
‘வட்டார வழக்கு’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடிப்பில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் ‘வட்டார வழக்கு’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.


சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் பேசியதாவது, “‘மாமன்னன்’ படத்தில் அமைந்தது போல ஒரு கதாபாத்திரம் தான் ரவீனாவுக்கு இந்தப் படத்தில். மிக நேர்த்தியாக நடித்துள்ளார். கமர்ஷியல் படங்கள் என்பதை விட உண்மைக்கு நெருக்கமான படங்கள் விநியோகிப்பதில் தான் எனக்கு ஆத்மார்த்த திருப்தி. உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்” என்றார்.


நடிகை ரவீனா ரவி, “2019-ல் நடித்தப் படம் இது. ராமச்சந்திரன் சார் நினைத்தது போல படம் வந்திருக்கிறது என நம்புகிறேன். நல்ல கதை இது. வருகிற 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மீடியா நல்ல விமர்சனம் கொடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படப்பிடிப்பு நடத்திய ஊரில் உள்ள கிராமத்து மக்களும் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தனர். எல்லோரும் ரிஸ்க் எடுத்து தான் நடித்திருக்கிறோம். திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன், ” இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போகும்போது எல்லாம் எங்களை உற்சாகம் குறையாமல் படக்குழுவினர் பார்த்துக் கொண்டனர். இவர்கள் எண்பது சதவீதம் பேர் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்துள்ளனர். சிறு சிறு விஷயங்களுக்கு கூட எங்களை எதிர்பார்க்காமல் அவர்களது சொந்த காசை செலவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். கேபிள் சங்கர் சார், சித்ரா லட்சுமணன் சார் எனப் பலரும் எங்களுக்கு வழிகாட்டி, பொருளாதார உதவி வரை செய்தனர். பின்னணி இசையை நம்பி இருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு ராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். படத்தைப் பார்த்துவிட்டு அவர் சம்மதம் சொன்னார். ஒரு சின்ன படத்திற்கான அடிப்படைத் தேவைக்கான செலவு மட்டும் தான் ராஜா சார் கேட்டிருந்தார். ஆனால், அவர் கேட்டதில் 60% தான் என்னால் கொடுக்க முடிந்தது. 40% பணம் என்னிடம் இல்லை. அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாது இசையை செய்து தருவதாக சொன்னார். அவர் காலில் விழுந்து விட்டேன். 12 நாட்கள் ஒரு தியானம் போல, இதன் பின்னணி இசையை செய்து கொடுத்தார். நல்ல படம் என்பதால், இதற்குப் பலரும் எந்தவிதமான எதிர்பார்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தனர். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் சார் எப்பொழுதும் நல்ல படம்தான் எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். பத்திரிக்கையாளர்களின் உதவியோடு அவரை அணுகினேன். அவருக்கும் படம் பிடித்து சம்மதம் சொன்னார். சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவிமர் அனைவருக்கும் நன்றி. பொருளாதாரத்தில் சில குறை நிறைகளோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்.

அதை மன்னித்து உங்கள் ஆதரவைக் கொடுங்கள். 29 ஆம் தேதி ‘வட்டார வழக்கு’ வெளியாகிறது இந்த படத்திற்கு இரண்டு எஜமானர்கள். ஒன்று பார்வையாளர்கள், இன்னொன்று ஊடகங்கள். நீங்கள் தரும் ஆதரவினால் தான் ‘வட்டார் வழக்கு’ மைலேஜ் ஏற்றி அடுத்தடுத்து நகரும்” என்றார்.

நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், “இந்தப் படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை இஷ்டப்பட்டு தான் வேலை செய்து இருக்கிறோம். இசைஞானி அவர் பெயரை சொல்வதற்கு கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது. அவரது இசையில் நடித்துள்ளது எனக்குப் பெருமையாக உள்ளது. இயக்குநர், ரவீனா எனப் படக்குழுவினர் அனைவருமே அவரவர் சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர். இப்போது எல்லாம் சின்ன படங்களை வெளியிடுவது கஷ்டம், தியேட்டர் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். நீங்கள் ஒரு தரமான படத்தை எடுத்தால் அதை வெளியிடுவதற்கு சக்திவேல் சார் தயாராக இருக்கிறார். நீங்கள் உழைப்பையும், படத்தையும் நேர்மையாக கொடுத்தால் உங்களுக்கான அங்கீகாரமும் அடையாளமும் விருதுகளும் தானாக வந்து சேரும் என்பது நிச்சயம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.