
ராமம் ராகவம் அப்பா மகன் கதை மாதிரி தெரியும் ஆனால் படத்துக்குள் வச்சிருக்கிறது ரொம்ப ஸ்ட்ராங்கான விசயம். – சமுத்திரக்கனி
ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது. ஃபிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகன், ‘சங்கத்தலைவன்’ பட இயக்குநர் மணிமாறன், ‘வெள்ளை யானை’ இயக்குநர் சுப்ரமணிய சிவா, ‘சித்திரைச் செவ்வானம்’ இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, ‘ரைட்டர்’ பட இயக்குநர் பிராங்க்ளின், ‘திரு. மாணிக்கம்’ பட இயக்குநர் நந்தா பெரியசாமி, ‘தலைக்கூத்தல்’ பட இயக்குநர் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, இயக்குநர் மலையன் கோபி, இயக்குநர் கார்த்திக், பிக்பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன், நடிகர் தீபக், ஹரீஷ் ஆகியோருடன் சமுத்திரக்கனி, இயக்குநர் தனராஜ், தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு, கதாநாயகி மோக்ஷா, ப்ரமோதினி, பாடலாசிரியர் முருகன் மந்திரம் முதலிய படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் பிருத்தவி பேசுகையில், “தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும் அப்பாவை அழைத்து, ‘ஐ மிஸ் யூ’ என படம் பார்ப்பவர்கள் சொல்வார்கள்” என்றார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி பேசுகையில், “கல்லா இருந்த என்னை மாணிக்கக்கல்லாக மாற்றினார் சமுத்திரக்கனி. ராமரால் அகலிகைக்கு வாழ்க்கை கிடைச்சது போல், அவரால் எனக்கு வாழ்க்கை கிடைத்தது. அவர் சிறகில்லா தேவதை. அனைவரையும் கை பிடிச்சு உயர கூட்டிட்டுப் போவார். ‘ராமம் ராகவம்’ பத்தின் ட்ரெய்லர் பார்க்கும்போது, என் மனதில் அப்பா மின்னல் போல் வந்துட்டுப் போனார். இதுதான் இந்தப் படத்தோட வெற்றி” என்றார்.
இயக்குநர் சுப்ரமணிய சிவா பேசுகையில், “அன்பாலான அனைவர்க்கும் வணக்கம். ராமம் என்றால் புகழ்; ராகவம் என்றால் மகன். தாயாக யார் வேண்டுமானால் வாழ்ந்துடலாம். தாயின் வயிற்றில் பத்து மாதம் இருப்பதால் தாய்மை அனைவரிடமும் இருக்கு. ஒரு மனிதன் தாயாக வாழ்வது இயற்கையான விஷயம். ஆனால் ஒரு மனிதன் தந்தையாக மாறுவதென்பது தவம். 40 வயதில், ஒருவனது முகம் அவனோட தந்தை முகமாக மாறும். சின்ன வயதில் என் முகம் என் அம்மா அமுதவல்லியின் முகமாக இருந்தது. நாற்பதைத் தாண்டியதும், என் அப்பா வடிவேலுவின் முகமாக மாறிவிட்டது. பெண்மையும் அன்பும் சேரும் போது தந்தை உருவாகிறான். தந்தை மட்டுமே மகனிடம் தோற்க ஆசைப்படுவான். வேறெந்த உறவும் யாருடனும் தோற்க ஆசைப்படுவதில்லை. ராமாயணத்தில் தசரதனும் கஷ்டப்படுறான், மகாபாரதத்தில் கெட்ட பிள்ளை பெற்ற திருதுராஷ்ட்ரனும் கஷ்டப்படுகின்றான். பெரிய வெற்றி பெற்ற தந்தையின் மகன், தந்தையை வெல்ல முடியாமல் வாழ்நாளெல்லாம் கஷ்டப்படுவான். அவன் எப்படி வெற்றி பெறலாம் என்றால் நல்ல பெயர் எடுத்து ஜெயிக்கலாம்.

காந்தியை சுயசரிதையை எழுதச் சொல்றாங்க. ‘சுயசரிதை என்றால் தன் புகழைப் பாடுவது’ன்னு முன்னுரையில் எழுதுறார். ‘அது எனக்குக் கூச்சமா இருக்கு’ என்று சொல்லிவிட்டு, ‘நான் சத்தியத்தை எழுதுகிறேன்’ எனச் சொல்லியிருப்பார். காந்திக்கு 14 வயசு இருக்கும். பீடி பிடிப்பார், புலால் சாப்பிடுவார், திருடுவார். படுக்கையில் இருக்கும் அவர் அப்பாவிற்குக் கால் அமுக்கிக் கொண்டே, துளசிதாஸின் ராமாயணத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ‘சிறந்த மகனான ராமன் பற்றியக் கதையைக் கேட்கிறோம். தான் நிறைய செய்கிறோம்’ என காந்திக்குக் குற்றவுணர்வு எழுகிறது. நேராகத் தந்தையிடம் பேச பயம். அதனால் வீட்ல இருந்து கொண்டே தந்தைக்குக் கடிதம் எழுதுறார். ‘ராமாயணம் மிகச் சிறந்த மகனைப் பற்றிய கதையா இருக்கு. ஆனா நான் நிறைய தவறு பண்றேன்’ என எழுதி போஸ்ட் பண்ணுகிறார். காந்தியின் அப்பாக்குக் கடிதம் வருது. காந்தியின் எதிரிலேயே அவரது அப்பா அந்தக் கடிதத்தைப் படிப்பார். காந்தி மூலையில நிப்பாரு. ‘அப்பா அடிப்பார்’ என காந்தி நினைக்கிறார். ஆனா காந்தியின் அப்பா அழுதுட்டே அந்த லெட்டரைப் படிப்பார். அதைப் பார்த்து காந்தியும் அழுகிறார். காந்தியை அவர் அப்பா எதுவும் கேட்காமல், அழுதுட்டே, ‘நீ போ’ என்கிறார். ‘அஹிம்சை தான் சிறந்த ஆயுதம் என நான் கண்டுபிடிச்ச இடம் இதுதான்’ என்கிறார் காந்தி.
தந்தையின் கண்ணீர் என்பது சாதாரண விஷயமில்லை. கண்ணீர் அமிர்தம் போன்றது. ஒரு ஏழைக்காகக் கண்ணீர் விட்டால் நீங்க கடவுள் ஆகிடுறீங்க. கஷ்டப்படும் மனிதனுக்காகக் குரல் கொடுத்தால் பாதி கடவுள். சத்தமிடப் பயந்து, மனதால் அங்கே நல்லது நடக்கணும் என நினைத்தால் கால் கடவுள். இறங்கித் தடுத்துட்டா முழுக் கடவுள். தந்தையின் மனம் என்பது கடவுளின் மனது. கடவுள் மாதிரி ஆகணும்ன்னா நீங்க தந்தை ஆகணும். புது இயக்குநர் தன்ராஜ் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
அறிமுக இயக்குநர் தனராஜ் பேசுகையில், “கனி அண்ணாக்கு ரொம்ப நன்றி. எதற்கு நன்றி என்றால், என் முதற்படத்துக்கு தோள் மீது கை போட்டு உதவியதற்கு. அந்தக் கை இதுவரை எனக்குத் துணையாக இருக்கு. அப்பாவாக 21 படங்கள் சமுத்திரக்கனி நடித்திருக்கிறாராம். படத்தின் தேதி 21 ஆகக் கிடைச்சிருக்கு. இந்தப் படம் பார்த்தால், ‘ஒரு புது இயக்குநர் நல்லா படம் பண்ணான்’னு பெயர் வரும். நான் மகிழ்ச்சியா இருக்கேன். தசரதன் சொன்னதுக்காக ராமன் வனத்துக்குப் போனார். அது ராமாயணம். ராமுடு சொல்றதுக்காக அப்பா எங்க போனார் என்பதுதான் ‘ராமம் ராகவம்’. எனக்கு அப்பா இல்லை. இப்போ சமுத்திரக்கனி அப்பா இருக்காங்க. எனக்கு இந்தப் படம் குடும்பத்தைக் கொடுத்துச்சு. எனக்கு அம்மாவும் இல்லை. இப்போ இருக்காங்க. எந்த வீட்டிலும் ராகவன் போல் ஒரு மகன் இருக்கக் கூடாது. அதுதான் இந்தப் படம்” என்றார்.
நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பேசுகையில், “தன்ராஜ் போகிற போக்கில் ஒன்றரை நிமிஷத்துல கதை சொன்னான். கேரவன்ல இருந்து இறங்கி ஷாட்க்குப் போற கேப்பில், கதையைச் சொன்னான். ‘நிமிர்ந்து நில்’ தெலுங்கு ஷூட்டிங்கில் எல்லா வேலையும் செய்வான். அப்போ அவன் மீது தனிக் கவனம் வந்தது. ‘ஒரு கதை கேட்டேன். நீ நடிச்சா நல்லாயிருக்கும்’ என விமானம் கதையைக் கேட்க வச்சது அவன்தான். விமானம் இயக்குநரின் கதை தான் ராமம் ராகவம். இவன் கேட்டு வாங்கியிருக்கான். கதையைக் கேட்டதும், ‘அப்பா கேரக்டரா சரி பண்ணிடுவோம் போடா’ என்றேன். ‘அண்ண!!’ என்றான். ‘நீ சொல்ல வர்றது முக்கியமான விஷயம். சமூகத்துக்குத் தேவையான விஷயம். தமிழ்நாட்டுல கூட இப்படி 15 கேஸ் நடந்திருக்கு. வெளில இருந்து பார்த்தா அப்பா-மகன் கதையா தெரியும். ஆனா உள்ளுக்குள்ள வச்சிருக்கிறது ரொம்ப ஸ்ட்ராங்கான விஷயம். இந்தப் படம் பார்த்து, ஒரே ஒரு பையன் திருந்திட்டா போதும், இந்தப் படம் மாபெரும் வெற்றி. நல்ல படைப்பை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. பணத்தை விட, எத்தனை பேரை மனசு கொள்ள அடிக்குதுங்கிறதுதான் ஒரு படைப்புக்கு முக்கியம். ராமம் ராகவம் அப்படிப்பட்ட படம்” என்றார்.