னொரு காரணமும் இருக்கிறது .அதில் நான் இருக்கிறேன் ” என்றார்.
துஷாரா விஜயன் பேசுகையில், ” சித்தா படம் பார்த்துவிட்டு 45 நிமிடம் சிலையாக அப்படியே உட்கார்ந்து விட்டேன். அன்று இரவு இரண்டு மணி அளவில் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் இயக்குநர் எஸ். யூ அருண்குமாருக்கு ஒரு நீளமாக மெசேஜை ஒன்றை அனுப்பினேன். அவர் அதை பார்க்கவில்லை. ஆனாலும் அவருடன் பேச வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அந்தத் தருணத்தில் எனக்குத் தெரியவில்லை… அவருடைய இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நான் நடிப்பேன் என்று. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு ‘சாமி’ படம் மிகவும் பிடிக்கும் . அதில் விக்ரம் சாருக்கும், திரிஷா மேடத்திற்கும் இடையேயான ரொமான்ஸ் நன்றாக இருக்கும். அது ஒரு மாஸ்டர் பீஸ். அதேபோன்று காதல் காட்சியில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சீயான் விக்ரமும் சாருடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்தப் படத்தில் கலைவாணி என்பது என் கேரக்டரின் பெயர். சுயநலமற்ற அன்பை அள்ளி வழங்கக்கூடிய கேரக்டர். இந்தப் படத்தில் அவருடைய உலகம் என்பது கணவரும், குழந்தைகளும் தான். உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் மிகவும் பிடிக்கும் என நம்புகிறோம்.அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறோம்.
மலையாள திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விரைவில் மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ” என்றார்.
இதனைத் தொடர்ந்து பிரபலமான லூலூ மாலில் பட வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் படக் குழுவினர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ரசிகர்களும் நட்சத்திரங்களுடன் செல்ஃபி எடுத்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆதரவு அளித்தனர்.