
சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர்கள் காளி வெங்கட் – ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’!
சாதாரண ஆண், பெண்ணின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான சாரத்தை படம் பிடிக்கும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களை தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது. இந்த வரிசையில், சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கிய ’தோனிமா’ திரைப்படமும் இணைந்துள்ளது. நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை இந்தப் படம் திரையில் காட்ட இருக்கிறது. தற்போது இயக்குநர் பாலாவின் ’வணங்கான்’ படத்தில் நடித்து வரும் நடிகை ரோஷ்னி பிரகாஷ், இந்தப் படத்தில் தனது குடும்பத்தை விடாமுயற்சியுடன் போராடி முன்னெடுத்து செல்லும் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக வரும் கோடி கதாபாத்திரம் குடும்பத்தின் மீது பொறுப்பற்ற ஒருவர். இதில் நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார். இந்த தம்பதியின் மகன் கடுமையான உடல்நலப் பிரச்சினையை எதிர்கொள்வதால், குடும்பம் கடினமான தடைகளை எதிர்கொள்கிறது. இந்த சவால்களை கடப்பதற்கான அவர்களின் பயணம்தான் கதையின் மையம். இது நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து, பார்வையாளர்களைக் கதையுடன் ஒன்ற வைக்கும்.

காளி வெங்கட் மற்றும் ரோஷ்னி பிரகாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் விஷவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் சர்மா, பி.எல்.தேனப்பன், கல்கி ராஜன், ’ஆடுகளம்’ ராஜாமணி, ’சுப்ரமணியபுரம்’ விசித்திரன், ‘சிகை’ படத்தின் சசி, மொக்லி கே மோகன், பொன்னேரி சுஜாதா, மாயா முனீஸ்வரன் மற்றும் கார்த்திக் முனீஸ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தோனிமா’ படத்தை ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கியுள்ளார். பாக்யராஜ் மற்றும் சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இஜே ஜான்சன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முழு வெளியீட்டு உரிமையையும் எஸ்பிஆர் ஸ்டுடியோஸ் எஸ்பி ராஜா சேதுபதி கைப்பற்றியுள்ளார்.