உலகின் மிகவும் விரும்பப்படும் சமையல் நிகழ்ச்சியான, மாஸ்டர்செஃப் விரைவில் தொலைக்காட்சி திரைகளில் தமிழில் வெளிவரவிருக்கிறது – IFA அறிவிப்பு!
தொகுப்பாளராக விஜய் சேதுபதியின் புதிய, அருமையான தோற்றத்தைக் காணலாம்
~ ஆர்வமுள்ள வீட்டு சமையற்கலைஞர்களின் பயணத்தை சித்தரிக்கும் இந்நிகழ்ச்சியை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது ~
சென்னை, 12 ஜுலை 2021: உணவு ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில், இனவேட்டிவ் ஃபிலிம் அகாடமி (IFA) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர்செஃப் என்ற தமிழ் சமையல் நிகழ்ச்சியின் தொடக்க தேதியை இன்று அறிவித்தது. சர்வதேச அளவில் மதிக்கப்படும் நிகழ்ச்சியை ஒரு பிராந்திய வடிவத்தில் தொலைக்காட்சி திரைகளில் கொண்டு வரும் IFA, எண்டமோல்ஷைன் உடன் இணைந்து ஆகஸ்ட், 2021 முதல் தொடங்கி வீட்டு (உள்ளூர்) சமையற்கலைஞர்களின் பரபரப்பூட்டுகின்ற பயணத்தை பார்வையாளர்களின் ரசனைக்காக வழங்க தயார் நிலையில் உள்ளது. இந்த துவக்கத்திற்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும் வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கின்ற பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் ஆறு அவதாரங்களையும் IFA வெளியிட்டிருக்கிறது.
இனவேட்டிங் ஃபிலிம் அகாடமி நிறுவனர் திரு. சரவண பிரசாத் அவர்கள் கூறுகையில், “சர்வதேச அளவில் பெயர்பெற்ற சமையல் நிகழ்ச்சியை பிராந்திய, வட்டார வடிவங்களில் அளிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். மாஸ்டர்செஃப் – ன் அற்புதமான சர்வதேச வடிவத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பிராந்திய, வட்டார பார்வையாளர்களின் விருப்பத்தேர்வுகளுக்கு ஏற்றவாறு இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு அம்சமும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்ற வகையில் நடிகர் விஜய் சேதுபதி, பார்வையாளர்களை இந்நிகழ்ச்சியோடு தங்களை முற்றிலுமாக ஈடுபடுத்திக்கொள்ளும் அம்சத்தை மேலும் உயர்த்தியுள்ளார். இந்நிகழ்ச்சியை, அழகாக ஒன்றிணைத்து, தொகுத்து வழங்கும் அவரின் தனித்துவமான ஸ்டைல் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி. இந்நிகழ்ச்சியை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் இது உலகெங்கிலும் உள்ள தமிழ் பார்வையாளர்களிடையே ஒரு அதிரடி வெற்றி நிகழ்ச்சியாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்றார்.
மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான விஜய் சேதுபதி கூறுகையில், “மாஸ்டர்செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான இவ்வாய்ப்பு, என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான செயல்திட்டங்களில் ஒன்றாகும். இந்நிகழ்ச்சியின் பிரமாண்டத்திற்கு ஈடுஇணையில்லை. மேலும் இது தமிழ் GEC நிகழ்ச்சியில் குறிப்பாக, சமையல் நிகழ்ச்சிகளுக்கு ஒரு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் என்பது நிச்சயம். எங்கள் சமையலறைகளிருந்து பல அம்சங்களை IFA உண்மையில் உயிரோட்டமுள்ளதாக மாற்றியிருக்கிறது மற்றும் மாஸ்டர்செஃப் கிச்சன், நிகழ்ச்சிக்கு துடிப்பான உத்வேகத்தை தந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக வழங்குவதற்காக, இதில் தொடர்புடைய நாங்கள் அனைவருமே எங்கள் மனப்பூர்வமான உழைப்பை கொடுத்துள்ளோம். விரைவில், ஆகஸ்ட் மாதத்தில் சின்னத்திரையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளை நான் வெகு ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருக்கிறேன்,”
மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சி, எண்டமோல்ஷைன் உடன் இணைந்து இனவேட்டிங் ஃபிலிம் அகாடமியால் தொலைக்காட்சி திரைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 2021 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இரவு 9:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது, இது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பப்படும். பன்முகத் திறன் வாய்ந்த நடிகர் விஜய் சேதுபதி அவர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்நிகழ்ச்சி வீட்டு சமையற்கலைஞர்களின் மனநிலையையும், தைரியத்தையும் அவர்களது சமையல் திறனையும் உலகறிய வெளிப்படுத்துவதாக இருக்கும். “தமிழ்நாட்டின் மாஸ்டர்செஃப்” என்ற கௌரவம் மிக்க பட்டத்தை வெல்வதற்கு சமையலறையில் தங்களது திறன்களை வெளிப்படுத்தி, கடும் மோதலில் ஈடுபட நம்ம ஊர் வீட்டு சமையற்கலைஞர்கள் தயாராக உள்ளனர்.