ஜெ.துரை
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரை விமர்சனம்
UV கிரியேஷன்ஸ் – வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில்
மகேஷ் பாபு இயக்கி அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளி வந்த திரைப்படம் “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி”
இத் திரைப்படத்தில் , நவீன் பாலிஷெட்டி, துளசி, முரளி சர்மா
மற்றும் பலர் நடித்துள்ளனர்
அப்பா – அம்மா பிரிவால் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் அனுஷ்கா,அம்மா இறந்த பிறகு தனது அம்மாவுக்கு தான் எப்படி துணையாக இருந்தேனோ அதுபோல் தனக்கும் ஒரு குழந்தை துணையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதன்படி, திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் அனுஷ்கா, செயற்கை கருத்தரிப்பு மையத்தை அனுகுகிறார்.
ஆனால், அங்கிருக்கும் விந்து கொடையாளிகள் மூலம் குழந்தை உருவாவதை விரும்பாதவர், தன் குழந்தைக்கு ஏற்ற ஒரு விந்து கொடையாளியை தானே தேடி பிடித்து அழைத்து வருவதாக சொல்கிறார்.
அதன்படி, விந்து கொடையாளியை தேடும் முயற்சியில் ஈடுபடும் அனுஷ்கா, எதிர்பாரதாவிதமாக நாயகன் நவீன் பொலிஷெட்டியை சந்திக்க நேருகிறது.
ஸ்டண்டப் காமெடி மீது ஆர்வமுள்ள நவீன் பொலிஷெட்டியின் அனுகுமுறை அனுஷ்காவுக்கு பிடித்து போக, அவர் தான் தனது குழந்தைக்கு சரியான நபராக இருப்பார், என்று முடிவு செய்கிறார். அவரிடம் நேரடியாக கேட்காமல், ஸ்டண்டப் காமெடி நிகழ்ச்சிக்காக அனுகுவது போல் அவருடன் பழகுகிறார்.
ஆனால், நவீன் பொலிஷெட்டிக்கு அனுஷ்கா மீது காதல் ஏற்பட, அவர் தனது காதலை சொல்ல முயற்சிக்கும் போது, அனுஷ்கா தன் மனதில் இருப்பதை அவரிடம் சொல்லி விடுகிறார். அதை கேட்ட நவீன் சம்மதித்தாரா?, இல்லையா?, அவருடைய காதல் என்னவானது?, அனுஷ்கா நினைத்தது போல் நடந்ததா? இல்லையா?, என்பது தான் படத்தின் கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நாயகியாக நடித்திருக்கிறார். ஆனால், டூயட், ரொமான்ஸ் என்று இல்லாமல் கதாநாயகனின் கைவிரல் கூட தன் மீது படாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கும் அனுஷ்கா, தன் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியிருக்கிறார். அழுத்தமான வேடம என்பதால் படம் முழுவதும் அவர் அடக்கி வாசித்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் நவீன் பொலிஷெட்டி, துடி துடிப்பான இளைஞராக இருக்கிறார்.
அனுஷ்கா வயதில் தன்னை விட மூத்தவர் என்பதால், அவர் மீது ஏற்பட்ட காதலை தனது பெற்றோரிடம் வெளிப்படுத்தும் விதம் ரசிக்க வைக்கிறது. திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அனுஷ்காவின் முடிவை வேறு மாதிரியாக புரிந்துக்கொண்டு ரெடியாகும் காட்சியில் திரையரங்கையே கலகலப்பாக்குகிறார்.
அனுஷ்கா – நவீன் பொலிஷெட்டி இருவரை சுற்றி கதை நகர்ந்தாலும், துளசி, முரளி சர்மா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறது. லண்டன் காட்சிகள் மட்டும் இன்றி இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளும் கொள்ளை அழகு.
ரதனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவாக இருந்தாலும், கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியமானது, அதே சமயம் அந்த துணை கணவராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, என்ற கருத்தை வலியுறுத்தம் கதையை இயக்குநர் மகேஷ் பாபு.பி, காமெடி ஜானரில் இயக்கியிருக்கிறார்.
இந்தியாவில் வாழும் பெண்கள் இதுபோல் சிந்திப்பார்களா? என்ற கேள்வி எழக்கூடாது என்பதால், அனுஷ்காவை லண்டனில் வசிப்பவராக காட்டியிருக்கும் இயக்குநர், பெண்கள் என்றாலே திருமண உறவை சார்ந்து தான் இருக்க வேண்டுமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். அதே சமயம், திருமண உறவை வெறுக்கு பெண்கள் தங்களுக்கு துணையாக கணவர் இன்றி குழந்தை பெற்றுக்கொள்ளும் புரட்சிகரமான விசயத்தை சொல்லும் இயக்குநர்,
அந்த குழந்தை தனது அப்பா எங்கே? என்று கேட்டால் அதற்கு அவர்கள் என்ன சொல்ல வேண்டும், என்பதை எந்த இடத்திலும் சொல்ல வில்லை. இறுதியில் வழக்கமான பாதையில் பயணித்து, இது புரட்சிகரமான விசயம் தான் ஆனால், நம்ம ஊருக்கு ஒத்து வராது என்ற ரீதியில் கதையை நகர்த்தியிருக்கிறார்.
சுவாரஸ்யமான கரு தான் என்றாலும் முதல் பாதி படம் ஆமை போல் நகர்வதால் சற்று போரடிப்பது போல் இருக்கிறது.
ஆனால், இரண்டாம் பாதியை இளைஞர்களை கவரக்கூடிய காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் கலகலப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் மகேஷ் பாபு.பி, இறுதியில் வழக்கமான காதல் கதையாக படத்தை முடித்திருக்கிறார்.
மொத்தத்தில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி மாறு பட்ட காதல் கதை