இசைஞானி இளையராஜா இசையில்
ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” !


தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் கன்னடம் மலையாளம் மராட்டி என பன்மொழி படங்களுக்கு இசையமைத்து, உலகத் திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற சாதனையை தக்க வைத்திருக்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் படம் “நினைவெல்லாம் நீயடா”.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தை, சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க இருக்கிறார். மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் பிக்பாஸ் புகழ் கேப்ரில்லா நடிக்கிறார். மற்றும் மனோபாலா காளி வெங்கட் மயில்சாமி செல்முருகன் மதுமிதா ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தொகுப்பை பிரபாகர் கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை தளபதி தினேஷ் அமைக்கிறார். பாடல்களை பழநிபாரதி சினேகன் ஆகியோர் எழுதுகின்றனர். நடன கட்சிகளை பிருந்தா, தீனா அமைக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகம் இளங்கோ.
மக்கள் தொடர்பு ஏ. ஜான்.




நினைவெல்லாம் நீயடா படத்தின் தொடக்க விழா பூஜை இன்று(9.7.2021) கோடம்பாக்கத்தில் உள்ள இசைஞானி இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் நடைபெற்றது.


இந்த படம் குறித்து டைரக்டர் ஆதிராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
“இந்திய திரையிசையின் அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இந்த வாய்ப்பு என் தவத்திற்கு கிடைத்த வரம். ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் மண்ணுக்குள் போகும் வரை மறக்க முடியாதது… முதல் காதல். அதுவும் மீசை அரும்பும் முன்பே ஆசை அரும்பும் பள்ளிக்கூட காதல் நினைக்கும் போதெல்லாம் சிலிர்க்கவைக்கும்.
முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காதலர்களை பற்றிய இளமை துள்ளும் கதை இது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் உருகாத இதயங்களையும் உருக வைத்துவிடும். காதலைக் கொண்டாடிய அழகி ஆட்டோகிராப் பள்ளிக்கூடம் 96 பட வரிசையில் இந்தப்படமும் ரசிகர்களின் நினைவெல்லாம் நிலைத்து நிற்கும்.

இந்த படத்தின் பாடல் பதிவு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு சென்னை பாண்டிச்சேரி மதுரை கூர்க் இடுக்கி ஆகிய இடங்களில் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது”.
இவ்வாறு அவர் கூறினார்.