மணிகண்டன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
வசனகர்த்தாவும், நடிகருமான மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இவர்களுடன் கண்ணா ரவி, ‘பருத்திவீரன்’ சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துவரும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி வரும் இந்த திரைப்படத்ததை ‘குட் நைட்’ எனும் வெற்றி படத்தை தயாரித்த எம். ஆர். பி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நஸ்ரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தொடங்கி வைத்த இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து 24 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் கோவாவிற்கு அருகே உள்ள கோகர்ணா எனும் இடத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அங்கு நடைபெறும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் வரை நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதையடுத்து படக்குழுவினர் அதனை பிரத்தியேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.