ஜெய்பீம்’ போல கெவி’ படமும் முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும்” ; இயக்குநர் அமீர் எதிர்பார்ப்பு !!

Share the post

’ஜெய்பீம்’ போல கெவி’ படமும் முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும்” ; இயக்குநர் அமீர் எதிர்பார்ப்பு

“விருதுக்கான படங்களை திரையரங்குகளுக்கு கொண்டுவந்து போட்டி போடக்கூடாது” ; வெளிப்படையாகப் பேசி அதிர வைத்த இயக்குநர் அமீர்

”விருதுக்கான படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதே ஒரு வன்முறை தான்” ; கெவி விழாவில் யதார்த்தம் உடைத்த இயக்குநர் அமீர்

”கிராமங்களில் சாலை வசதி இல்லை.. ஆனால் கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு முன்னேறி இருக்கிறோம்” ‘ இயக்குநர் அமீர் வேதனை

“கெவி எங்களுக்கு கிடைத்த ஒரு வரம்” ; இயக்குநர் தமிழ் தயாளன் நெகிழ்ச்சி

ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன், உமர் பரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலசுப்பிரமணியன் ஜி இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். ஒரு சிறப்பு பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி, அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளது..

‘கெவி’ படத்தை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும் விழா, படம் குறித்த அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அமீர் கலந்துகொண்டார்.

இந்த படத்தை மக்களிடம் அறிமுகம் செய்யும் விதமாக மலைப்பகுதிகளில் மனிதர்களை தூக்கி சுமந்து செல்ல பயன்படுத்தப்படும் ‘டோலி’ என்கிற சாதனத்தை வெளியிட்டு இந்த அறிமுக விழா நடைபெற்றது

படத்தின் இயக்குநர் தமிழ் தயாளன் பேசும்போது, “நான்கு பேருடன் நான்கு வருடங்களுக்கு முன் துவங்கிய இந்தப்படம் இன்று 40 பேருடன் முடிந்து இருக்கிறது. இதில் பணியாற்றியவர்கள் யாருமே இந்த இடைப்பட்ட காலத்தில் வேறு எந்த படங்களுக்கும் செல்லவில்லை. இந்த பயணத்தை எளிதாக சொல்லிவிட முடியாது. கெவி எங்களுக்கு கிடைத்த ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த கெவி கிராம மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை உண்மைத்தன்மையாகவும் அழுத்தமாகவும் மக்களுக்கான படமாக முடிந்த அளவிற்கு உருவாக்கியிருக்கிறோம். இந்த ஊர் மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும் மருத்துவ தேவைகளுக்கும் பல மைல் தூரம் செங்குத்தான பாதைகளில் மிகுந்த சிரமத்துடன் பயணித்து நகரத்திற்கு சென்று வருகிறார்கள். மூங்கில்களால் ஆன டோலியில் நோயாளிகளையும் வயதானவர்களையும் சுமந்து கொண்டு செல்லும் மனிதர்களின் தோள்கள் எல்லாம் காப்பு காய்த்து போய் இருக்கிறது.

ஏதோ சில விஷயங்களுக்காக ஒருமுறை வந்து செல்பவர்கள் கூட, இந்த ஊர் மக்கள் எப்படி இத்தனை வருடங்களாக இங்கு இருக்கிறார்கள் என தங்கள் குமுறலை வெளிப்படுத்தி விட்டு செல்கிறார்கள். மரணம் என்பது இயற்கையாக நடந்தால் தவறில்லை. ஆனால் அங்குள்ளவர்கள் மீது நிகழ்த்தப்படுவது வன்முறை. யாரையும் குறை கூறுவதற்காக இதை சொல்லவில்லை. யாருடைய பார்வைக்காவது இது தெரிய வேண்டும். இந்த மக்களின் நிலைமை மாறவேண்டும் என்பதற்காகத்தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் வெளியாகி அவர்களுடைய மொத்த வலியையும் குறைக்கும் விதமாக ஒரு பாதையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தால் அதுவே எங்களது குழுவிற்கு கிடைத்த வெற்றி” என்று கூறினார்.

கதாசிரியர் கிருபாகரன் ஏசய்யா பேசும்போது, “கொடைக்கானலில் இருந்து மலைப்பகுதி வழியாக 10 கிலோ மீட்டர் இறங்கினால் கெவி என்கிற கிராமம் வருகிறது. அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் பெரியகுளம் நகரம் இருக்கிறது. நாங்கள் உருவாக்கிய கதைக்கு அது பொருத்தமாக இருக்கும் என்று அங்கே சென்றால், அங்கே எங்கள் கதையைப் போலவே நிஜமான சம்பவம் ஒன்று நடந்து இருந்தது, அதன் பிறகு தான் அந்த மனிதர்களின் வாழ்க்கையையும் வலியையும் படமாக்கும் விதமாக கதையை இன்னும் மேம்படுத்தினோம்” என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா பேசும்போது, “எந்த படத்திலும் பணியாற்றாமல் குறும்படங்களில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு மட்டுமே இந்த படத்தை உருவாக்கினோம். இந்த விழாவிற்கு வந்த அமீர் சாருக்கு நன்றி. ஒரு படத்தை உருவாக்கும்போது அதில் சமூக பொறுப்புணர்வும் இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டோம். ஷீலா , விஜய் டிவி ஜாக்குலின் என்ற இரு பெண்களின் மிகப்பெரிய ஆதரவு இருந்ததால் தான் இந்த படத்தை உருவாக்க முடிந்தது. நாங்களாவது குளிருக்கு குல்லா, ஸ்வெட்டர் என அணிந்து கொண்டோம். ஆனால் அவர்கள் கடும் குளிரில் அதையெல்லாம் பொருட்படுத்தாத நடித்துக் கொடுத்தார்கள். அவர்களுக்கு எப்போதுமே நன்றி கடன் பட்டுள்ளோம்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஜி பேசும்போது, “இந்த படத்தில் மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை ஒரு பாட்டாக சொல்ல வேண்டும் என்பதற்காக கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா இருவரையும் அணுகியபோது அற்புதமாக அந்த பாடலை எழுதி, பாடி கொடுத்தார்கள். அவர்களுடைய ஆதரவினால் தான் எங்களைப் போன்ற சிறிய படக்குழுவினர் முன்னோக்கி செல்ல முடிகிற” என்று கூறினார்.

றெக்க படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான கணேஷ் பேசும்போது, “இந்த படக்குழுவினர் என்னிடம் இந்த கதையை கூறியபோது கதை பிடித்திருந்தாலும் புதியவர்கள் என்பதால் எப்படி இவர்கள் இந்த படத்தை எடுப்பார்கள் என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர்கள் ட்ரெய்லர் போல ஒன்றை படமாக்கி என்னிடம் காட்டியபோது அவர்கள் மீது நம்பிக்கை வந்தது. ஆனால் இந்தப் படத்தை என்னால் தயாரிக்க முடியாமல் போனது. ஆர்ட்அப்ட்ரையாங்கிள் ஃபிலிம் கம்பெனி இப்படத்தை தயாரித்துள்ளது. வாழ்த்துகள் அவர்களுக்கு. படப்பிடிப்பு சமயத்தில் ஒரு முறை அந்த கிராமத்திற்கு சென்று வந்தேன். நீண்ட சிரமத்திற்கு இடையே தான் இந்த படத்தின் படப்பிடிப்பை அங்கே நடத்தி இருக்கிறார்கள். கதாநாயகன் ஆதவன் இந்த படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். என்னையும் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் வற்புறுத்தி நடிக்க வைத்தார்கள். அந்த காட்சிகளை இங்கே உள்ள சில இயக்குநர்களிடம் போட்டு காட்டிய போது அனைவருமே, இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரின் திறமையை பாராட்டினார்கள். அதைப் பார்த்துவிட்டு சிலர் என்னை அவர்களது படங்களில் நடிக்கவும் அழைத்தனர். அந்த அளவிற்கு எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளார் இயக்குநர் தமிழ் தயாளன்” என்றார்

மக்கள் தொடர்பாளரும் நடிகருமான நிகில் முருகன் பேசும்போது, “இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இயக்குநர் அமீரை நேரிலோ, தொலைபேசியிலோ கூட தொடர்பு கொண்டு அழைக்கவில்லை. வாட்ஸ் அப்பில் நாங்கள் அனுப்பிய குரல் செய்தியை பார்த்துவிட்டு இந்த சிறிய படத்திற்கு குரல் கொடுக்க ஓடிவந்துள்ளார். திறமையானவர்களை அனுபவம் இல்லை என காரணம் காட்டி ஒதுக்க கூடாது. என் வாழ்விலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது. ஆனால் என் திறமை மூலமாக முன்னேறினேன். அதேபோல இந்த படத்தின் இயக்குநர் உள்ளிட்ட குழுவினருக்கு அவர்களது திறமையை நம்பி இந்த படத்தின் தயாரிப்பாளர் வாய்ப்பு அளித்துள்ளார். நான்கு வருட கடின உழைப்பு என்று அவர் சொன்னார். அதனால் இந்த படத்தின் வெற்றி தள்ளித்தான் போய் இருக்கிறதே தவிர தவறிப் போகவில்லை. இந்த மண்ணில் எதை புதைத்தாலும் மக்கிப் போய்விடும். ஆனால் விதை மட்டும்தான் முளைத்து மேலே வரும். இந்த படக்குழுவினர் கெவி என்கிற மக்களின் வலியை விதைத்துள்ளீர்கள். நிச்சயமாக அது மலரும்” என்று கூறினார்

விழாவின் இறுதியில் முத்தாய்ப்பாக இயக்குநர் அமீர் பேசும்போது, “இந்த விழாவிற்கு வந்திருந்த அனைவரும் எனக்கு நன்றி சொன்னார்கள். ஆனால் படத்தின் இயக்குநர் நன்றி சொல்லவில்லை. இதை அவரை குத்திக்காட்டுவதற்காக சொல்லவில்லை. இந்த மேடையிலேயே அவர் என்ன பேசுவது என்று தெரியாமல் திக்கித் திணறி நின்றார். காரணம் அவரது மனம் முழுவதும் இந்த படத்திற்காக அவர் பட்ட சிரமங்களும் அந்த படப்பிடிப்புத் தளத்தில் நடந்த நிகழ்வுகளும் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்திருக்கும். இந்த கிராமத்தில் இருந்து மருத்துவ வசதிகளுக்காக குறிப்பாக பெண்களின் பிரசவத்திற்காக குறித்த நேரத்தில் நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சொல்ல முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். டோலியில் அவர்களை தூக்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் நடந்தே பயணம் செய்ய வேண்டும். இவர்கள் படமாக்கிய அதே ஊரில் சமீபத்தில் கூட இதே போன்று தாமதத்தால் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்தார் என்று செய்தி வெளியானது.

இந்த மாதிரி சாலை வசதி இல்லாத பல மலை கிராமங்கள் இருக்கின்றன. ஆற்றைக் கடப்பதற்காக கயிற்று பாலத்தில் தொங்கிக்கொண்டு அக்கரைக்குச் சென்று படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் இருக்கின்றனர். சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் ஆகியும் நாம் இன்னும் மேன்மை அடையவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்தி தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஃபார்முலா ரேஸ் என்கிற கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு நம் நாடு முன்னேறி இருக்கிறது. அப்படி இருக்கையில் இதுபோன்று மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய சாலை வசதிகளை மேம்படுத்துவது அவசியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இது அடிப்படை தேவை. ஊடகங்கள் இந்த செய்தியை அரசாங்கத்திற்கு கடத்த வேண்டும் என்பதுதான் இந்த படக்குழுவினரின் நோக்கம். அதற்காகத்தான் நானும் ஒரு ஸ்பீக்கர் ஆக வந்து இங்கே நிற்கிறேன்.

இதற்கு முன்னதாக ஜெய் பீம் படம் வெளியானபோது இருளர்களின் பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்து தமிழக அரசு தலையிட்டு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பட்டா வழங்குவது உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தது. அதேபோல கெவி திரைப்படமும் அந்த ஊர் மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் அதற்காக நானும் வேண்டிக்கொள்கிறேன். அந்த வகையில் தமிழக அரசின் கவனத்திற்கு இந்த கெவி படத்தை கொண்டு போக வேண்டியது அவசியமாக இருக்கின்றது என்பதே உண்மை.

படக்குழுவினர் தாங்கள் சிரமப்பட்டோம் என்கிற தகவலை கடத்துவதை விட அந்த சிரமங்களை படத்தின் மூலம் ரசிகர்களுக்கு கடத்துவது தான் படத்திற்கு வெற்றி தரும். காரணம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய வாச்சாத்தி கொடுமையை பற்றி ஒரு திரைப்படம் வெளியானது. ஆனால் அதை முழு நேரம் நம்மால் பார்க்க முடியாது. அதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். திரையரங்குக்கு வந்த பின்பு பேசி பிரயோஜனம் இல்லை. உங்களுடைய படத்தின் முன்னோட்ட காட்சியை எனக்கு அனுப்பி இருந்தீர்கள். அதை பார்த்தபோது என்னுடைய பார்வையில் அதில் தேவை இல்லாமல் ஹீரோவை முன்னிலைப்படுத்துவது போல இரண்டு ஷாட்டுகள் இருந்தன. அதனால் படம் வெளியாவதற்கு முன்பாக இன்னும் சில இயக்குநர்களை அழைத்து அவர்களுக்கு திரையிட்டுக் காட்டி படம் குறித்து சில சீரமைப்பு விஷயங்களை மேற்கொண்டு ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அப்படி செய்தால் மட்டுமே நீங்கள் பட்ட கஷ்டம் மக்களிடம் போய் சேரும்.

சமீபத்தில் வெளியான ‘வாழை’ திரைப்படம் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவிற்கு பக்கத்தில் இருக்கிறது. அதுதான் அந்த படத்தின் வெற்றி. அதேசமயம் பக்கத்தில் இருக்கின்ற ‘கொட்டுக்காளி’ படம் திரைப்பட விழாக்களுக்கான சினிமா. அதனால் அது நல்ல படம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அப்படி திரைப்பட விழாக்களில் விருதுகளை பெறுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு படத்தை திரையரங்குகளில் மற்ற படங்களுடன் கொண்டு வந்து போட்டி போட வைப்பதே ஒரு வன்முறைதான். அது எனக்கு ஏற்புடையது அல்ல. அப்படி செய்யவே கூடாது. விருதுக்கான படங்களை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் படத்தைப் பற்றி கடுமையாக விமர்சிக்கிறார்கள். வெட்டுவேன் குத்துவேன் என்று கூட பேசுகிறார்கள். அப்படி அவர்கள் பேசுவதற்கு காரணம் அவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு உங்கள் படத்தை பார்ப்பது தான். அதனால் அவர்களுக்கு அந்த உரிமை இருப்பதாக நினைக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் கொட்டுக்காளி படத்தை தயாரித்திருந்தால் அதை திரையரங்குகளுக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன். இதை வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன். சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற படங்களுக்கு அந்த கண்ணியத்தை அப்படியே கொடுத்து விட வேண்டும். அந்த படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகராக இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி அதை ஒரு பிரபல ஓடிடி தளத்திற்கு விற்றிருக்கலாம். அதிலேயே போட்ட முதலீட்டை எடுத்துவிட்டு பிரச்சினையை முடித்து இருந்தால் தேவைப்படுபவர்கள் ஓடிடி தளத்தில் அந்த படத்தை பார்த்துக் கொள்வார்கள். கெவி படம் கூட அப்படி எடுக்கப்பட்டிருக்கலாம். நாளை இதை திரையரங்குகளில் கொண்டு வந்து வைத்துவிட்டு ரசிகர்கள் பார்க்கவில்லையே என அவர்களை குறைபட்டுக் கொள்ளக் கூடாது. அதனால் மக்களிடம் சேரும் விதமாக இந்த கெவி படத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

ஒலிம்பிக்கை கூட நம் நாட்டில் நடதத்துவதற்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெளிநாட்டு அதிபர்கள் வரும்போது நம் ஊரில் இருக்கும் குடிசைகளை பச்சை துணி போட்டு மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசியன் கேம்ஸ் நடத்துவதற்காக கிராமங்களை உருவாக்குகிறார்கள். விளையாட்டுக்காக கிராமங்களையே உருவாக்குகிற நாடு உண்மையான சாலை வசதி இல்லாத கிராமத்திற்கு அதை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியமானது. அதைக் கேட்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதை இந்த திரைப்படத்தின் மூலம் நீங்கள் கேட்டிருப்பதாக நான் உணர்கிறேன். இந்தப் இந்த படத்தின் தயாரிப்பாளரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது கூட குறைந்தபட்சம் எப்படியாவது இந்த திரைப்படத்தை அவர் தியேட்டர் வரை கொண்டு வந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் தான். அதை தவறு என்று சொல்ல முடியாது. அதுவும் ஒரு புத்தி சாதுரியம்தான். அதை சரியாக செய்யும் போது அவரும் பயனடைகிறார். நீங்களும் பயனடைகிறீர்கள்..

இந்த படத்தின் சில காட்சிகளை பார்த்தபோது ஏன் என்னிடம் இந்த கதையை எடுத்துக்கொண்டு வராமல் போனார்கள், இதை நாம் பண்ணிக் கொடுத்திருக்கலாமே என்று தான் தோன்றியது. சில ஷாட்டுகளை பார்க்கும்போது படத்தை சரியாக எடுத்து இருக்கிறீர்கள் என தோன்றுகிறது முழுப்படமும் அந்த உணர்வைக் கொடுத்து விட்டால் வெற்றி தான். எப்படி ஜெய் பீம் திரைப்படத்தை தமிழக முதல்வர் பார்த்தாரோ அதேபோல உங்களது படமும் நன்றாக இருந்தால் பத்திரிகையாளர்கள் தங்கள் விமர்சனங்கள் மூலமாக இந்த படத்தை தமிழக முதல்வர் பார்க்க வேண்டும் என கோடிட்டு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம் ஏதாவது மாற்றம் அந்த மக்களுக்கு நிகழும் என்று நானும் காத்திருக்கிறேன்” என்று தனது பேச்சில் ஆதங்கத்தையும் நம்பிக்கையயும் ஒருசேர வெளிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *