‘முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!!

Share the post

‘முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவரான Dr.K.வீரபாபு அவர்கள் சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் சார்பில் எழுதி,இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம் தான் ‘முடக்கறுத்தான்’.
இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் Dr.K.வீரபாபு,மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் Dr.K.வீரபாபு, தமிழருவி மணியன், இயக்குனர் தங்கர் பச்சான், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் திரைப்படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் முதலாவதாக பேசிய வீரபாபு, தனது படத்தின் மூலம் சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்துகளையும் கோரிக்கைகளையும் அரசாங்கத்திற்கும் வைத்துள்ளதாக கூறினார். அவையனைத்தும் குழந்தைகள் சார்ந்த வேண்டுகோளாகவே இருக்கும் என்றும் படத்தின் கருவாக குழந்தைகளை கடத்தி அவர்களை வைத்து சாலைகளில் பிச்சை எடுக்கும் கும்பலை அழித்தொழிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து படத்தை தயாரித்துள்ளதாகவும் கூறினார். அடுத்த கோவிட்-19(COVID19) பெருந்தொற்று ஏற்படுவதற்குள் அதை சந்திப்பதற்கு சித்த மருத்துவ முறையிலும் நோயாளிகளுக்கான வசதிகள் அடிப்படையிலும் தயாராக இருக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்

சுரேஷ் காமாட்சி பேசும்போது Dr.K.வீரபாபு அவர்கள் எழுதி,இயக்கி,தயாரித்து நடிக்க போவதாக கூறியதை கேட்டு அவரது தன்னம்பிக்கையை பாராட்டியதாகவும்,அவரது சமூகத்தின் மீதான அக்கறை அவரின் மீதான மதிப்பை அதிகப்படுத்துவதாகவும் கூறினார்.

இயக்குனர்,நடிகர் சமுத்திரக்கனி அவர்கள் பேசும்போது,”தன்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்லத் துணிந்த சமூகக் கருத்து மிக முக்கியமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீதான கவனத்தை செலுத்தாமல் பணம் ஈட்டுவதில் குறியாக இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருந்து விடுகின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகளை இந்த படம் விவரிக்கிறது. கரோனா பெருந்தொற்றில் வீரபாபு பெருந்தொண்டாற்றினார்.தெலுங்கு படமொன்றின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் நிலக்கரி உடல் முழுவதும் இருக்குமாறு நடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையை வீரபாபு தீர்த்து வைத்தார்”, என்றும் கூறினார்.

தங்கர் பச்சான் பேசும்போது Dr.K.வீரபாபு தனது சித்த மருத்துவத்தின் மூலம் பலருக்கு சேவையாற்றிப்பதாகவும் அவரின் இந்த படத்தின் மூலம் சிறந்த கருத்தை முன் வைத்திருப்பதாகவும் அவரைப் போன்றவர்கள் தமிழ் மண்ணுக்கு கிடைத்த கொடை என்றும், தமிழ் மக்கள் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், இந்த படத்தை தமிழ் மக்கள் வெற்றியடைய செய்ய வேண்டும் என்றும் வாழ்த்தி பேசினார்.

படத்தின் கதாநாயகி மஹானா பேசும்போது,” வீரபாபு அவர்கள் ‘ஒன் மேன் ஆர்மி’ போல நடிப்பு,தயாரிப்பு,இயக்கம் என படத்தின் அனைத்து துறைகளிலும் மிகவும் சிரத்தையுடன் பணியாற்றினார். இந்த படம் பெண்கள் மற்றும் குழந்தை கடத்தலை பற்றி பேசும் படம். படப்பிடிப்பின் போதும் கூட மூலிகை உணவுகளை கொடுத்து எங்களை சிறப்பாக கவனித்து கொண்டார்.மயில்சாமி,சாம்ஸ், ‘காதல்’சுகுமார்,அம்பானி சங்கர் போன்றோரது நகைச்சுவை நன்றாக வந்திருக்கிறது”,என்றார்.

விழா நிறைவாக படக்குழுவை வாழ்த்திப் பேசிய தமிழறிஞரும் அரசியல்வாதியுமான தமிழருவி மணியன்,” நான் வீரபாபுவிற்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். கரோனா பெருதொற்றில் பாதிக்கப் பட்டிருந்த போது அவர் அளித்த சிகிச்சையால் தான் நான் இப்போது உயிருடன் உள்ளேன்.ஆங்கில மருத்துவத்தால் நான் நிறைய இன்னல்களை சந்தித்தேன்.அதனால் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்”, என்று கேட்டு கொண்டார்.

விழா நிறைவாக படக்குழுவினர் அனைவருக்கும் மூலிகைகள் நிறைந்த பைகள் வழங்கப்பட்டன.

‘முடக்கறுத்தான்’ திரைப்படம் ஜனவரி-25 திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *