
ரசவாதி’ திரைவிமர்சனம் !!
டிஎன்ஏ மெக்கானிக் நிறுவனம் – தயாரித்து, சாந்தகுமார் இயக்கிஅர்ஜுன் தாஸ் கதாநாயகன் நடித்த வெளிவந்திருக்கும் படம் *ரசவாதி’
இசை -தமன்
சித்த மருத்துவரான நாயகன் அர்ஜுன் தாஸ், தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து அமைதியான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக கொடைக்கானலுக்கு வருகிறார்.
அங்கிருக்கும் மக்களுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு, இயற்கை மற்றும் உயிரினங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
அங்கிருக்கும் தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றும் நாயகி
தான்யா ரவிசந்திரனுக்கும், அர்ஜுனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்கிறது. இதற்கிடையே, கொடைக்கானலுக்கு பணி மாற்றம் பெற்று வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் சங்கர், அர்ஜுன் தாஸை கண்டதும் கோபடமடைவதோடு,அவரது அமைதியான வாழ்க்கையை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளைமேற்கொள்கிறார். தன் மீது சுஜித் எதற்காக வன்மத்தை கக்குகிறார் என்று புரியாமல் குழம்பும் அர்ஜுன், அவர் என்னதான் தனக்கு தீமை செய்தாலும்அதற்கு எதிர்விணை காட்டாமல் ஒதுங்கி செல்லவே முயற்சிக்க, சுஜித் அர்ஜுனை விடுவதாக இல்லை. இப்படியே தொடரும் அவரடைய வன்மன், அர்ஜுனின்வாழ்க்கையை என்ன செய்தது?, சுஜின் அர்ஜுன் மீது வன்மம் கொள்ள காரணம் என்ன?, அர்ஜுன் மறக்கநினைக்கும் அவரது கடந்தகால வாழ்க்கை என்ன? என்பதை காதலையும், சமூக வாழ்க்கையையும் சேர்த்து சொல்வது தான் ‘ரசவாதி’.
இயக்குநர் சாந்தகுமார் தான் சொல்ல வந்த கதைக்கான திரைக்கதையில் அரசியல், தத்துவம், சமூகம் சார்ந்த பல்வேறு விசயங்களை பேசுவது வழக்கம். அப்படி தான், இந்த படம் காதல் கதையாக இருந்தாலும், அரசியல், மருத்துவம், சமூக மாற்றம், இயற்கை உள்ளிட்ட விசயங்களைப் பற்றி பேசி அமைதியான சூழலை நம் மனதுக்குள் கடத்திவிடுகிறார்.
நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், வில்லனாக நடித்தாலும் சரி, நாயகனாக நடித்தாலும் சரி, இறுக்கமான மனநிலையோடு இருக்கும் வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்திலும் அப்படிப்பட்ட வேடம் தான் என்றாலும், இதில் அதிகமான காதல் காட்சிகளில் நடித்து தனது இறுக்கத்துடன், ரசிகர்களின் இறுக்கத்தையும் போக்கியிருக்கிறார். ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கும் அர்ஜுன் தாஸ், பல இடங்களில் குறைவான வசனங்கள் பேசினாலும், பார்வையிலேயே தனது உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், பேரழகியாக இல்லை என்றாலும் பார்த்தாலே போதும் பசியே போய்விடும், என்ற அளவுக்கு அளவான அழகோடும், நடிப்போம் ரசிகர்களை கவர்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ரேஷ்மா, பரதநாட்டிய நடனத்தில் தொடங்கி, தனது இல்லற வாழ்வின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காட்சி என தன் பார்வையாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுஜித் சங்கர், வில்லன் வேடமாக இருந்தாலும் தனது நடிப்பின் மூலம் ஹீரோ பக்கத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிடுகிறார். அவரது மேனரிசமும், வசன உச்சரிப்பும் வித்தியாசமாக இருந்தாலும், அவரது கதாபாத்திரத்தை தனித்துவமாக காட்டி கவனம் ஈர்த்துவிடுகிறது.
ஜி.எம்.சுந்தர், ரம்யா சுப்ரமணியன், ரிஷிகாந்த் என்று மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக வந்து போகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசு கொடைக்கானலின் அழகை மட்டும் இன்றி அங்கிருக்கும் அமைதியான சூழலுடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார்.
தமன்.எஸ்-ன் இசையில் பாடல்கள் கதைக்களத்திற்கு ஏற்ப அமைதியாகவும், மனதை வருடுவதுபோலவும் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ரேஷ்மாவின் பரதநாட்டிய நடனத்திற்காக போடப்பட்டிருக்கும் பீஜியம் இனி கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் பட்டையை கிளப்பும் என்பது உறுதி.
ஒரு சாதாரண காதல் கதை தான் என்றாலும், அதை வைத்துக்கொண்டு இயக்குநர் சாந்தகுமார் பேசியிருக்கும் விசயங்கள் அனைத்தும், சுவாரஸ்யமாக மட்டும் இன்றி சமூகத்திற்கு தேவையானவையாகவும் இருக்கிறது. நாயகன் மட்டும் இன்றி வில்லன் கதாபாத்திரன் மூலம் கூட சில வாழ்க்கை தத்துவங்களை சொல்லும் வசனங்கள் அனைத்தும் கைதட்டல் பெறுகிறது.
இரண்டாம் பாதியில் வேகம் எடுக்கும் திரைக்கதை முதல் பாதியில், கதைக்கருவில் பயணிக்காமல் வேறு ஒரு தளத்தில் பயணித்திருப்பது திரைக்கதையை சற்று பலவீனமடைய செய்தாலும், இயற்கை, இயற்கை மருத்துவம், உயிரினங்களின் மீது அக்கறை காட்டுவது போன்றவற்றின் மூலம் பலவீனத்தை மறைத்திருக்கிறது.
மொத்தத்தில்,
இந்த ‘ரசவாதி’ அனைவரும் மனதிலும் இடம் பிடிக்கும் !!