வெளியானது, நயன்தாராவின் “நெற்றிக்கண்” திரைப்படம் !






தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், பரபர, திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள “நெற்றிக்கண்” திரைப்படம்
Disney Plus Hotstar தளத்தில் 2021 ஆகஸ்ட் 13 முதல் உலகமெங்கும் வெளியாகிறது.






இயக்குநர் மிலிந்த் ராவ் படம் குறித்து கூறியதாவது…


எங்கள் திரைப்படத்திற்கு இது வரையிலும் கிடைத்து வரும், அற்புதமான வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பட வெளியீட்டுக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் இதுபோன்ற வரவேற்பைப் பார்ப்பது எங்கள் குழுவிலுள்ள அனைவருக்கும் பெரிய உற்சாகததை தந்துள்ளது. இதன் அனைத்து பெருமையும் நயன்தாரா அவர்களையே சேரும். இப்படத்தில் அவரது உழைப்பு, நம்பமுடியாத அளவு பிரமிப்பானதாக இருந்தது. அவர் இப்படத்தில் ஒரு பார்வையற்ற நபராக நடிப்பதால், பார்வையற்றோரிடமிருந்து அவர்களின் அனுமதியுடன் நாங்கள் நிறைய குறிப்புகளைப் பெற்று, அதை படத்தில் பயன்படுத்தினோம். தயாரிப்பாளராக இருந்தபோதிலும், நயன்தாரா மேடம் இந்த வேடத்துடன் பொருந்துகிறாரா என்று சோதனை படப்பிடிப்பை நடத்த விரும்பினார் அதன் படி அவரை வைத்து டெஸ்ட் ஷூட் செய்தோம். அவர் உடல்மொழி பார்வையற்ற ஒருவரை போலவே இருந்தது. மேலும் அவர் இப்பாத்திரத்தில் மேக்கப்பே இல்லாமல் நடித்துள்ளார். இத்தனை பெரிய பிரபலமாக இருந்தாலும் இந்த கதாப்பாத்திரத்திற்கு அவர் தந்த உழைப்பு அபாரமானது. மிக கச்சிதமாக, நுணுக்கத்துடன் இந்த பாத்திரத்தை அவர் செய்துள்ளார். பார்வையற்ற பாத்திரம் என்றவுடனேயே இந்த பாத்திரம் எல்லாப்படத்தையும் போல, கருப்பு கண்ணாடி மாட்டி நடமாடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். கண்கள் தான் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி. அதனை முழுதாக வெளிப்படுத்த வேண்டும், என்பதில் உறுதியாக இருந்தோம். படப்பிபிடிப்பில் எளிதாக கவனம் சிதறும் ஆனால் அனைத்து தடைகளையும் உடைத்து, நயன்தாரா அவர்கள் கண் தெரியாத ஒருவரை திரையில் அற்புதமாக கொண்டு வந்திருக்கிறார். படத்தில் இந்த பாத்திரம் இரண்டு முக்கியமான நிலைகளை கடந்து செல்லும். முதலில் அவருடைய கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பார்வையில்லாத அதிர்ச்சியைக் கடந்து செல்லும். அப்போது மிக பலவீனமான நிலையில் இருக்கும். அந்த நிலையை கடந்து அமைதியான நிலையை அந்த பாத்திரம் அடையும். நீண்ட பொதுமுடக்கம் முடிந்த பிறகு நாங்கள் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்தபோது, ‘இதுவும் கடந்து போகும்’ பாடலுக்காக, அவர் அதிக எடையைக் குறைத்ததைக் கண்டு, ஒட்டுமொத்த குழுவும் வியந்தது. மக்கள் அவரை லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடுவது அவருக்கு பொருத்தமே. இப்படத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. படத்தில் அனைவரது பங்களிப்பும், “நெற்றிக்கண்” படத்தை அருமையான படைப்பாக மாற்றியுள்ளது. ரசிகர்கள் கண்டிப்பாக இப்படத்தை கொண்டாடுவார்கள் என்றார்.



Rowdy Pictures சார்பில் விக்னேஷ் சிவன் இப்படத்தை Kross Pictures உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார் . R..D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.