“அபி டெய்லர்” என்ற புதிய நெடுந்தொடர் ஒளிபரப்பு ஆரம்பம்!
மீண்டெழும் திறனை வெளிப்படுத்தும் புதிய கதைக்களத்தோடு தனது பிரைம் டைம் நிகழ்ச்சிகளின் தொகுப்பை வலுவாக்கும் கலர்ஸ் தமிழ்!
~மீடியா மொகல் நிறுவனத்தின் தயாரிப்பில் கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் 2021 ஜுலை 19 முதல் தொடங்கும் அபி டெய்லர் திங்கள் முதல் சனி வரை இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது ~
சென்னை, 14 ஜுலை 2021: தமிழ்நாட்டின் மிக இளைய பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற நெடுந்தொடர் புதினம், அபி டெய்லர் – ன் ஒளிபரப்பு தொடங்கப்படவிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது. சிறு நகர பின்புலத்தைக் கொண்ட அபி டெய்லர், அதன் சிறப்பான கதை நிகழ்வுகளின் சித்தரிப்பால் சிறிய அளவில் தொழில்நிறுவனத்தை தொடங்கி நடத்தும் பெண் தொழில்முனைவோர்களின் கதையையும், போராட்டங்களையும் உயிரோட்டமாக வழங்குகிறது. 2021 ஜுலை 19, திங்கள் முதல் ஆரம்பமாகின்ற இந்த புத்தம் புதிய நெடுந்தொடர், கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் மட்டும் ஒவ்வொரு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஒரு சிறு நகரத்தில் தையற்கலைஞராக (டெய்லர்) வாழ்க்கையை நடத்தும் துடிப்பான, இளம் பெண் அபிராமியின் (ரேஷ்மா முரளிதரனின் நடிப்பில்) கதையை சொல்கிறது அபி டெய்லர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை சுந்தரமூர்த்தி (பிரபல நடிகர் / காமெடியன் படவா கோபி நடிப்பில்) மற்றும் கூடப்பிறந்த தங்கை ஆனந்தி (நடிகை ஜெயஸ்ரீ – ன் நடிப்பில்) ஆகியோரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை தன்மேல் கொண்டிருக்கின்ற அபியின் வாழ்க்கை, அவளது சிறிய கடையை சிறப்பாக நடத்தி முன்னேற்றம் காணுமாறு செய்வது மீதே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான அசோக் (மதன் பாண்டியன் நடிப்பில்), ஒரு தொழிலகத்தை இந்நகரில் நிறுவி, செயல்படத் தொடங்கிய சில காலத்திற்குள்ளேயே அபியுடன் நேருக்கு நேர் மோதலில் ஈடுபடுகிறார். அபி மற்றும் அசோக் இருவருக்கும் இடையே நிகழும் சுவாரஸ்யமான மோதலும், காதலும் இக்கதைக்களத்தை அதிக ரசனைக்குரியதாக ஆக்குகிறது.
இப்புதிய தொடர் தொடங்கப்படுவது குறித்துப் பேசிய கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன், “பெண்கள் சித்தரிக்கப்படும் வழிமுறையின் போக்குகளையே மாற்றுவதற்கு எமது அலைவரிசையின் நெடுந்தொடர் புதினங்கள் வழிவகுத்திருக்கின்றன. மனதை தொடுகின்ற நிகழ்வுகளோடு நிஜமான, யதார்த்தமான, அழுத்தம் திருத்தமான கதைகளை இவற்றின் மூலம் நாங்கள் உயிர்ப்புள்ளதாக எப்போதும் வழங்கி வந்திருக்கிறோம். எங்களது வாக்குறுதியைப் பின்பற்றும் வகையில், தடைகளைத் தகர்த்தெறிந்து, புதிய அளவுகோல்களை நிறுவுகின்ற மற்றுமொரு அற்புதமான நெடுந்தொடர் புதினத்தை இப்போது நாங்கள் வழங்குகிறோம். அனைத்து வீடுகளிலும் பேசப்படும் பெயராக அபி உருவெடுப்பாள் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். உலகமெங்கும் தமிழ் பேசும் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை இந்நிகழ்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை,” என்று கூறினார்.
இத்தொடரின் இயக்குனர் பஷீர் மேலும் கூறியதாவது: “அபி டெய்லர் என்பது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகும். முன்னணி அலைவரிசையான கலர்ஸ் தமிழின் ஒத்துழைப்போடு இதை ரசிகர்களுக்குப் படைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அலைவரிசை, தொடங்கப்பட்டதிலிருந்தே புத்துணர்வூட்டுகின்ற யதார்த்தமான கண்ணோட்டத்தை வழங்கியதன் மூலம் பெண்களை மையமாகக் கொண்ட கதைகளின் சித்தரிப்பையே மாற்றியிருக்கிறது. தைரியத்துடனும், திடமனதுடனும் ஒரு கார்ப்பரேட் நிறுவன பெருமுதலாளியை துணிவுடன் எதிர்கொள்கின்ற அபி என்ற ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தில் பார்வையாளர்களும் இணைவது எனக்கு உற்சாகத்தை தருகிறது. அபியும் மற்றும் அவளது கதையும் பல இளம் பெண் தொழில்முனைவோர்களுக்கு உத்வேகமளிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த கதாபாத்திரத்தோடு ஒரு சகோதரிபோல் இணைகின்ற உணர்வு அவர்களுக்கு நிச்சயம் ஏற்படும் என்றும் நான் கருதுகிறேன்.”
2021 ஜுலை 19 திங்கள் அன்று ஆரம்பமாகின்ற அபி டெய்லர் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க, ஒவ்வொரு திங்கள் முதல், சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறவாதீர்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது.
கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். “இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும். தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழின கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை இச்சேனலில் ஒளிபரப்பாகி பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும். டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.
வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.