ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவக்கம் !!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்து வரும் நிறுவனம் ரோமியோ பிக்சர்ஸ். இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார். டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து நடிகராகவும் வலம் வரும் சதீஷ் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற டாடா படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் இளம் நாயகன் கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்த கூட்டணியில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலமான இசையமைப்பாளர் அனிருத் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


இளைஞர்களைக் கவரும் வகையில் இன்றைய தலைமுறையின் கதையைச் சொல்லும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கி சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார், எடிட்டராக RC பிரனவ் பணியாற்ற, சூர்யா ராஜீவன் கலை இயக்கம் செய்கிறார்.