‘லாரா’ படத்தின் டைட்டில் லுக் சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தினார்!

Share the post

‘லாரா’ படத்தின் டைட்டில் லுக் சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தினார்!

நடிகர் சத்யராஜ் ‘லாரா’ படத்தின் தலைப்பை அறிமுகம் செய்தார்!

நடிகர் சத்யராஜ் பாராட்டி வாழ்த்திய ‘லாரா’ திரைப்படம்!

ரசிகருக்கு மரியாதை, நடிகர் சத்யராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி : நெகிழும் லாரா படத்தின் தயாரிப்பாளர்!

காவல்துறைக்குச் சவாலான வழக்கை மையமாக வைத்து உருவாகி இருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் ‘லாரா ‘

இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும் ‘லாரா’

‘நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்’ என்பார்கள். அதுபோலவே கட்டுக்கதைகளுக்கும் அளவில்லை.ஒரு சம்பவத்தைப் பற்றி மக்கள் பேசும்போது ஆளாளுக்குத் திரித்து விதவிதமாகக் கதை கதையாகச் சொல்வார்கள். அப்படி அவர்களால் கட்டப்படும் கட்டுக்கதைகள் சிலவேளை ஆச்சரியமூட்டும்; சில அதிர்ச்சியாகவும் இருக்கும்.
அப்படிச் சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் மர்மமாகவே இருந்தது. ஆனால் அது பற்றிய கதைகள் விவரங்கள் பல விதங்களில் பரவியிருந்தன. அப்படி ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான்
‘லாரா ‘.

இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார்.எம் கே அசோசியேட்ஸ் என்ற பெயரில் கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த தொழிலதிபர் M.கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.

ஆர்.ஜே.ரவீன் ஔிப்பதிவு செய்துள்ளார். ரகு சரவண் குமார் இசையமைத்துள்ளார். வளர்பாண்டி படத்தொகுப்பு, பாடல் வரிகள் – M.கார்த்திகேசன், முத்தமிழ் செய்துள்ளார்.

‘லாரா ‘ படத்தில் பிடிச்சிருக்கு, முருகா புகழ் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் மேத்யூ வர்கீஸ் , கார்த்திகேசன், எஸ்.கே. பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

சஸ்பென்ஸ்,பரபரப்பு நிறைந்த திரில்லர்,மர்மங்கள் கொண்ட புலனாய்வு என்று மூன்றும் இணைந்த வகைமையில் அமைந்த கதையே
‘லாரா ‘என்கிற விறுவிறுப்பான படமாக உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு நான்கு கட்டங்களாக பொள்ளாச்சி, கோவை, கடலூர், காரைக்கால், பாண்டிச்சேரி எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

‘லாரா ‘ திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் M. கார்த்திகேசன் பேசும் போது,

“90களில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் பகுதியில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது காரைக்காலுக்கும் அக்கரை வட்டம் என்ற பகுதிக்கும் இடையில் ஒரு குறுக்குப் பாலம் உண்டு. அதில் போக்குவரத்து குறைவாக இருக்கும்.தனியே செல்வதற்கு அச்சமூட்டும்.
சுற்றுப்புறம் எல்லாம் விவசாய நிலங்கள்.
அந்த மரப்பாலத்தினருகே ஒரு பெண் சடலம் கிடந்தது. அடையாளம் தெரியாது சேதமடைந்த நிலையில் அந்தப் பெண் சடலம் கிடந்தது. அது பற்றி போலீஸ் எவ்வளவோ விசாரித்த போதும் சரியாகத் துப்பு கிடைக்காமல் அவர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.ஆனால் மக்கள் அது இன்னார் என்றும் இன்னாரது மனைவி என்றும் ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள்.ஆனால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. நான் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். மக்கள் தாங்களாகவே எப்படி இப்படிப் புனைகதைகள் சொல்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிலர் சொன்ன கதைகள் வியப்பாகவும் , யாரும் யோசிக்காத விதத்தில் சுவாரஸ்யமாகவும் இருந்தன.

நாங்கள் திரைப்படம் எடுப்பது என்று பேசியபோது வேறொரு கதையைத்தான் படமாக்க நினைத்தோம். ஆனால் அந்தச் சம்பவம் ஏனோ எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. மனதில் பொறி தட்டி வெளிச்சம் கிடைத்தது போல் இருந்தது. உடனே அது பற்றி நாங்கள் யோசித்தோம். அதை விரிவாக்கி திரைப்படமாக எடுப்பதாக முடிவு செய்தோம். அதுதான் இந்த
‘லாரா ‘ திரைப்படம்.திட்டமிட்டபடி படத்தையும் எடுத்து முடித்து விட்டோம்.

ஒரு தயாரிப்பாளராக இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது.இந்தத் திரைப்படத்தை, குழுவினரின் ஒத்துழைப்பாலும் நடித்தவர்களின் அபரிமிதமான ஆதரவாலும் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் முடித்திருக்கிறோம். இது ஒன்றையே இந்தப் படக்குழுவினரின் ஒத்துழைப்பிற்கும் உழைப்புக்கும் சான்றாகச் சொல்வேன்.

இப்படத்தின் டைட்டில் லுக்கை என் மதிப்பிற்குரிய நடிகர் சத்யராஜ் அவர்கள் வெளியிட்டது, அதுவும் என் பிறந்த நாளில் வெளியிட்டது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி என்றுதான் கூற வேண்டும்.

நான் சத்யராஜ் அவர்களின் தீவிர ரசிகன். அவரே என் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.

படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து விட்டுப் பாராட்டி வாழ்த்தினார். அதுவே இப்படத்திற்குக் கிடைத்த இன்னொரு பலமாக மாறியுள்ளது. படக்குழுவினர் புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.”என்கிறார்.

படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் மணிமூர்த்தி பேசும்போது,

“இந்தக் கதை கடலும் கடல் சார்ந்த பகுதியில் நடப்பதால் கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம் .அதே போல பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது.

வெவ்வேறு இடங்களில் நான்கு கட்டங்களாகப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.தயாரிப்பாளர் சொன்ன கதையை விரிவாக்கம் செய்து திரைக்கதை அமைத்த போது, கதைக்கு வலுவும் சுவாரஸ்யமும் சேர்ப்பதற்காக இது சார்ந்த பல விவரங்களைத் தேடினோம். நான் காரைக்காலில் பல மாதங்கள் தங்கி இருந்து அதைப் பற்றி விவரங்களைச் சேகரித்தேன் . இந்த வழக்கு சார்ந்த தொழில்நுட்ப விவரங்களை அறிவதற்கு காவல் நிலையம் சென்று இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் போன்றவர்களிடம் பேசித் தகவல்களைச் சேகரித்தேன் ஒரு குற்றவியல் வழக்கு,எப்போது காவல்துறையைக் குழப்புகிறது? என்னென்ன புள்ளிகளில் அந்த வழக்கு நிலை பெறாமல் புலனாய்வில் இருந்து நழுவிச் செல்கிறது? எப்படிப்பட்ட சூழலில் அந்த வழக்கு காவல்துறைக்குப் பெரும் சவாலாக மாறுகிறது? போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடைகளைப் பெற்றோம். அதற்கான தொழில் நுட்பக் காரணங்களையும் கண்டறிந்தோம். அவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்து இந்தத் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்.

இதில் வரும் ஒவ்வொரு சிறு பாத்திரமும் கூட தொடர்பு இல்லாமல் சம்பந்தம் இல்லாமல் படத்தில் இருக்காது. கதையில் ஒவ்வொன்றுக்கும் தொடர்பு இருப்பது போல் காட்சிகளை உருவாக்கி இருக்கிறோம்.

இது ஒரு புது யூனிட் என்று பார்க்காமல் அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது சொந்தப் படம் போல் இதற்காக உழைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பின் போது சிலரைத் தலைகீழாகத் தொங்க விட வேண்டி இருந்தது.என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பக்கவாகச் செய்திருந்த போதும் சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டன.
கடற்கரைகள், காடுகள், பாறைகள், நீருக்கடியில் உள்ள பாறைகள் என்று கரடுமுரடான இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்.

நாங்கள் புதுப் படக்குழு தான்.இருந்தாலும், எந்த அசெளகரியத்தையும் மனதில் வைக்காமல் படத்திற்காக சிறிதும் தயக்கம் காட்டாமல் இறங்கிப் பணியாற்றி இருக்கிறார்கள் .படத்துக்காகத் தங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுத்து இருக்கிறார்கள் .தொழில்நுட்பக் கலைஞர்களும் சரி, நடிப்புக் கலைஞர்களும் சரி யாரும் எந்தக் குறையும் வைக்கவில்லை.

திரையுலகில் நிறைய படங்கள் தயாரானாலும் சில படங்கள் வெளிவராமல்,சில படங்கள் முடிக்கப்படாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அதற்குக் காரணம் தயாரிப்பாளர் -இயக்குநர் இவர்களிடையே ஏற்படும் முரண்பாடுகள் அதுவும் பெரிதாக இருக்காது .யார் சொல்வதை யார் கேட்பது என்கிற ஈகோ மோதல்கள் வருவதுண்டு.பெரும்பாலும் சில சில சொற்கள் தந்த மனத்தாங்கல்கள், மனவருத்தங்கள், தர்ம சங்கடங்கள்தான் அப்படிக் கொண்டு போய் நிறுத்தி இருக்கும். அதனால் ஒரு படைப்பு மட்டுமல்ல,பலரது உழைப்பும் தயாரிப்பாளரின் பணமும் முடங்கிப் போகிற நிலை வருகிறது.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை படத்தை எடுக்கும்போது ஒற்றை இலக்கை நோக்கியே தயாரிப்பாளரும் நானும் இணைந்து பணியாற்றினோம்.

எனவே படம் நன்றாக வந்துள்ளது .பெரிய பட்ஜெட்டில் சிறப்பாகக் கொடுத்துள்ளோம் என்பதை விட, அதைவிட மேலாகக் கொடுத்துள்ளோம் என்று நம்புகிறோம்” என்கிறார்.

‘லாரா ‘திரைப்படத்திற்கான,
படப்பிடிப்பிற்குப் பிந்தைய தொழில்நுட்ப மெருகேற்றும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *