
கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ படக் கொண்டாட்டம்
‘சீயான்’ விக்ரம் ரசிகர்களால் ஸ்தம்பித்த கரூர், ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்!!




சீயான் விக்ரம் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுக்க, ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சீயான் விக்ரம். இதன் ஒரு பகுதியாக கரூர் சென்றபோது, ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூட, மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ரசிகர்களின் உற்சாக வரவேற்பில், மனம் நெகிழ்ந்த சீயான் விக்ரம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம் கடந்த வாரம் வெளியான நிலையில், தமிழகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ளது.
படத்தினைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினருடன் இணைந்து தமிழகமெங்கும் பல நகரங்களுக்குச் சென்று, ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சீயான் விக்ரம்.
இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் கரூர் சென்ற நிலையில், சீயான் வந்திருப்பது அறிந்து, பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர். அந்த மொத்த இடமும், நகர இடமில்லாத அளவு ஸ்தம்பித்துப் போனது, காவல் துறையினர் உதவியுடன், ரசிகர்களை சந்தித்து அவர்களின் உற்சாக வரவேற்பிற்கு நன்றி தெரிவித்தார் சீயான் விக்ரம்.
ஆயிரக்கணக்கில் கூடிய ரசிகர்களின் உற்சாக வீடியோ, இப்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து, வீர தீரன் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மக்களின் பெரும் வரவேற்பில், உலகமெங்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.